
இங்கு ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஆஞ்சநேயரை நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் தற்போது இக்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் சூரிய கிரகணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி வருகிறது. அன்று தான் அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் பிறந்த மூல நட்சத்திரமும் வருகிறது. அதனால் பஞ்சாங்கக் கணக்குப்படி 26-ந் தேதி தான் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டிய நாள் என்றும் சூரிய கிரகணத்தால் ஒரு நாள் முன்பாக ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் காலண்டரில் அடுத்த மாதம் (டிசம்பர்) 25-ந் தேதி அனுமன் ஜெயந்தி என அச்சிடப்பட்டுள்ளது.
இதனால் கோயில் நிர்வாகத்தினர் சூரிய கிரகணத்தை தவிர்த்து, காலண்டரை கணக்கிட்டு, டிசம்பர் 25-ந் தேதியை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்த முறை அனுமன் ஜெயந்தியையொட்டி சூரிய கிரகணம் வருவதால் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:-
டிசம்பர் 25-ந் தேதி நிறைந்த அமாவாசை என்பதால் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அர்ச்சகர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் அன்றைய தினம் நடத்த ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து 25-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.