search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லிங்கம்
    X
    லிங்கம்

    பிரமிக்க வைக்கும் சோடசலிங்கம்

    திருவதிகை கோவிலில் கருவறையில் உள்ள மூலவரை சோடசலிங்கம் என்கிறார்கள். இவரை வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
    திருவதிகை கோவிலில் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு அம்சமும் நம்மை சுண்டி இழுக்கும் எதைப் பார்த்தாலும் நம் முன்னோர்களின் திறமை பளிச்சிடும்.
    குறிப்பாக கருவறை பகுதி பொக்கிஷம் போல உள்ளது. 16 பட்டைகள் தாங்கி சுமார் 7 அடி உயரத்தில் மூலவர் வீராட்டனேசுவரர் உள்ளார். இந்த அமைப்பு காண்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

    கருவறை கட்டப்படும் முன்பே இந்த பிரமாண்ட லிங்கத்தை உள்ளே வைத்திருப்பவர்கள் போல தோன்றுகிறது. இந்த லிங்கத்துக்கு பல சிறப்புகள் உள்ளன.

    16 பட்டைகளுடன் உள்ளதால் இந்த மூலவரை சோடசலிங்கம் என்கிறார்கள். சந்திரனுக்கு 16 கலைகள் உண்டு. அதை இந்த மூலவர் பிரதிபலிப்பதாக சொல்கிறார்கள்.

    அதாவது மூலவர் வீராட்டனேசுவர் சந்திரனுக்குரிய அம்சத்துடன் திகழ்வதாக சொல்கிறார்கள். அதனால் தானோ என்னவோ இத்தலத்தில் சந்திரனுக்கு என்று தனி சன்னதி எதுவும் இல்லை. பொதுவாக சிவாலயங்களில் உட்புற வாசலின் இருபக்கமும் சூரியனும், சந்திரனும் இருப்பார்கள். ஆனால் திருவதிகை தலத்தில் சூரியன் மட்டுமே உள்ளார். சந்திரன் இல்லை. சுவாமியே சந்திர வடிவில் இருப்பதால் சந்திரன் இல்லை.

    வீராட்டனேசுவரர் இருக்கும் கருவறை எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்குமாம். சந்திரனுக்குரிய சந்திரகாந்த கல்லுக்கு மட்டுமே கடும் வெயில் காலத்திலும் நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மை உண்டு. எனவே இத்தலத்து மூலவர் சந்திரகாந்த கல்லால் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூலவர் வீராட்டனேசுவரர் மீது 13 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத அமைப்பாகும்.

    அதுபோல கருவறைக்குள் லிங்கத்துக்கு பின்பக்கம் சுவரில் சுதை சிற்பமாக உமா மகேஸ்வரர் சிலைகள் மிக பெரியதாக உள்ளன. இதற்கு அடிக்கடி சந்தனப்பூச்சு மட்டும் செய்கிறார்கள். இவரை வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கருவறைக்குள் லிங்கத்துக்கு பின்புறம் உமா மகேஸ்வரர் இருப்பதை அர்ச்சகர் தீபம் காட்டும்போது மிக, மிகத் தெளிவாக பார்க்க முடியும். இந்த அமைப்பானது சிவன் இங்கு தன்னைத்தானே வழிபடுகிறார் என்று சொல்கிறார்கள்.

    மூலவர் லிங்கம் 16 பட்டைகளுடன் அமைந்துள்ளதால் இத்தலத்தில் எதைப் பார்த்தாலும் 16 என்ற அம்சமாகவே தோன்றுகிறது. ஆலயத்தின் தூண்கள் எல்லாம் 16 பட்டைகளுடனே அமைக்கப்பட்டுள்ளன.

    அவ்வளவு ஏன்... கருவறையில் இருந்து அர்ச்சகர் எடுத்து வரும் திருநீறை நம் உடம்பில் 16 இடங்களில் பூசுவது மிக மிக நல்லது என்கிறார்கள்.
    திருவதிகை திருத்தலத்துக்கு செல்லும் போது இதையெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு தரிசனம் செய்யுங்கள்.
    Next Story
    ×