search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கலச புறப்பாடு நடந்த காட்சி.
    X
    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கலச புறப்பாடு நடந்த காட்சி.

    சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இவ்வாறு வார நாட்களில் வரும் திங்கட்கிழமைகளில் சோமவார விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மேலும் நோய் நொடிகள் அண்டாது, தீராத நோய்கள் தீரும், ஒருவர் தன் வாழ்நாளில் செய்தபாவங்கள் அகலும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் முதல் திங்கட்கிழமையான நேற்று, சோமவாரம் என்பதால் சிவன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    அந்த வகையில் சோமவாரத்தை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சங்குமண்டபத்தில் காலை 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கலசங்களுக்கும், 108 சங்குகளுக்கும் பூஜை நடைபெற்று சிவசக்தி யாகம் நடைபெற்றது. பின்னர் பாடலீஸ்வரருக்கு விஷேச திரவியங்களால் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து பூர்ணாகுதியும் நடைபெற்றது. இதன் பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க கலசம் உள்புறப்பாடு நடைபெற்று பாடலீஸ்வரருக்கு கலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகையில் 5 சோமவாரங்கள்(திங்கட்கிழமை) வருகின்றன. இதில் 3-வது சோமவாரத்தில் காலையில் ருத்ராபிஷேகமும், மாலையில் 1008 சங்காபிஷேகமும், 5-வது சோமவாரத்தில் காலையில் 1,008 சங்காபிஷேகமும், இரவு நேரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், இதர சோமவாரங்களில் காலை, மாலை நேரங்களில் 108 சங்காபிஷேகமும், இரவு 7 மணிக்கு வில்வார்ச்சனையும் நடைபெறும் என கோவில் குருக்கள் ஒருவர் தெரிவித்தார்.

    இதேபோல் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த னர். முன்னதாக சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து, நடராஜர் கோவிலில் உள்ள சித்சபையை வலம் வந்து தரிசனம் செய்து சென்றனர்.


    பண்ருட்டி திருவதிகையில் உள்ள புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி நேற்று யாலை யாக பூஜையும் அதை தொடர்ந்து 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. வீரட்டானேஸ்வரர் நாகாபரணத்துடன் மலர் அலங்காரத்திலும், பெரியநாயகி அம்மன் வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இரவில் பெரிய நாயகி அம்மன் சமேத வீரட்டானேஸ்வரர் ரி‌‌ஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய் தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள விருத்தசாலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவில் என்று மாவட்டம் முழுவதும் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×