search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் பாலாலய பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    தஞ்சை பெரியகோவிலில் பாலாலய பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவில் பாலாலய பந்தக்கால் முகூர்த்தம்

    பிப்ரவரி மாதம் நடக்கும் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலய விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரியகோவிலை கட்டினான். உலக பாரம்பரிய சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கி.பி.1010-ம் ஆண்டு தஞ்சை பெரியகோவிலை கட்டி முடித்து ராஜராஜசோழனால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் பல்வேறு திருப்பணிகளை செய்து பெரியகோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். தமிழகஅரசின் சார்பில் கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகளை கடந்த பிறகும் கூட கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இந்திய தொல்லியல்துறையினர் சார்பில் திருப்பணி நடைபெற்ற வருகிறது.

    மராட்டா, கேரளாந்தகன், ராஜராஜன் ஆகிய கோபுரங்களும், மூல கோபுரமும் சீரமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு திருப்பணி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலாலயத்திற்காக யாகசாலை அமைக்க பந்தக்கால் முகூர்த்தம் நேற்றுகாலை நடந்தது.

    சிவாச்சாரியார்களால் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டு அதற்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் மற்றும் திரளான பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். வருகிற 29-ந் தேதி பாலாலயத்திற்கான யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 4 கால பூஜை நடக்கிறது. அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந் தேதி பாலாலயம் நடக்கிறது. அன்றைய தினம் சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சாமிகள் முன்பு திரைபோடப்பட்டு மறைக்கப்படும்.

    பின்னர் மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்யவும் முடியாது. மூலவர்களுக்கு வழிபாடும் நடைபெறாது. அதற்கு பதிலாக உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு அனைத்து விதமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் தான் பெருவுடையார், பெரியநாயகி உள்ளிட்ட சாமிகளுக்கு வழிபாடு நடத்தப்படும்.

    கும்பாபிஷேகம் எந்த தேதியில் நடத்தப்படும் என அதிகாரிகள் கேட்டபோது, பிப்ரவரி 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என தமிழகஅரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறோம். பிப்ரவரி மாதத்தைவிட்டால் 1 ஆண்டு கழித்து தான் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதனால் விரைவில் பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கான தேதியை தமிழகஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றனர்.
    Next Story
    ×