
இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு அண்டும் கார்த்திகை மாதத்தில் (ஆங்கிலத்தில் நவம்பர் மாதம்) திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலில் ஐயப்ப பஜனை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந்தேதி நடக்கிறது. அதற்கு முன்னதாக ஐயப்பனுக்கு மண்டல பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
பின்னர் வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கின்றன. அப்போது பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை கொண்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட இருக்கிறது.
பின்னர் சபரிமலையில் மகர ஜோதி ஏற்றப்படும் நேரத்தில் இக்கோவிலில் மகர சங்கராந்தி கற்பூர திவ்ய ஜோதி பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் தலைமை அர்ச்சகர் குமாரசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.