search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    சீரும் சிறப்பும் தரும் ஆறுபடை முருகன்

    ஆறுபடை வீட்டு முருகனையும் வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பதினாறு பேறுகளும் வந்து சேரும்.
    முருகன் என்றால் ‘அழகன்’ என்று பொருள். ‘அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகினில் பொருளேது முருகா!’ என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒரு முறை அழைத்தால் உருகாத மனமும் உருகும். பெருகாத செல்வம் பெருகும். ஆறுபடை வீட்டு முருகனையும் வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பதினாறு பேறுகளும் வந்து சேரும்.

    ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு வகையான பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பன்னிரண்டு கரங்களைப் பெற்றிருப்பதால் அள்ளிக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால்தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது. வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றிச் சாதனை புரிய வைப்பவன் முருகப்பெருமான்.

    முருகனை ‘கந்தா’ என்றும், ‘கடம்பா’ என்றும், ‘கார்த்திகேயா’ என்றும், ‘சரவணா’, ‘சண்முகா’, ‘வேலாயுதா’, ‘வெற்றிவேலா’, ‘சிவபாலா’, ‘வள்ளிமணாளா’, ‘மயில்வாகனா’ என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம். அந்த ஆறுமுகப் பெருமான், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளிலும் குடிகொண்டிருக்கிறான்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்தத் தீப்பொறிகள் கங்கையில் பறந்தபோது கங்கையே வற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் தவழ விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. பின்னர் ஆறு குழந்தைகளும் ஒரே உருவமாக வடிவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவர், முருகப்பெருமான்.

    கந்தப்பெருமான் கங்கையில் தோன்றியதால் ‘காங்கேயன்’ என்றும், சரவணப் பொய்கையில் தவழ்ந்ததால் ‘சரவணபவன்’ என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் ‘கார்த்திகேயன்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    வாய்ப்பு இருப்பவர்கள் படைவீடு அனைத்திற்கும் ஒருமுறை சென்று வந்தால் பயமின்றி வாழலாம். பணவரவும் கூடும்.

    முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இது தேவர்களின் துயரத்தை நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில், இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை அவருக்கு திருமணம் செய்துவைத்த இடம்.

    இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது சூரபது மனைச் சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றி கண்ட இடம். மாமரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக்கொண்ட முருகப்பெருமான், சேவலைக் கொடியாக்கிக் கொண்டார்.

    மூன்றாவது படைவீடாக உள்ளது பழநி. முருகப்பெருமான் ஞானப் பழத்திற்காக மயிலேறிப் பறந்துசென்று உலகைச் சுற்றினார். ஆனால் தாயும், தந்தையும் தான் உலகம் என்று சொல்லி, அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக்கொண்டார் விநாயகர். இதனால் கோபம் கொண்ட முருகப்பெருமான், ஆண்டிக் கோலத்தில் மலையேறி நின்ற இடம் தான் பழநி.

    நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த இடம் இதுவாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும்தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக்கொண்டு, அதில் அமர்ந்து சிவன் காதில் பிரணவத்தின் பொருளை உபதேசித்தார். அதனால் அவருக்கு ‘சுவாமிநாதன்’ என்ற பெயர் உண்டானது.

    ஐந்தாம் படைவீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம். சினம் இருந்தால் பணம் வராது என்பார்கள். எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். கோபம், படபடப்பு இருப்பவர்கள், அதுநீங்க இத்திருத்தலம் சென்றுவழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஆறாவது படைவீடு பழமுதிர்சோலை. அவ்வைப் பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம். சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் முருகப்பெருமான் வாதிட்ட இடம் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புவர்கள் இங்குசென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெறமுடியும்.

    ஆறுபடை வீட்டு அழகனை நேரில் கண்டு தரிசித்தால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.
    Next Story
    ×