search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    திருவானைக்காவல் கோவில் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    பஞ்சபூத திருத்தலங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் நீர் தலமாகும். இங்கு ஒவ்வொரு ஐப்பசி மாத பவுர்ணமி தோறும் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அப்போது லிங்கத்தின் மேல் சாற்றப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது என்றும், இதனை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 40 படி அரிசியால் சாதம் சமைத்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேரலிங்கத்திற்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பஞ்ச பிரகாரத்தை சுற்றி கிரிவலம் வந்தனர்.

    பின்னர் குபேரலிங்கத்தின் அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு, சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்னத்தை தனியாக வைத்து விட்டு, மீதமுள்ள அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. குபேரலிங்கத்தின் மீது அலங்கரிக்கப்பட்ட அன்னம் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதேபோல் திருவானைக்காவல் வடக்குதெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தெப்பகுளம் அருகில் உள்ள கரியமாலிஷ்வரர், அம்மாமண்டபம் காசிவிஸ்வநாதர் கோவிலில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    திருச்சி காஜாமலை காலனி சர்வசித்தி விநாயகர் கோவிலில் உள்ள யோகேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அன்னாபிஷேகத்தையொட்டி, சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லிங்க திருமேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. காவிரி ஆற்றிலும் அன்னம் கரைக்கப்பட்டது.

    மண்ணச்சநல்லூர் அருகே அழிஞ்சிகரையில் உள்ள மேத்தலீஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் 12 மணியளவில் சுமார் 50 கிலோ அரிசியால் படைக்கப்பட்ட சாதத்தை வைத்து சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    Next Story
    ×