search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்னாபிஷேகம்
    X
    அன்னாபிஷேகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்

    ஐப்பசி பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்று மதியம் 1.30 மணி அளவில் தாயுமானசுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து 3 மணிக்கு மேல் 100 கிலோ அரிசியால் சுட, சுட தயார் செய்யப்பட்ட சாதத்தின் மூலம் சுவாமிக்கு அன்னஅலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனமும், அதனை தொடர்ந்து 5.30 மணிக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு 7.20 மணி வரை பக்தர்கள் தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதன்பிறகு சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்ன அலங்காரம் கலைக்கப்பட்டு சுவாமி மேல் சாற்றப்பட்ட அன்னத்தை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள அன்னத்தை தயிர்சாதமாக செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அர்த்தஜாம பூஜைக்கு பிறகு, இரவு 9 மணிக்கு மேல் தாயுமானசுவாமி மேல் சாற்றப்பட்ட சாதத்தையும், பூஜை பொருட்களையும் கூடையில் வைத்து மேலசிந்தாமணி பகுதியில் உள்ள திருமஞ்சன படித் துறைக்கு கொண்டு சென்று, அங்கு மீன்களுக்கு உணவாக ஆற்று நீரில் விடப்பட்டது.

    இதேபோல் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோவிலிலும் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட ஒரு சில சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது.

    இதேபோல, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சமயபுரத்தில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அன்னா பிஷேகத்தில் சுமார் 15 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதம் சாமிக்கு படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புள்ளம்பாடி வாய்க்காலில் அந்த அன்னம் கரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஆனந்தவல்லி தாயாருக்கு பவுர்ணமி பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

    மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் சுமார் 200 படி அரிசி சாதத்தால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை மணிகண்டசிவம் தலைமையிலான குருக்கள் செய்தனர். காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் சாமிக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    முசிறி அண்ணாமலையார், வெள்ளூர் திருக்காமேஸ்வரர், தா.பேட்டை காசிவிசுவநாதர், மங்களம் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லிங்கதிருமேனி முழுவதற்கும் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    Next Story
    ×