
இந்த திருத்தலம் ‘நீலரத்ன சேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் வேணு வனம் என்றும் சொல்வார்கள். இந்த ஆலயத்தின் தீர்த்தமாக, ‘பத்பநாப தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்’ ஆகியவை உள்ளன. ஆலய விமானம் ‘ஆனந்த விமானம்’ ஆகும். இந்த ஆலயம் சூரியன், சனி, ராகு, கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயத்தின் தல விருட்சம் மூங்கில் ஆகும்.
திருமலை திருப்பதியை போலவே, ரத சப்தமி அன்று ஏழு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு தமிழ்நாட்டிலேயே இந்த தலத்தில் மட்டும் தான் என்று சொல்கிறார்கள். இங்கு சவுந்திரவல்லி, கோதைவல்லி ஆகிய தாயார் சன்னிதிகள் இருக்கின்றன. இங்கு நீலமணிநாதர், கரியமாணிக்கம் என்ற பெயரில் கண் நோய் தீர்க்கும் பகவானாக உள்ளார். நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலம் இது.