search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் ஊர்வலமாக கொலு மண்டபத்திற்கு செல்வதை படத்தில் காணலாம்.
    X
    அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் ஊர்வலமாக கொலு மண்டபத்திற்கு செல்வதை படத்தில் காணலாம்.

    அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா

    அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா வந்து கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திண்டுக்கல்லை அடுத்த அகரத்தில் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் பல்லியின் சத்தம் (சகுனம்) கேட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நடத்த அம்மன் உத்தரவு கொடுத்ததால் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்டி இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ந் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 18-ந் தேதி அம்மனின் பிறப்பு விழா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அம்மனின் கண் திறப்பு வைபவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களின் பெருத்த ஆரவாரத்துடன் கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.

    அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலாவந்த போதும், கொலுமண்டபத்தில் எழுந்தருளியிருந்த போதும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல், கம்பு, சோளம் கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுதவிர பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அங்கப்பிரதட்சனம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும் குழந்தை வரம் வேண்டினோர் தங்களது குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் சுமந்து வந்தும், மண்ணால் செய்யப்பட்ட அம்மன் பொம்மைகளையும், கை மற்றும் கால்கள் போன்ற உருவங்களையும் காணிக்கையாக அளித்தனர்.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு அம்மன் பூத்தேரில் வாணக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதன்பின்னர் சந்தனத்தேவர் பிரதர்ஸ் சார்பில் பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் உலாவந்து குடகனாற்றினை கடந்து தாடிக்கொம்பு அருகேயுள்ள பூஞ்சோலையில் எழுந்தருளல் நடைபெறும்.
    Next Story
    ×