search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    வெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக குடிகொண்டிருப்பவர் பகவதி அம்மன்.
    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக குடிகொண்டிருப்பவர் பகவதி அம்மன். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவின் போது அம்மன் 9 நாட்கள் கொலு மண்டபத்தில் தவக்கோலத்தில் வீற்றிருப்பார்.

    10-ம் நாள் அன்று அம்மன் பிற்பகல் எலுமிச்சம் பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கும். இந்த ஊர்வலத்தின் முன்னால் 3 நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட 3 யானைகள் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்தப்படி அணிவகுத்து செல்வார்கள்.

    அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக செல்வார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பஜனை பாடிய படி செல்வார்கள். அதன் பிறகு ஊர்வலத்தில் கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மகுட ஆட்டம், கடுவாய் புலியாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், பஞ்ச வாத்தியம், கேரள புகழ் தையம் ஆட்டம், கனியன் குத்து, சிலம்பாட்டம் இன்னும் எண்ணற்ற கிராமிய கலைகள் இடம் பெறுகின்றன. இந்த ஊர்வலத்தில் உடைவாள் மற்றும் வில், அம்பு ஆகியவற்றை பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஏந்திச் செல்வார்கள்.

    இந்த ஊர்வலம் கன்னியாகுமரி கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலையம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடையும். வழிநெடுக அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய்-பழம் படைத்து, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள். ஊர்வலம் மகாதான புரத்தை சென்றடைந்ததும் அங்கு மாலை 6 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கும்.

    கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்குள் 4 திசையையும் நோக்கி அம்பு எய்துவார். அம்மனின் ஆக்ரோஷத்தை கண்டு ஒளிந்து ஓடும் பாணாசுரன், வேட்டை மண்டபத்தில் உள்ள நெல்லிமரத்தின் பின்னால் பதுங்கி இருப்பதாகவும் அம்மன், பாணாசுரனை அழிக்க அம்பு எய்வதாகவும் கருதப்படும்.
    பின்னர் மண்டபத்தின் வெளிப்புறம் 4 திசைகளையும் நோக்கி மேல்சாந்தி அம்பு எய்துவார். அதன் பிறகு பகவதி அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் வைக்கப்படும் இளநீர் மீது கோவில் மேல்சாந்தி அம்பு எய்வார்.

    அம்பு பாய்ந்த அந்த இளநீரை பக்தர் ஒருவர் எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க அம்மனை சுற்றி 3 முறை வலம் வருவார். அப்போது அதிர் வேட்டுகள் முழங்கும். மங்கல இசைகள் ஒலிக்கும். இந்த நிகழ்ச்சியே பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்ததாக கருதப்படும். இந்த பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் அம்மன் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் பவனிவரும் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் அம்மனை பல்லக்கில் எடுத்துவைத்து கன்னியாகுமரி கொண்டு சென்று முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கும். அதன்பிறகு கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மனை கோவிலுக்குள் எடுத்துச் சென்று பூஜைகள் செய்வார்கள். 
    Next Story
    ×