search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனம்பா கோவில் நடை திறப்பையொட்டி, ஹாசனம்பா தேவி ரத உற்சவம் நடந்தது.
    X
    ஹாசனம்பா கோவில் நடை திறப்பையொட்டி, ஹாசனம்பா தேவி ரத உற்சவம் நடந்தது.

    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு

    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த கோவில் நடை நேற்று முதல் 13 நாட்கள் திறந்திருக்கும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஹாசனம்பா அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் தீபாவளி பண்டிகையையொட்டி 13 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். இது தான் இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். அதன்பிறகு கோவில் நடை மூடப்படும். இந்த கோவிலில் நடை மூடப்படும் நாளில் பூஜைகள் முடிந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மாலைகள், பூக்கள், படையல்கள் ஆகியவை கெட்டு போகாமல் அடுத்த ஆண்டு நடை திறக்கும்வரை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற ஹாசனம்பா கோவில் நடை, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கன்னட ஆஸ்வயுஜா மாதம் முதல் வியாழக்கிழமையான நேற்று திறக்கப்பட்டது. நேற்று மதியம் 12.35 மணி அளவில் தலவார வம்சத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் கோவில் முன்பு வைத்து வாழை மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அந்த வாழை மரத்தை அவர் வாளால் வெட்டினார். நஞ்சராஜ அர்ஸ், வாழை மரத்தை வெட்டிய நேரத்தில், அர்ச்சகர்கள் கோவில் நடையை திறந்தனர். இதில் மந்திரி மாதுசாமி, கலெக்டர் ஆர்.கிரீஷ், கூடுதல் கலெக்டர் நாகராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராம் நிவாஸ் செபட், துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கோவில் நடை திறந்ததும் அம்மன் முன்பு ஏற்றி வைத்திருந்த விளக்கு அணையாமல் இருந்ததாகவும், படையல், பூக்கள், அலங்காரம் கெட்டு போகாமல் இருந்ததாகவும் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் கோவில் அர்ச்சகர்கள் ஹாசனம்பா அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் செய்தனர். ஹாசனம்பா கோவில் நடை நேற்று முதல் வருகிற 29-ந்தேதி வரை 13 நாட்கள் திறந்திருக்கும். நேற்று முதல் நாள் என்பதால் நேற்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நேற்று இரவு 7 மணி வரை கோவிலில் சுத்தம் செய்யும் பணியும், அலங்காரம் செய்யும் பணியும் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் ஹாசனம்பா அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பக்தர்கள் ஹாசனம்பா அம்மனை விடிய, விடிய தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு ஹாசனம்பா அருள்பாலிக்கிறார். அதன்பின்னர் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதையடுத்து இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பக்தர்கள் விடிய, விடிய அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஹாசனம்பா கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால் கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தினி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஹாசனம்பாவை தரிசனம் செய்ய முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் வருவார்கள் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×