search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாலம்மன் பக்தர்கள் புடை சூழ பூஞ்சோலைக்கு சென்றபோது எடுத்த படம்.
    X
    முத்தாலம்மன் பக்தர்கள் புடை சூழ பூஞ்சோலைக்கு சென்றபோது எடுத்த படம்.

    பட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா

    பட்டிவீரன்பட்டி பகுதியில் 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
    பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன ஐயம்பாளையம், பெரிய ஐயம்பாளையம், சித்தரேவு ஆகிய 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதையடுத்து முதல் நாள் காவல்கார சுவாமி பூஜைக்கு பின்பு அம்மனுக்கு கண் திறந்து ஆடை, தங்க ஆபரணங்கள் அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் செய்து முத்தாலம்மனை மேளதாளம், வாண வேடிக்கை முழங்க கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாள் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், மா விளக்கு மற்றும் கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனைத்தொடர்ந்து 3-ம் நாளான நேற்று முத்தாலம்மன் சிங்க வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் முளைப்பாரி ஊர்வலத்துடன் முன்செல்ல மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் பூஞ்சோலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பூஞ்சோலை சென்றடைந்தது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த திருவிழாவையொட்டி சின்ன ஐயம்பாளையத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். மேலும் உறி அடித்தல், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கபடி போட்டி ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழா குழுவினரும், கோவில் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
    Next Story
    ×