search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைக்கோல் பிரி அணிந்து கொண்டும், பல்வேறு வேடமணிந்தும் சென்ற பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    வைக்கோல் பிரி அணிந்து கொண்டும், பல்வேறு வேடமணிந்தும் சென்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    பாரம்பரிய ஏழை காத்த அம்மன் கோவில் விழா

    மேலூர் அருகே அம்மன் தெய்வங்களாக ஏழு சிறுமிகளை தேர்வு செய்து வழிபடும் ஏழை காத்தம்மன் கோவில் விழா நடைபெற்றது.
    மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை தலைமையிடமாகக் கொண்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிக்காரர் சுவாமியும், ஏழை காத்த அம்மனும் இப்பகுதி மக்களின் காவல் தெய்வங்களாக உள்ளன. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். விழாவை முன்னிட்டு வழக்கம் போல் அம்மன் தெய்வங்களாக 7 சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு இப்பகுதி மக்கள் கடுமையான பழமையான கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் விரதம் இருப்பார்கள். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோரும் இந்த கட்டுப்பாடுகளுடன் விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    திருவிழாவுக்கு விரதம் இருந்த பக்தர்கள் நேற்று வெள்ளலூரில் ஒன்று கூடினர். பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதைகளுடன் 7 சிறுமிகளும் அம்மன் தெய்வங்களாக பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி ஊர்வலத்தில் வந்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய சேமகுதிரை வாகனங்களை பக்தர்கள் சுமந்து ஊர்வலத்தில் வந்தனர். பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    ஆண் பக்தர்கள் உள்ளாடை மட்டும் அணிந்து வைக்கோலை கயிறு போல திரித்து உடல் முழுக்க இறுக்கமாக சுற்றிக்கொண்டும், பல விதமான உருவங்களில் முகமூடிகளை அணிந்தும் 7 கிலோ மீட்டர் தூரம் வெள்ளலூரில் இருந்து கோவில்பட்டியில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். பெண் பக்தர்களில் திருமணம் ஆகாதவர்கள் சிறிய மதுக்களை (மண் பொம்மைகள்) சுமந்து வந்தனர். திருமணம் ஆன பெண் பக்தர்கள் மண் கலயங்களில் பாலை ஊற்றி அதில் தென்னை மர குருத்து பாலைகளை வைத்து அலங்கரித்து மதுக்கலயங்களை சுமந்து வந்தனர். வெள்ளலூரில் தொடங்கி கோட்டநத்தம்பட்டி, அம்பலக்காரன்பட்டி விலக்கு வழியாக கோவில்பட்டி யில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.
    Next Story
    ×