search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜோதிடம்
    X
    ஜோதிடம்

    ஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்

    ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தில் 10-ம் இடம், 10-ம் அதிபதி, 10-ம் அதிபதி நின்ற சாரநாதன் ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது.
    ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.. கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற பாடல் வரிகளில் இருந்து தொழிலின் வலிமையை உணர முடியும். நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அரசு மற்றும் தனியார் வங்கிகள் தொழில் கடன் கொடுப்பதால் பலர் சொந்த தொழில் செய்ய முன் வருகின்றனர். சிறிய பெட்டி கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள் வரை, அனைவரும் தொழிலில் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் தொழில் தொடங்குகிறார்கள்.

    ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும். அதன்படி 10-ம் இடம், 10-ம் அதிபதி, 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குரியவன் நின்ற ராசி, சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது.

    ஒருவர் சொந்தமாக தொழில் செய்ய, லக்னம், லக்னாதிபதி வலிமை பெற வேண்டும். லக்னம் வலிமை பெற்றவர்களின் செயல்பாடே சிறப்பாக இருக்கும். பத்தாம் அதிபதியும், பத்தாம் இடமும் பலம் பெற்று, கேந்திர திரிகோண சம்பந்தம் இருந்தாலும் சொந்த தொழில் செய்யலாம்.

    பத்தாம் அதிபதி இயற்கை சுபர் (குரு, சுக்ரன், புதன், வளர்பிறை சந்திரன்) ஆக இருந்து, கேந்திர திரிகோணம் பெற்றால், நல்ல தொழில் அமைந்து வாழ்வு சிறக்கும். பத்தாம் இடத்தை குரு போன்ற சுப கிரகம் பார்க்க வேண்டும் அல்லது பத்தாம் அதிபதியை குரு பார்க்க வேண்டும்.

    பத்தாம் அதிபதி உச்சம் பெற்று சுப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், பத்தாம் இடத்தில் உச்சம் பெற்ற சுப கிரகங்கள் இருந்தாலும் அந்த நபர் தொழிலால் செல்வாக்கு, புகழ் பெறுவார். தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 2, 11-க்கான அதிபதிகள் பலம் பெற்றால் கூட சொந்தத் தொழில் செய்யலாம். பெரும் லாபம் கிடைக்கும். தொழிலில் வெற்றியை எட்டியவர்களின் ஜாதகத்தில் இந்த கிரக அமைப்புகள் இருக்கும்.

    அதே நேரத்தில் பத்தாம் அதிபதி பகை, நீச்சம் பெற்று பாவிகள் சேர்க்கை பெற்று பலம் குன்றி இருந்தால், தொழில் நல்லவிதமாக அமையாது. பத்தாம் வீட்டில் 6, 8, 12-ம் வீட்டின் அதிபதிகள் இருந்தாலோ, பத்தாம் அதிபதி 6, 8, 12-ல் இருந்தாலோ சொந்தத் தொழில் செய்யும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. பத்தாம் இடத்திற்கு வக்ர கிரகங்கள் சம்பந்தம் இருந்தால், தொழிலில் ஏற்ற இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.

    * பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் தேடி வரும். மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வருவார்.

    * பத்தாம் அதிபதி 2-ல் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தொழில் செய்வார்கள். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பேச்சுத் திறமையால் வாடிக்கையாளர்களை கவருவார்கள்.

    * பத்தாம் அதிபதி 3-ல் இருந்தால் தன் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத தொழில் அல்லது பரிட்சயம் இல்லாத தொழில் செய்து விரயத்தையும், சிரமங்களையும் சந்திப்பார்.

    * பத்தாம் அதிபதி 4-ல் இருந்தால் நன்கு தெரிந்த பரிட்சயமான தொழில் செய்து வெற்றி வாகை சூடுவர். அரசின் உதவித் தொகை, வங்கிக் கடன் பெற்று தொழில் செய்வார்கள். தொழிலின் நெளிவு சுழிவுகளை அறிந்திருப்பர்.

    * பத்தாம் அதிபதி 5-ல் இருந்தால் குலத்தொழில் அல்லது பூர்வீகம் தொடர்பான தொழில் புரிவார். கடன் பெறாமல் சுய முதலீட்டில் தொழில் நடத்துவார்கள். குறைந்த உடல் உழைப்பு, மூளையை அதிகம் பயன்படுத்தும் தொழிலை செய்வார்கள். உழைப்பை விட வருமானம் மிகுதியாக இருக்கும். பல சமயங்களில் இவர்கள் ஈடுபடும் தொழிலுக்கு முதலீடே தேவையற்றதாக இருக்கும்.

    * பத்தாம் அதிபதி 6-ல் இருந்தால் தொழிலால் கடன்சுமை கூடிக் கொண்டே இருக்கும். அதனால் மன உளைச்சல் அதிகரிக்கும். இவர்கள் தொழிலாளியாக பணியாற்றுவதே நல்லது.

    * பத்தாம் அதிபதி 7-ல் இருந்தால் கூட்டுத் தொழில் சிறப்பான பலன் தரும்.

    * பத்தாம் அதிபதி 8-ல் நின்றால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காது. தொழில் மூலம் வம்பு, வழக்கு, கட்டப் பஞ்சாயத்து இருக்கும். இந்த அமைப்பு உடையவர்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை மிகவும் நம்பி வாழ்வார்கள். ஆனால் அதிர்ஷ்டம் அவமானத்தையும், மன வேதனையும் தரும்.

    * பத்தாம் அதிபதி 9-ல் இருந்தாலும், 9-ம் அதிபதி 10-ல் இருந்தாலும் தர்ம, கர்மாதிபதி யோகம் வாய்க்கும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். பத்தாம் அதிபதி 9-ல் இருப்பதை விட, 9-ம் அதிபதி 10-ல் இருப்பது சிறப்பு.

    * பத்தாம் அதிபதி 10-ல் இருந்தால் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் நுட்பம் அறிந்தவர்களாக இருப்பர்.

    * பத்தாம் அதிபதி 11-ல் இருந்தால் லாபம் இல்லாத தொழிலை செய்ய மாட்டார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலை மட்டுமே செய்வார்கள்.

    * பத்தாம் அதிபதி 12-ல் இருந்தால் தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்படும். பெரிய அளவில் தொழில் செய்து பெரிய அளவில் இழப்பை சம்பாதிப்பார்கள்.

    பரிகாரம்

    தொழில் தொடர்பான பிரச்சினையை சந்திப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

    “ஓம் பைரவாய வித்மஹே

    ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி:

    தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்”

    என்ற சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

    சுய ஜாதகம்

    பத்தாம் அதிபதியை மட்டும் வைத்து ஒருவருடைய தொழிலை நிர்ணயிக்க முடியாது. அதற்கு வலு சேர்ப்பது தொழில் காரக கிரகமான சனிதான். ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் தொழில் நன்றாக இருக்கும். பலர் தங்களின் ஜாதகத்தில் சுய தொழில் அமைப்பு இருக்கிறதா? என்பதை சரியாக பார்ப்பது இல்லை. சுய ஜாதகத்தை சரி பார்த்து அமைப்பு சரியில்லை என்றாலும், என் மனைவி பெயரில் தொழில் செய்கிறேன்.

    அம்மா, அப்பா, குலதெய்வம் பெயரில் தொழில் செய்கிறேன். என் அமைப்பிற்கு என்ன தொழில் செய்யலாம் என சொந்த தொழில்தான் செய்வேன் என்பதில் விடாப்பிடியாக இருப்பார்கள். யாருடைய பெயரில் தொழில் செய்தாலும் தொழிலை இயக்குபவரின் சுய ஜாதகம், தசா - புத்திக்கு ஏற்பவே ஜாதகரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    -பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி 
    Next Story
    ×