
அதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. நேற்று பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலைக்கான புராண வரலாறு வருமாறு:-
குலோத்துங்க பாண்டியன் ஆட்சி காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவரது சீடர்களில் சித்தன் என்னும் ஒருவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். அவன் பயிற்சி முடித்து சென்ற அதே பகுதியில் வாள்வித்தை பயிற்சி பள்ளி ஒன்றை ஆரம்பித்தான். மேலும் அந்த பயிற்சி பள்ளியில் தான் படித்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் சேர்த்து கொண்டான்.
மேலும் ஆசிரியர் பாணனின் மனைவியிடமும் அவன் தவறாக நடக்க முயற்சித்தான். இதனை சோமசுந்தர கடவுளிடம் சென்று முறையிட்டனர். இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார். அந்த போரில் ஆசிரியர் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்து கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக இறைவன் வெட்டினார். இறுதியில் அவன் தலையையும் வெட்டி கொன்றார். இதனை அறிந்த குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.
ஆவணி மூல விழாவில் நேற்று இரவு சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு, வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலையில் சுவாமி வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். இரவில் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது சுவாமிக்கு நவரத்தின கற்கள் பதித்த செங்கோல் வழங்கி, வைர கிரீடம் சூட்டப்படும். அதை தொடர்ந்து சுவாமியின் பிரதிநிதியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று, 2-ம் பிரகாரத்தை வலம் வந்து, மீண்டும் சுவாமியிடம் கொடுப்பார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.