search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    கிருஷ்ணர் அறிவுறுத்தும் தர்ம நியதி

    நாம் ஒவ்வொருவரும் அனைத்து நிலைகளிலும் சாட்சியாக உள்ள இறை சக்தியை நினைத்து, அவரை சரண் புகுந்து காரியங்களைச் செய்யும்போது, நம் வாழ்வில் துன்பங்கள் ஏற்பட வழியே இல்லை.
    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் விசேஷமானதும், வீரியம் மிக்கதும், லீலைகள் பல அடங்கியதுமானது கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தில் கிருஷ்ணரின் செயல்கள் அனைத்தும் பல்வேறு முரண்பாடுகள் கொண்டதாக இருப்பதை பலரும் கவனித்திருப்பார்கள். அவற்றின் பின்னணியில் சூட்சுமமான தர்மம் அடங்கியிருப்பதை பல ஆன்மிக சான்றோர்கள் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்கள்.

    அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள இரண்டு சிக்கலான சம்பவங்களின் பின்னால் இருக்கும் உள் அர்த்தங்கள் பற்றி உத்தவர் கேள்விக்கு, பகவான் கிருஷ்ணர் அளித்த பதில்களை இங்கே காணலாம். கிருஷ்ணருடன் கடைசிவரை இருந்து அவருக்கு பல சேவைகளைச் செய்தவர் உத்தவர். அவர் கிருஷ்ணரின் சித்தப்பா மகன் ஆவார்.

    கிருஷ்ணர், தன்னுடைய அவதார நோக்கம் முடிந்து பூவுலகை விட்டு செல்லும் காலம் வந்தது. அந்த நேரத்தில் தன்னுடனே இதுவரை பயணித்து வந்த உத்தவரிடம், “உனக்கு ஏதாவது விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

    எளிய சுபாவம் கொண்ட உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கிருஷ்ணனின் பல லீலைகள், புரியாத புதிராகவே இருந்தது. அதனால் அதற்கான காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

    “கிருஷ்ணா! உன்னிடம் சில கேள்விகள் மட்டுமே நான் கேட்க வேண்டும். அதற்கு விளக்கம் அளித்தாலே போதுமானது” என்றவர், தன்னுடைய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

    “பாண்டவர்களின் உற்ற நண்பனாக இருந்த உன்னை, அவர்கள் பரிபூரணமாக நம்பினார்கள். நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்த நீ, முன்னதாகவே சென்று சூதாட்டத்தை தடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாததுடன், தருமன் அதில் தோற்கும்படியும் விட்டு விட்டாய். அதனால், தருமன் செல்வம், நாடு ஆகியவற்றை இழந்த நிலையில், தன்னையும், தன் உடன் பிறந்தவர்களையும் இழந்து அவமானப்பட்டான். மேலும் திரவுபதியையும் வைத்து சூதாடி தோல்வி அடைந்தான். இவை எதையுமே நீ தடுக்கவில்லையே?.

    கவுரவ சபையில் திரவுபதியின் துகில் உறிக்கப்பட்டு, அவளது மானம் பறிபோகும் நிலை ஏற்பட்டபோது தான் நீ சென்று, அவளது மானத்தை காப்பாற்றினாய். மாற்றான் ஒருவன், குல மகள் ஒருத்தியின் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, பலர் முன்னிலையில் அவளது ஆடையில் கை வைத்து இழுத்தபோதே அவள் உயிரற்றவளாக மாறி விட்டாள். ஆபத்தான இது போன்ற சமயத்தில் பக்தர்களுக்கு உதவாத உன்னை எப்படி ஆபத்பாந்தவன் என்று சொல்வது?” என்று ஆதங்கத்தோடு கேட்டார் உத்தவர்.

    “விவேகம் உள்ளவன்தான் வெற்றிபெறுவான் என்பது, இந்த உலகத்தின் தர்ம நியதி ஆகும். இந்த விஷயத்தில், துரியோதனனுக்கு இருந்த விவேகம், தருமனுக்கு இல்லை. அதனால் அவன் தோற்கும் நிலை ஏற்பட்டது. துரியோதனனுக்கு நுட்பமாக சூதாடும் வழிகள் தெரியாவிட்டாலும், அவனது மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்று, சந்தர்ப்பத்திற்கேற்ப விவேகமாக செயல்பட்டான். அதே போல தருமனும், ‘என் சார்பாக என் மைத்துனன் கிருஷ்ணன் பகடையை உருட்டுவான்’ என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி நானும், சகுனியும் சூதாடியிருந்தால், நான் கேட்கும் எண்ணிக்கையை பகடைக் காய்களில் சகுனியால் போட முடியுமா?, அவன் கேட்கும் எண்ணிக்கையை நான் போட இயலாதா..?

    எல்லாவற்றுக்கும் மேலாக, என்னை தருமன் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். அவன் சூதாடும் விஷயம் எனக்குத் தெரிந்தால் அவமானம் என்று நினைத்தான். அதனால் சூதாட்ட மண்டபத்திற்கு நான் வராமல் இருக்க வேண்டும் என்று என்னிடமே வேண்டிக்கொண்டான்.

    அந்த சபையில் நடக்கும் அநீதியைக் கண்டு கொதிக்கும் உள்ளம் படைத்த யாராவது ஒருவர், பிரார்த்தனையின் மூலமாக என்னை அழைத்துவிடமாட்டார்களா என்று, சபையின் வெளியிலேயே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தேன்.

    தருமன், சூதாட்டத்தில் அவனது சகோதரர்களை இழந்தபோது, அவர்கள் அனைவரும் துரியோதனனை திட்டிக் கொண்டும், தங்களுடைய நிலையை எண்ணி நொந்து கொண்டும் இருந்தனர். என்னை கூப்பிட அவர்களுக்கு தோன்றவில்லை. என்னை மறந்தே போனார்கள்.

    துச்சாதனன், திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளும் என்னைக் கூப்பிடவில்லை. துகிலை உறிந்த நிலையில்தான் என்னை வேண்டி குரல் கொடுத்தாள். அப்போதுதான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. உடனடியாக, அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். அந்தச் சூழலில் என் மீது என்ன தவறு?” என்று கேட்டார் கிருஷ்ணர்.

    உத்தவருக்கு கடும் கோபம் வந்தது. “அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா..? ஆபத்துகளில் உதவ உன் அடியவர்களுக்கு நீயாக வரமாட்டாயா..?”

    “உத்தவா! மனித வாழ்க்கை என்பது ஒருவரது கர்ம வினைப்படியே அமைகிறது. அதில் நான் நடத்துவது அல்லது குறுக்கிடுவது இல்லை. ஒரு சாட்சியாக மட்டுமே, நடப்பதை அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்கிறேன். அதுதான் தெய்வ தர்மம்” என்று கிருஷ்ணர் பதிலளித்தார்.

    “அப்படியானால் நீ அருகில் நின்று கொண்டு, நாங்கள் செய்யும் தீமைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்துவிட்டு, பாவங்கள் காரணமாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படித்தானே?” உத்தவர் கேள்விகளை மீண்டும் தொடுத்தார்.

    “உத்தவா! நான் சொன்னதன் உள் அர்த்தத்தை நீ நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அனைத்து காரியங்களிலும் சாட்சியாக உங்கள் அருகில் இறைவன் நிற்பதை மனப்பூர்வமாக உணரும்போது, ஒருவரால் தவறு களையோ, தீய செயல்களையோ எப்படிச் செய்ய முடியும். ஆனால் நான் சாட்சியாக இருப்பதை சுலபமாக மறந்து விட்டு, உங்கள் இஷ்டப்படி காரியங்களைச் செய்கிறீர்கள். எனக்குத் தெரியாமல் எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செயல்படுகிறீர்கள். சாட்சி நிலையில் எப்போதும், எல்லோருடனும், எங்கும் இருப்பவன் நான் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், சூதாட்டம் வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றார் கிருஷ்ணர்.

    உத்தவருக்கு எல்லாம் விளங்கிற்று. அவர் இப்போது கிருஷ்ணரை கைதொழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முன்வரவில்லை.

    மேற்கண்ட உரையாடல் மூலம், இறைவனாகிய பரம்பொருள் நமக்கு உணர்த்தும் உண்மை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அனைத்து நிலைகளிலும் சாட்சியாக உள்ள இறை சக்தியை நினைத்து, அவரை சரண் புகுந்து காரியங்களைச் செய்யும்போது, நம் வாழ்வில் துன்பங்கள் ஏற்பட வழியே இல்லை.
    Next Story
    ×