search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்த படம்.
    X
    பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியபோது எடுத்த படம்.

    பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி விழா

    கன்னியக்கோவில் கிராமத்தில் பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    புதுவை மாநிலம் கன்னியக்கோவில் கிராமத்தில் பிரசித்திபெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தீமிதி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணி அளவில் சுப்ரமணியர், வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவில் எதிரில் அக்னி குண்டம் அமைத்து, தீமிதி நடந்தது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தனவேலு எம்.எல்.ஏ. மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவையொட்டி புதுச்சேரி - கடலூர் சாலையில் கன்னியக்கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    தீமிதியின்போது தவளக்குப்பத்தை சேர்ந்த பழனி, உறுவையாறு பச்சையப்பன், திருக் காஞ்சி மனோகர் ஆகியோர் கால்தவறி விழுந்ததில் தீக் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    Next Story
    ×