search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்
    X
    காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 108 கலசத்தில் பாலாபிஷேகம்

    முப்பெரும் தேவியரின் அம்சமாக காஞ்சி காமாட்சி அருள்கிறாள். இந்த ஆலயத்தில் இன்று (சனி)ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு 108 கலசத்தில் பாலாபிஷேகம் நடக்கும்.
    முப்பெரும் தேவியரின் அம்சமாக காஞ்சி காமாட்சி அருள்கிறாள். ‘கா’ என்பது லட்சுமியையும், ‘மா’ சரஸ்வதியையும் குறிக்கும். உற்சவ அம்பிகையுடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இருக்கின்றனர். அம்பிகையின் திருநாமத்தை ஒருமுறை உச்சரித்தாலும் கோடி முறை சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்திற்கு காமகோடி பீடம் என்ற பெயர் வந்தது. பஞ்ச கங்கை தீர்த்தம் இங்குள்ளது.

    ஒரு சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என வரம் பெற்ற பண்டாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட, அவள் சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்களின் வேண்டுதலுக்காக காஞ்சிபுரத்தில் எழுந்தருளினாள். பக்தர்களின் காமம் எனப்படும் விருப்பங்களை அருளும் கருணைக்கண் கொண்டவள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றாள்.

    முற்காலத்தில் காபாலிகள், அம்பிகைக்கு மிருக பலியிட்டு பூஜித்தனர். இதனால் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். ஆதிசங்கரர் காபாலிகளை அனுப்பிவிட்டு, இங்கிருந்த ஸ்ரீசக்கரத்தைப் புதுப்பித்து அம்பிகையை சாந்தப்படுத்தினார். அம்பிகையின் அருளால் சர்வகஞ பீடம் (எல்லாம் தெரிந்தவர்) பட்டம் பெற்றார். இவருக்கு பிரகாரத்தில் சன்னதி இருக்கிறது. விழாக்களில் ஆதிசங்கரருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது.

    ஆடி வெள்ளி நாட்களில் காமாட்சிக்கு விசேஷ பூஜை நடக்கும். கடைசி வெள்ளியன்று லட்ச தீபமேற்றி சிறப்பு வழிபாடும், அம்பிகை புறப்பாடும் நடக்கும். தேவர்களுக்கு அம்பிகை காட்சி தந்த வைபவம் ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடக்கிறது. இன்று (சனி)ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு 108 கலசத்தில் பாலாபிஷேகம் நடக்கும்.

    தட்சண் தன் மகள் தாட் சாயணியையும், மருமகன் சிவனையும் அவமதித்தான். இதனால் தாட்சாயணி குண்டத்தில் விழுந்தாள். சிவன் மனைவியைத்தன் தோளில் தூக்கி தாண்டவம் புரிந்தார். அப்போது, அம்பிகையின் உடல் சிதறி பல இடங்களில் விழுந்தது. அவையே சக்தி பீடங்கள் எனப்பட்டன. இதில் அவளது நாபி (தொப்புள்) விழுந்த தலம் காஞ்சீபுரம். இதை கருத்தில் கொண்டு, அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் சந்தான கம்பம் எனப்படும் குழந்தைபாக்கிய தூண் உள்ளது. தொப்புள் கொடி பந்தம் என தாய், குழந்தை உறவைக் குறிப்பிடுவார்கள். எனவே, இந்தத் தூணில் உள்ள நாபி வடிவ துளையில் குழந்தை பாக்கியமில்லாத பக்தர்கள் குங்குமமிட்டு வழிபடுகிறார்கள்.

    முன்பு இங்கு பங்காரு (தங்கம்) காமாட்சி சன்னதி இருந்தது. அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக அச்சிலையை தஞ்சையில் வைத்துவிட்டனர். பின்பு அங்கேயே கோயில் எழுப்பப்பட்டது. தற்போது பங்காரு காமாட்சி இருந்த இடத்தில் ஸ்ரீசக்கரமும், அம்மன் பாதமும் இருக்கிறது.
    Next Story
    ×