search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    ஆடி மாதம் என்றாலே சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். 8 பேட்டைகளையும் கட்டி ஆளும் அம்மனாக சேலம் கோட்டை மாரியம்மன் திகழ்கிறது. இந்த கோவில் இடிக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், ஆடிப்பண்டிகைக்கு முன்னோட்டமாக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    நேற்று இரவு கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 5-ந் தேதி சக்தி அழைப்பும், 7, 8, 9 தேதிகளில் பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சியும், 13-ந் தேதி பால்குடம் எடுத்தல் விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
    Next Story
    ×