search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபா
    X
    சீரடி சாய்பாபா

    கருணை தெய்வம் எங்கள் சீரடி சாய்பாபா

    சாய்பாபா சீரடியில் வாழ்ந்த காலத்தில், தொலை தூரத்தில் தன்னை நினைத்து பிரார்த்திக்கும் பக்தர்களின் குறைகளையும் தீர்த்து வைத்தார். சீரடி தலத்தில் இருந்தபடியே இந்த அற்புதங்களை அவர் நிகழ்த்தினார்.

    சாய்பாபா சீரடியில் வாழ்ந்த காலத்தில், தொலை தூரத்தில் தன்னை நினைத்து பிரார்த்திக்கும் பக்தர்களின் குறைகளையும் தீர்த்து வைத்தார். சீரடி தலத்தில் இருந்தபடியே இந்த அற்புதங்களை அவர் நிகழ்த்தினார்.

    இந்த உலகில் ஒருவர், எந்த மூலையில் இருந்தாலும் சரி, உள்ளம் உருகி, மருகி சாய்நாதா என்று கண்ணீர் விட்டு, அவரிடம் சரண் அடைந்து விட்டால் நிச்சயமாக அவர்களது பிரச்சினை தீரும். யார் ஒருவர் நம்பிக்கையோடும், பொறுமையோடும் “ஓம் சாய், ஸ்ரீ சாய், ஜெய, ஜெய சாய்” என்ற மூல மந்திரத்தை உச்சரிக்கிறார்களோ, அவர்கள் புதிய வாழ்வை பெற்றனர்.

    பொதுவாக சீரடி சாய்பாபா தன் பக்தர்களை மூன்று விதமான வழிகளில் ஆட்கொள்வது உண்டு. ஒன்று தன்னை நினைக்கும் பக்தனுக்கு தனது உருவத்தை காட்டி உதவி செய்வார். இரண்டாவது தனக்கு பதில் வேறு யாராவது ஒருவரை அனுப்பி உதவி செய்வார். மூன்றாவது பக்தனின் கனவில் தோன்றி பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி விடுவார்.

    இந்த மூன்று விதமான அற்புதங்கள் சீரடி சாய்பாபா உயிரோடு இருந்த போதும் நடந்தது. இப்போதும் தினமும் நடந்தபடி உள்ளது. சாய்பாபாவின் தீவிர பக்தர் நானா சந்தோர்கர். அடிக்கடி சீரடி சென்று பாபாவிடம் பழகி ஆசி பெற்றவர். ஒரு சமயம் கர்ப்பிணியாக இருந்த அவரது மகள் பிரசவ வலியால் துடித்தார். அப்போது குதிரை வண்டியில் வந்த ஒருவர், “இந்த உதியை பாபா கொடுத்தார்” என்று கூறி கொடுத்து விட்டுச் சென்றார். அந்த உதியை தண்ணீரில் கலந்து குடித்த மறுநிமிடமே அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்தது.

    1910-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று திடீரென சாய்பாபா அருகில் துணியில் எரிந்து கொண்டிருந்த தீக்குள் கையை விட்டு எடுத்தார். சில நாட்கள் சென்ற பிறகே ஒரு ஊரில் தீக்குள் விழுந்து விட்ட கொல்லனின் குழந்தையை சீரடியில் இருந்தபடியே அவர் தூக்கி காப்பாற்றி இருப்பது தெரிந்தது. அது போல முதலாம் உலகப் போரின் போது போர்க் கப்பலில் இருந்த தன் பக்தனை குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றி பாபா அற்புதம் செய்தார்.

    இப்போதும் சீரடி சாய்பாபா இது போன்ற அதிசயங்களை, அற்புதங்களை நிகழ்த்தியபடிதான் உள்ளார். அந்த அதிசயத்தை அனுபவித்த பாக்கியசாலிகளில் பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபாவும் ஒருவர். கோபிசெட்டிபாளையத்தில் வசிக்கும் இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள், 125-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது சீரடி சாய்பாபா அற்புதம் நிகழ்த்தினார். அந்த அற்புதத்தை எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா தன் கைப்பட எழுதியுள்ளார். படியுங்கள்....

    நான் உன்னுடனேயே இருக்கிறேன். உன்னை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. என்கிறார் பாபா. அது நமக்குத் தெரிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத சூட்சும ரூபமாக அவர் நம் எல்லாத் தருணங்களிலும் உறுதுணையாக நிற்கிறார். நினைக்காத பல துன்பங்கள் நம்மை வந்து சேரும்போது அதை சமாளித்து, துணிந்து நிற்கும் ஆற்றலைத் தருகிறார். அதற்கு வழியும் காட்டுகிறார்.

    சாய்பாபா


    எனக்கு 1992-ல் பர்த்தி பாபாதான் அறிமுகம். எனக்கு ஒரு நோய் வந்து டாக்டர்கள் பிழைக்காது என்று கைவிட்ட நிலையில் அவர் எங்கள் வீட்டில் விபூதி, குங்குமம், மஞ்சள் என்று மழையாகப் பொழிந்தார். அன்றிலிருந்து அவர் எங்கள் இல்லத்திலும், இதயத்திலும் குடி ஏறினார். சீரடி பாபா பற்றி கேள்விப்பட்டதில்லை. கோபி அருகில் எந்தக் கோவிலும் இல்லை. கோவையில் மட்டும் ஒரு கோவில். அங்கு போனதில்லை.

    வியாழன் பஜனை செய்யும் போது சீரடி சாய், பர்த்தி சாய் என்று பாடுவோம். என் வீட்டில் அவர் படம் கூட இல்லை. அப்படி இருக்கும்போது 2010-ல் மார்ச் 2 அன்று எனக்கு திடீரென்று மாரடைப்பு வந்தது. ஆம்புலன்சில் கோவை குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார்கள். டாக்டர் கோவை செல்லும் வரை தாங்குவது கஷ்டம் என்றாராம் என் தோழியிடம். ஆனால் எனக்கு நினைவு இருந்தது. தெளிவாகப் பேசினேன். அப்போது நானும் அம்மாவும் மட்டும்தான். அப்பா, இறந்துவிட்டார். எனக்கு உடன் பிறந்தது அக்காள் மட்டுமே. சகோதரன் கிடையாது. என் சக ஆசிரியை, பக்கத்து வீட்டு பெண்தான் அம்மாவோடு ஆம்புலன்சில் வந்தது.

    என் மனம் மட்டும் சாய்ராம், சாய்ராம் என்றே உச்சரித்தது. கண்ணை மூடினால் பர்த்தி பாபா உருவம் இல்லை. ஒரு வெள்ளை ஆடையில் வயதான ஒருவரின் தோற்றம் என் தலையைத் தடவிக் கொடுத்தது. ஆஸ்பத்திரியில் ஐ.சி.யூ வில் ஒருமணி நேரம்தான் படுத்து இருந்தேன். பிறகு அந்த நர்சுடன் பேசி, பக்கத்து கட்டிலில் படுத்திருந்த சிறுவனுக்கு ஆறுதல் சொல்லி மருந்து சாப்பிட வைப்பது என்று இயல்பாக மாறி விட்டேன். டாக்டர் கூட என் அக்காவிடம் உங்களது தங்கை ஐ.சி.யூ வில் டீச்சர் வேலை செய்கிறார் என்றார். எந்தநேரமும் என் தோளில் ஒரு கரம் தொட்டுக் கொண்டே இருக்கும் உணர்வு. கை வைத்துக்கொண்டே இருக்காதீங்கம்மா. கஷ்டமா இருக்கு என்றேன் நர்சிடம். நாங்க உங்களைத் தொடவே இல்லையே என்றார்கள் அவர்கள்.

    ஆஞ்சியோ செய்து, பைபாஸ் செய்யணும் என்றார்கள். மறுநாள் சாதாரண வார்டுக்கு மாற்றப் பட்டேன். லேசான தலைசுற்றல் இருந்தது. எழுந்து நடந்தால் தள்ளாடியது. டாக்டர் உடம்பு தேரட்டும். முப்பது நாள் கழித்து ஆபரேஷன் செய்யலாம் என்றார். அங்கு அரசு ஹெல்த் இன்சூரன்ஸ் அப்போது இல்லை. அதனால் நான் வேறு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும். எங்கு போவது, யாரைப் பார்ப்பது என்று குழப்பம். எந்த முடிவும் நான்தான் எடுத்தாக வேண்டும். குழப்பத்தில் மீண்டும் உடல் நடுங்கியது.

    அன்று இரவு விளக்கு அனைத்து முழு இருளில் மூழ்கியிருந்த என் அறையில் எனக்கு நேர் எதிர் கண்ணாடியில் முழு உருவத்தில், வெள்ளை ஆடையில் கனவில் வந்த பெரியவர் உருவம். ஏனோ அதைப் பார்த்ததும் பயம் வரவில்லை. ஒரு பெரிய டியூப் லைட் நிற்க வைத்ததுபோல் பிரகாசம். மனம் முழுதும் பரவசம். அவரையே பார்த்தபடி படுத்திருந்தேன். தூங்கி விட்டேன்.

    மறுநாள் என் சித்தப்பா என்று ஒருவர் வந்தார். என் அப்பாவின் ஒன்று விட்ட தம்பி. இத்தனை வருடங்களில் அவரை நான் சந்தித்ததில்லை. என் உறவினர் மூலம் எங்களைப் பற்றி கேள்விப்பட்டவர் என் அக்காவைச் சந்தித்து, என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தவர், நான் இருக்கிறேன் என்றார். உடனே டிராவல் செய்து கோபி போக வேண்டாம் என்றவர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து போய்விட்டார். அற்புதத்தை என்னவென்று சொல்வது. அவர் வீட்டில் நுழையும்போது வாசலில் நேர் எதிரில் நான் கண்ட அதே வெள்ளை ஆடை பெரியவர் படம். யார் சித்தப்பா? என்று கேட்டேன்.

    “இவர் சீரடி பாபா” என்றார். அவர் பாபாவின் பக்தர். வீட்டில் சின்னக் கோவிலே கட்டியிருக்கிறார். அவர் இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துப்பார் என்றார். சிலிர்த்து விட்டேன். யாருமில்லாமல் அனாதையாக நின்ற தருணம் காட்சி தந்து நான் இருக்கிறேன் என்று தன் அடியவரையே அனுப்பி என்னை ஆக்கிரமித்தார்.

    அதன் பிறகு என்ன சொல்ல? மடமடவென்று விஷயங்கள் நடந்தது. சித்தப்பா இரண்டொருவரை விசாரித்து மே மாதம் கோவை ராமகிருஷ்ணாவில் எனக்கு ஆபரேஷன் நடந்தது. சங்கர் என்ற அந்த சித்தப்பாதான் அதன் பிறகு எனக்கு பாபாவைப் பற்றிய எல்லா விஷயங்களையும் சொன்னார். நிற்கும் பாபா என் வீட்டுக்கு வந்தார். சாய் சத் சரித்திரம் என்ற புத்தகம் வாங்கித்தந்தார்.

    அதன்பிறகு 2013-ல் சீரடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டம் பார்த்து பிரமித்து விட்டேன். சிறிது பயமும் கூட. இதில் எப்படி உள்ளே போய் பகவானை தரிசனம் செய்வது என்ற மலைப்பு. அங்கும் ஒரு வயதானவர் எனக்கு வழிகாட்டி எங்களை எந்த வழியில் செல்ல வேண்டும் என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார். அங்கும் கூட்டம் என்றாலும் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பாபாவைப் பார்த்தபடி நின்று விட்டேன். என்ன வேண்டுவது, அடுத்து நகர்வது என்ற நினைப்பு இல்லை. அந்த சமயத்தில் ஒரு மிகப்பெரிய பூங்கொத்து என் மேல் வந்து விழுந்தது. மிகச் சரியாக என் கைப்பைக்குள்தான் விழுந்தது. அது போதும் என்று வெளியில் வந்து விட்டேன். அங்கும் ஒரு பெரியவர் எனக்கு வேகமாக வந்து ஒரு உதி பாக்கெட்டைத் தந்துவிட்டு வேகமாகப் போய் விட்டார். யார், என்ன என்று அறிய முடியவில்லை.

    இன்று வரை அவர் எனக்கு ஒவ்வொரு நிமிடமும் துணை நிற்கிறார். சோர்ந்து விழும்போதெல்லாம் எழுந்து நிற்க கை கொடுக்கிறார். அவர் என் வாழ்வில் நுழைந்த பிறகுதான் நம்ப முடியாத சந்தோசங்கள் எனக்கு நிகழ்ந்தது. சோதனைகள், வேதனைகள் வந்தாலும் கர்ம வினையை அழிக்க முடியாது. ஆனால் அதைத் தாங்கி நிற்கும் மன தைரியத்தைத் தருகிறார்.

    வெறும் பொழுதுபோக்கு நாவல்கள் என்று எழுதிய என்னை ஆன்மிகம், இலக்கியம், இதிகாசம் என்று எழுத வைக்கிறார். பல விருதுகள், பரிசுகள் அதன் பிறகுதான் கிடைத்தது. சங்கர் சித்தப்பா நடமாடும் சாய்ராமாக இன்று வரை எனக்கு சீரடி பாபா பற்றிய அற்புதங்களை, அவர் கோவில்களை அறிமுகப்படுத்தி கூட்டிச் செல்கிறார்.

    இப்போது கோபியைச் சுற்றியும் நிறைய பாபா கோவில்கள் வந்து விட்டது. முடிந்த போது போவேன். அவர் நம் நம்பிக்கையையும், பொறுமையும் மட்டுமே கேட்கிறார். அது இருந்தால் போதும். நிச்சயம் அவர் நம்மை எப்படி வந்தார் என்று தெரியாமல் வந்து காப்பார்.

    கண்ணாடியில் காட்சி தந்து என்னை இன்று முழுமையாக ஆட்சி செய்கிறார் பாபா.
    Next Story
    ×