search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒளிமயமான எதிர்காலம் அமைய ஒளிவிளக்கு ஏற்றுங்கள்
    X

    ஒளிமயமான எதிர்காலம் அமைய ஒளிவிளக்கு ஏற்றுங்கள்

    செல்வம் தருபவள் திருமகள். அந்தத் திருமகள் நம்மைத் தேடி வர, பல வழிகளில் வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திரு விளக்கு பூஜை.
    உலகில் வாழும் ஒவ்வொரு வரும் எந்த வழியிலாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு தான் வாழ்கிறார்கள். ஒரு சிலருக்கு அந்தக் குறிக்கோள் உடனடியாக நிறைவேறி விடுகிறது; சிலருக்கு தாமதப்படுகிறது. ஒரு மனிதன், பொருளாதார நிலையில் உயர வேண்டுமானால் லட்சுமியின் கடைக்கண் பார்வை இருந்தால் போதும். அந்த லட்சுமி நம்மைப் பார்க்க வேண்டுமானால் நாம் பல நல்ல வழிமுறைகளைக் கையாள வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டும் ஒரு மனிதனுக்குப் போதாது. அந்தப் பொருளாதாரத்தை பலருக்கும் கொடுத்து உதவும், நல்ல மனதையும் அவன் பெற்றிருக்க வேண்டும்.

    செல்வம் தருபவள் திருமகள். அந்தத் திருமகள் நம்மைத் தேடி வர, பல வழிகளில் வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் திரு விளக்கு பூஜை. “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவர் வாக்கு. இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் செல்வந்தனாக வாழ ஆசைப்படுகிறான். செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலை என்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. பணம் வருவது ஒரு பெரிய செயல் அல்ல. வந்த பணம் கையில் நிலைத்திருக்க வேண்டும், அதுதான் முக்கியம்.

    ‘பெண்கள் சிரித்த முகத்தோடு, கோபப்படாமல் இருந்தால் ஸ்ரீதேவி சீக்கிரம் நம்மை நாடி வருவாள்’ என்று புராணங்கள் கூறுகின்றன. சினம் இருந்தால் பணம் வராது என்பார்கள். முதலில் குடும்பங்களில் ஏற்படும் தேவையற்ற கோபங்களைத் தடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அன்பைப் பகிர்ந்துகொண்டால் ஆத்திரம் குறைந்துவிடும். அமைதி நிலவி வரும்.

    குறிப்பாக குடும்பப் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு எந்தச் செயலையும் செய்யக்கூடாது. நாகரிக காலத்தில் கோவிலுக்கு கூட தலைவிரிக் கோலமாகத் தான் வருகின்றனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் கண்டிக்க வேண்டும். திருமணமாகி ஒரு பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, முதன் முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது மரபு. குத்து விளக்கிற்கு ஐந்து முகங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. அன்பு, மனஉறுதி, சகிப்புத் தன்மை, நிதானம், சமயோஜித புத்தி ஆகிய ஐந்தும் வரும் பெண்ணுக்கு இருந்தால், குடும்பம் குல விருத்தியாகும் என்பதுதான் குளத்து விளக்கு ஏற்றுவதன் தத்துவம் ஆகும்.

    பெண்கள், தினமும் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இல்லங்களில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். லட்சுமியின் கடைக்கண் பார்வை இருந்தால் தான் லட்சாதிபதி களும், கோடீஸ்வரர்களும் உருவாக முடியும். தீபத்தை எப்படி ஏற்றுவது? எந்த வகை எண்ணெய் ஊற்றுவது?, எத்தனை முகங்கள் ஏற்றுவது? எந்த திசை பார்த்து ஏற்றுவது? போன்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் தோன்றுவது இயற்கை.

    திருவிளக்கு பூஜை செய்வதற்கு இல்லத்தை புனிதப்படுத்தி முறையாக விளக்கேற்றி, அஷ்டலட்சுமி படத்தை வைத்து, அஷ்டலட்சுமி கவசம், அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் பாடி இனிப்புப் பொருள் நைவேத்தியம் செய்து வைத்து தீபம் காட்டி வழிபட வேண்டும். இப்படி தினமும் வழிபட்டால் லட்சுமி நிலையாக இல்லத்தில் குடியிருந்து அருள்புரிவாள். வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் இல்லம் செழிப்பாகும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அகல்விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால், எப்படிப்பட்ட கடுமையான பிரச்சினையும் எளிதில் அகன்றுவிடும். தீபம் ஏற்றி வழிபடு வதன் மூலம் நம்முடைய பாவங்கள் படிப்படியாக குறையும். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு எண்ணெய் உகந்தது. எல்லா எண்ணெய்யும் கிடைக்காதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நன்மைகள் நாளும் வந்து கொண்டேயிருக்கும்.

    இப்படிப்பட்ட விளக்கிற்கு ஒளிகொடுக்க எந்த வகையான திரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சிலரின் கேள்வி. எல்லாத் தடைகளும் அகன்று மகாலட்சுமியின் பூரண அருள் கிடைக்க, தாமரைத் தண்டு திரி உபயோகிப்பது நல்லது. கிடைக்காத சூழ்நிலையில் பஞ்சுத் திரியை உபயோகிக்கலாம்.

    விளக்கின் முன் அமர்ந்து பாட வேண்டிய பாடல்.

    “விளக்கே! திருவிளக்கே, வேந்தன் உடன்பிறப்பே
    சோதிமணி விளக்கே! ஸ்ரீதேவிப் பொன்மணியே!
    அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே! காமாட்சி தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்து பஞ்சுத் திரி போட்டு
    குளம்போல் எண்ணெய் விட்டு கோலமுடன்
    ஏற்றிவைத்தேன்!
    ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க”

    விளக்கின் முன்வைக்கும் தேங்காய் மற்றும் பழ வகைகளை, சுமங்கலிக்கு கொடுத்து, நாமும் சாப்பிடலாம். திருவிளக்கு பூஜையை வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செய்து வழிபட்டால் அஷ்டலட்சுமியின் அருட்பார்வை முழுமையாக கிடைக்கும்.

    வீடுகளில் விளக்கு பூஜை செய்ய இயலாத சுமங்கலிப் பெண்கள், ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆடி மாதங்களில் கோவில்களில் நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்துகொண்டால் சுமங்கலி பாக்கியம் அமையும். வாழ்வில் சுகங்களும், சந்தோஷங்களும் நிறையும்.
    Next Story
    ×