search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி தஞ்சை பெரியகோவில் தேரில் பந்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்.
    X
    அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி தஞ்சை பெரியகோவில் தேரில் பந்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்.

    சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடக்கம்

    சித்திரை தேரோட்டத் துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
    தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 20 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி புறப்பாடும், பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேர் அலங்கரிக்கப்படவுள்ளது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு மேல் தேரில் பந்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார பணிகள் தொடங்கின. இதையொட்டி சுரேஷ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் தஞ்சையில் ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    Next Story
    ×