search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வம்சம் செழிக்க பழநிக்கு நடந்து வாங்க
    X

    வம்சம் செழிக்க பழநிக்கு நடந்து வாங்க

    தைப்பூசம் என்றதும் பழநியும் பாத யாத்திரையும்தான் நினைவுக்கு வரும். குறிப்பாக, செட்டிநாட்டுப் பகுதி பக்தர்கள் நினைவுக்கு வருவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    தைப்பூசம் என்றதும் பழநியும் பாத யாத்திரையும்தான் நினைவுக்கு வரும். குறிப்பாக, செட்டிநாட்டுப் பகுதி பக்தர்கள் நினைவுக்கு வருவார்கள். பாதயாத்திரையாக பழநிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்த பூமியல்லவா செட்டிநாடு.

    திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம், கோவை, பொள்ளாச்சி, பட்டுக் கோட்டை, அறந் தாங்கி என பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத் திரையாக பழநிக்கு வருகின்றனர். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது செட்டிநாடு. தொடங்கி வைத்த பெருமைக்குரியவர்கள் நகரத்தார் எனப்படும் செட்டிமக்கள்தான்.

    வியாபாரம், செழிப்பதற்கு இறையருளே காரணம். அதன் மூலம் கொழிக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, இறைவனுக்கே போய்ச்சேர வேண்டும் என விரும்பி, அதை செயல்படுத்தியும் வருகின்றனர் செட்டி மக்கள். ஆன்மிகம், வியாபாரம் இரண்டும் இரண்டு கண்கள் அவர்களுக்கு காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை முதலான பெரிய நகரங்களைக் கொண்ட அற்புதமான பகுதி செட்டிநாடு.

    மலேசியா, சிங்கப்பூர் என கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்றவர்களில் பெரும்பாலானோர் செட்டிமக்கள்தான். கடிதமோ கணக்கோ பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, அடுத்து ‘சிவமயம்‘ என்று எழுதுபவர்கள். சிவனாருக்கு தரும் முக்கியத்துவத்துடன் முருகப்பனையும் வணங்கினர். தங்கள் வாரிசுகளுக்கு அழகப்பன், பழநியப்பன், வேலப்பன், முருகப்பன், முருகம்மை, தெய்வானை, அழகம்மை, வள்ளியம்மாள் என்றெல்லாம் பெயர் சூட்டினர்.

    மழைக்காலம் முடிந்து, பனிக்காலமும் கடந்த நிலையில் குதூகலமானார்கள் செட்டி மக்கள் சிலர். ‘அப்பாட இனி உப்பு வியாபாரத்துக்கு கிளம்பலாம் என சந்தோஷத்துடன், வண்டியில் உப்பு மூட்டைகளை ஏற்றியபடி ஊர் ஊராகச் சென்று விற்றனர். ஒட்டன்சத்திரம், ஆயக்குடியைக் கடந்து பழநியை நெருங்கும் போது உப்பு மூட்டைகள் அனைத்தும் வீற்றிருக்கும். கையில் உள்ள காசு பணத்தை எண்ணிப் பார்த்து இது தர்மத்துக்கு அது முருகப்பெருமானுக்கு என்று சொல்லி கொண்டு மலையேறினர். முருகனை கண்ணார தரிசித்தனர். ‘இந்தாப்பா உன் பங்கு’ என்று லாபத்தின் ஒரு பகுதியை உண்டியலில் போட்டனர். மலை இறங்கியதும் இயன்ற அளவில் அன்னதானம் செய்து வண்டி பூட்டி ஊர் திரும்பினர்.

    இப்படி செழித்து வளர்ந்த இவர்களின் கனவில் தோன்றிய முருகன், என்னை தரிசிப்பதற்காகவே பழநிக்கு வாருங்கள். நடந்தே வாருங்கள். உங்கள் வம்சத்தை இன்னும் செழிக்கச் செய்கிறேன் என்று அருளினாராம். காரைக்குடி (வெள்ளை குமரப்பச்செட்டியார்), கண்டனூர் (சாமியாடி செட்டியார்) மற்றும் நெற்குப்பை (பூசாரி செட்டியார்) ஆகிய ஊர்களில் இருந்து தனித்தனியே கிளம்பிய செட்டிமார்கள், குன்றக்குடியைக் கடந்ததும் ஓரிடத்தில் சந்தித்து பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    சேர்ந்தே பழநிக்கு நடந்து சென்று முருகனை தரிசித்தனர். இந்த மனநிறைவை ஊர் மக்களிடம் சொல்லி மகிழ்ந்தனர். பிறகு நகரத்தார் பலரும் யாத்திரை செல்லத் தொடங்கினர். பழநியும் பாதயாத்திரையும் செட்டி நாட்டில் இன்னும் பரவியது. காலப்போக்கில் நாட்டார் எனப்படும் அம்பலகார இன மக்களும் பாத யாத்திரை சென்றனர். பின்னர் அந்தப் பகுதி மக்கள் அனைவருமே பழநி பாதயாத்திரையை மேற்கொண்டனர். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதும் செல்கின்றனர்.

    “அழகன் முருகனை வணங்குவதில் சைவ வைணவ பாகுபாடு இல்லை. ஜாதி வித்தியாசங்களும் கிடையாது. ஆண், பெண் பேதமும் இல்லை. கார்த்திகை அல்லது மார்கழியில் மாலை அணிந்து பச்சை நிற வேட்டியை கட்டிக் கொண்டு, விரதம், பூஜை, அன்னதானங்களில் ஈடுபட்டு, தைப்பூச நாளுக்கு ஏழு நாட்கள் முன்னதாக பாதயாத்திரையை தொடங்கி விடுவார்கள். அவர்கள் வளம் பெறுவதைக் கண்ட பிறரும் பின்னர் காவடி எடுக்க ஆரம்பித்தனர். இன்று பழனியாண்டவரைக் காணப் பல லட்சம் பேர் காவடியுடன் சென்று தங்கள் பக்தி காணிக்கையை செலுத்தி பயன் அடைகின்றனர்.
    Next Story
    ×