search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்கரத முருகனுக்குத் தைப்பூச வழிபாடு
    X

    தங்கரத முருகனுக்குத் தைப்பூச வழிபாடு

    பொதுவாகவே எல்லோரும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடு தான்.
    ஐப்பசி மாதம் வரும் சஷ்டி திதியில் தான் முருகப் பெருமான், சூரபதுமர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்காக பார்வதிதேவி, ஞான வேலை வழங்கிய நல்ல நட்சத்திர நாள் தான் பூசம் நட்சத்திரமாகும். பூச நட்சத்திரம் ஒரு போற்றும் நட்சத்திரம். போராட்டமான வாழ்வைப் பூந்தோட்டமாக மாற்றும் நட்சத்திரம். அந்த நட்சத்திரத் திருநாள் வருகிற 21.1.2019 (திங்கட்கிழமை) வருகிறது.

    பொதுவாகவே எல்லோரும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடு தான்.

    நமது ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையறிந்து, அதன் பலம் அறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும் ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் உடனுக்குடன் நற் பலன் காணலாம்.

    தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது தைப்பூசம் தான். உலகமெங்கும் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் தான் தை மாதமாகும். அந்த மாதத்தில் வரும் பூசத்தைத் தான் மாதப் பெயரோடு இணைத்து ‘தைப்பூசம்’ என்று அழைக்கின்றோம். அந்த அற்புதமான நாளில் முருகப் பெருமானை வழிபட்டு கொண்டாட மார்கழி மாதத்திலேயே பக்தர்கள் மாலைபோடுவார்கள். காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்துக் கவசப் பாராயணங்களைப் படித்து வழிபடுவார்கள். பதிகம் பாடி பரவசமடைவார்கள்.

    முருகப்பெருமானை ‘ஆறுமுகசாமி’ என்றும் அழைக்கின்றோம். திருநீறு அணிந்த முகத்தோடு அவரைச் சென்று வழிபட்டால் அருளும் தருவார்; பொருளும் தருவார். அருணகிரிநாதர் ஆறுமுகத்திற்கும் அழகான விளக்கம் சொல்கிறார். சிவனுக்கு ஓம்காரம் உரைத்த முகம் ஒன்று. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று. சூரனைச் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று. சூரனை வதைத்த முகம் ஒன்று. வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று. தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.

    இப்படி ஆறுமுகங்களைப் பெற்ற அழகனை, முருகனை, குமரனை, ஆதிசிவன் மைந்தனை, கார்த்திகேயனை, கடம்பனை, கதிர்வேலனை தைப்பூச தினத்தில் வழிபாடு செய்தால், வையகம் போற்றும் வாழ்வு அமையும்.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்குச் சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் கந்தனை கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வழிபடுவர். குன்றக்குடி, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை போன்ற ஆலயங்களுக்கும் சென்று ஆறுபடைவீடுகளில் அருகில் இருக்கும் கந்தப் பெருமானை பாத யாத்திரையாகச் சென்று வழிபட்டு வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். பாத யாத்திரையாக செல்ல முடியாதவர்கள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    பூச நட்சத்திரம் அன்று சூரபத்மனை வென்று மயிலும் சேவலுமாக மாற்றினார். அந்த நாளில் வழிபாடு செய்தால் இனிய வாழ்க்கை அமையும். காலையில் விரதம்இருந்து பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி கந்தரப்பம் நைவேத்தியம் செய்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    தொட்டதெல்லாம் துலங்கவும், சொல்லும் வார்த்தை வெல்லவும் பட்ட துன்பம் தீரவும், பகைஅனைத்தும் மாறவும், வெற்றி வாய்ப்பு சேரவும், வேலன் வள்ளியோடு நீ சுற்றி வந்து காக்கவா! சுகம் அனைத்தும் சேர்க்கவா! என்று பாடுங்கள். வள்ளி மணாளன் உங்களுக்கு வரங்களை அள்ளி, அள்ளித் தருவான். தெள்ளுத் தமிழ் முருகன் திருவருளைப் பெறுவதற்கு பூசத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். அன்றைய தினம் இல்லத்தில் வழிபடுவோர் பஞ்சமுக விளக்கில், 5 வகை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, 5 வகை நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    சிவல்புரி சிங்காரம்
    Next Story
    ×