search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தம்பிகளுக்காக யட்சனுடன் வாதிட்ட தருமர்
    X

    தம்பிகளுக்காக யட்சனுடன் வாதிட்ட தருமர்

    மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும்.
    இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும். இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக பல விஷயங்கள் அதில் இருப்பதை படிப்பவர்கள் உணரலாம்.

    பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாச காலம் முடிவடைந்து, ஓராண்டு காலம் அஞ்சாத வாசம் செய்ய வேண்டியதிருந்தது. அடர்ந்த வனத்தில் வசித்த அவர்களுக்கு ஒரு முறை தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அதனால் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் கொண்டு வரும்படி தருமர், நகுலனை அனுப்பினார்.

    அண்ணனது வார்த்தையை சிரமேற்கொண்டு சென்ற நகுலன், சற்று தொலைவில் தண்ணீர் நிறைந்த குளம் இருப்பதை பார்க்கிறான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு, சகோதரர்களுக்கு நீர் எடுக்கலாம் என்று குளத்தில் இறங்கச் சென்றான்.

    அப்போது, “எனது கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் தண்ணீரை அருந்து..” என்று ஒரு அசரீரி கேட்டது. அதை பெரிதாக எண்ணாமல் தண்ணீரை அருந்திய நகுலன் நினைவு இழந்து கரையில் விழுகிறான்.

    வெகு நேரமாகியும் நகுலன் வராததால் சகாதேவனை தருமர் அனுப்புகிறார். அவனுக்கும் அதே நிலை ஏற்படுகிறது. பின்னர், அர்ச்சுனன் மற்றும் பீமன் ஆகியோரும் குளத்திற்கு வந்து நீர் பருக முயன்று மயக்கம் அடைகின்றனர்.

    என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குழப்பமடைந்த தருமர், தானே குளத்தை நோக்கி வந்தார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. அதை கவனமாக கேட்டு, அதன் கேள்விகளுக்கு தருமர் பதிலளித்தார். அந்த அசரீரியை கவனமாக கேட்டு, யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார். அவற்றில் சில கேள்விகளுக்கான பதிலின் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.

    யட்சன்: மனிதனுக்கு சரியான துணை எது?

    தருமர்: துணிச்சல்.

    யட்சன்: ஒருவன் எப்போது புத்திமான் ஆகிறான்?

    தருமர்: பெரியோர்கள் அறிவுரைப்படி செயல்படும்போது.

    யட்சன்: பயிர் செய்பவருக்கு எது சிறந்தது?

    பதில்: மழைதான் சிறந்தது.

    யட்சன்: செல்வம், அறிவு இருந்தும் ஒருவன் இறந்தவன் ஆவது எப்போது?

    தருமர்: விருந்தினர், முன்னோர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதபோது.

    யட்சன்: பூமியை விட தாங்கும் சக்தி பெற்றது எது?

    தருமர்: ஒரு தாயின் மனம்.

    யட்சன்: ஒருவனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

    தருமர்: அவனது தந்தை.

    யட்சன்: காற்றை விட வேகமானது எது?

    தருமர்: மனிதனின் மனம்.

    யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கவனிக்கத்தக்கது எது?

    தருமர்: கவலை.

    யட்சன்: தனது வேகம் காரணமாக வளரு வது எது?

    தருமர்: நதி.

    யட்சன்: தனது ஊரை விட்டு செல்ப வனுக்கு நண்பன் யார்?

    தருமர்: அவன் பெற்ற கல்வி.

    யட்சன்: திருமணம் ஆனவனுக்கு நல்ல தோழமை தருவது யார்?

    தருமர்: அவன் மனைவி

    யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?

    தருமர்: நல்ல வைத்தியன்.

    யட்சன்: சாகப்போகிற நிலையில் உள்ளவ னுக்கு உற்ற தோழன் யார்?

    தருமர்: அவன் செய்த தர்மங்கள்.

    யட்சன்: புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?

    தருமர்: ஒருவன் செய்யும் தானம் மூலமாக.

    யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலை பெறுகிறது?

    பதில்: நல்லொழுக்கத்தின் மூலம்.

    யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங் களில் உயர்ந்தது எது?

    தருமர்: மன திருப்தி.

    யட்சன்: சிறந்த தருமம் எது?

    தருமர்: ஜீவ காருண்யம்.

    யட்சன்: மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறவன் யார்?

    தருமர்: கர்வம் இல்லாதவன்.

    யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?

    தருமர்: கோபத்தை.

    யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

    தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுபவன்.

    யட்சன்: செல்வம் மிகுந்தவன் யார்?

    தருமர்: அமைதி மற்றும் தெளிவுடன் பொருள்களை சமமாக நோக்குப வன்.

    யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகை வன் யார்?

    தருமர்: கோபம்

    யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?

    தருமர்: பேராசை.

    யட்சன்: யார் சாது?

    தருமர்: எல்லா உயிர்களிடத்திலும் அன்போடு இருப்பவன்.

    யட்சன்: எது தைரியம்?

    தருமர்: ஐம்புலன்களை அடக்குவது.

    யட்சன்: எந்த மனிதன் பண்டிதன் ஆகிறான்?

    தருமர்: தர்மத்தை கடைப்பிடிப்பவன்.

    யட்சன்: அறம், பொருள், இன்பம் ஆகி யவை ஒன்றாக சேருவது எப்படி?

    தருமர்: கணவனும், மனைவியும் இணைந்து செயல்படும்போது.

    யட்சன்: யார் அழிவற்ற நரகத்தை அடை வார்?

    தருமர்: தானம் கொடுப்பதாக கூறிவிட்டு இல்லை என்று சொல்பவன், தர்ம வழி செயல்கள், முன்னோர் சடங்குகளில் பொய் கூறுபவன், செல்வம் இருந்தும் பிறருக்கு தராத வன்.

    யட்சன்: இனிமையாக பேசுகிறவன் எதை பெறுகிறான்?

    தருமர்: மற்றவர்களின் அன்பை.

    யட்சன்: ஆலோசனை செய்து காரியம் செய்பவன் எதை அடைகிறான்?

    தருமர்: வெற்றி.

    யட்சன்: தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி எது?

    தருமர்: உயிரினங்கள் மரணமடைவது.

    யட்சன்: எது ஆச்சரியம்?

    தருமர்: இறந்தவர்களை பார்த்தும்கூட, மனி தர்கள் தங்களுக்கு மரணமில்லா தது போல் நினைத்து வாழ்நாளை கழிப்பது.

    தன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் தருமர் பதலளித்ததைக் கேட்டு, யட்சன் மகிழ்ந்தான். இதையடுத்து மயங்கி கிடந்த தருமரின் தம்பிகள் அனைவரும் எழுந்து அண்ணனுடன் சென்றனர்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியும் வரை யட்சனாக இருக்கும்படி சாபம் பெற்றிருந்த யட்சன், தேவனாக மாறி தனது உலகத்திற்குச் சென்றான்.
    Next Story
    ×