search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் தசரா அன்றும் - இன்றும்
    X

    குலசேகரன்பட்டினம் தசரா அன்றும் - இன்றும்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவில் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற விதம், விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், ‘முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு’ என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை. சில விஷயங்களில் மட்டும் மாற்றங்கள் வந்து விட்டன.
    முன்பெல்லாம் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள்.

    அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள்.

    ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள்.

    இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது. முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவார்கள். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

    முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன. முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். சிலர் விரத நாட்களில் வீட்டுக்கே வர மாட்டார்கள். உணவு, தூக்கம் மற்றும் தினசரி பழக்க வழக்கங்களில் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது.

    முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருஷங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது.

    ‘அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்’ என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள். வறுமை காரணமாக காதில் கம்மலுக்கு பதில் வத்தலை கட்டி அணிந்திருப்பார்கள். இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள்.

    குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள்.

    இப்போது காணிக்கை கேட்டால் ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையை கூட பெற வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று வசதி வாய்ப்புகளுடன் செல்வ செழிப்பான நிலையில் இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான். 
    Next Story
    ×