search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாமிரபரணி புஷ்கரம் வரலாறு
    X

    தாமிரபரணி புஷ்கரம் வரலாறு

    நெல்லை தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியுள்ளது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.
    குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.-10-.2018 அன்று இரவு 7.17 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதாவது தாமிரபரணி நதியில் குருபகவான் பிரவேசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புண்ணிய நதியில் நீராடக் கூடாது என்பதால், 12-10-2018 (வெள்ளி) அன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நெல்லையில் தொடங்கியுள்ளது.

    கி.பி. 1874-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு “மஹா புஷ்கரம்” என்ற மகோன்னத நிலையை, பெரும் மகிமையை தாமிரபரணி நதி அடையவிருக்கிறது. ‘மஹா’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். அகில ரூபமாக விளங்கும் இறைவனின் சொரூபமாகவே இந்நதி மாறி விடுகின்ற காலம் இது.

    இதனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணும் மகா பவித்திரம் (தூய்மை) ஆகிறது. அதை நெற்றியில் பூசிக் கொள்வதாலேயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. தாமிரபரணியிலிருந்து வீசும் காற்று தன் தேகத்தில் படுவதாலேயே ஆத்மா புனிதமடைகிறது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.

    சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நதி :

    சிவபெருமான், பார்வதி தேவியாரைக் கைலாய மலையில் திருமணம் செய்த பொழுது, தேவர் முதலியோர் வடதிசையில் வந்து குவிந்ததால் தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, “தென்நாடு செல்க” எனக் கட்டளையிட்டார். அக்கட்டளைக்கு அடிபணிந்த அகத்தியர் சிவபெருமானிடம், “அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தமக்குத் தெரியாது. ஆகவே அதை எமக்கு சொல்லித் தருக” எனக் கேட்டனர்.

    உடனே சிவபெருமான் அகத்தியரை தம் அருகில் அமர வைத்து அவருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். சூரியபகவான் அவர் முன் தோன்றி தமிழ் இலக்கணங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தார். முருகப் பெருமானும் அவ்வப்போது அகத்தியர் முன் தோன்றி தமிழ் மொழியின் பல சிறப்புக் கூறுகளை உபதேசித்ததாக கந்த புராணம் சொல்கிறது.

    முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் முதல்வராய் இருந்து தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அகத்தியர். பொதிகை மலையில் தங்கி அகத்தியரால் இயற்றப்பட்ட எழுத்துச் சொற்பொருள், யாப்பு, அணி முதலிய அடங்கிய இலக்கணத் தமிழ் நூல் “அகத்தியம்” எனப்படும். கலியுகத்திற்கு 4573 வருடங்களுக்கு முன் பிறந்தவர் அகத்தியர். கி.மு. 7673-ம் ஆண்டு கும்ப மாதத்தில் (மாசி மாதத்தில்) கும்ப ராசியில், கும்ப லக்னத்தில், ஒரு கும்பத்தில் பிறந்தவர் அகத்தியர். எனவே, இவருக்கு ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    அகத்தியரின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அவரால் இயற்றப்பட்ட ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூல் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது. அகத்தியர் பொதிகை மலையில் தங்கி தமிழ்ப்பணி செய்யும் போது சிவபெருமான் அவர் முன் தோன்றி “உனக்கு இங்கே என்ன வேண்டும்? கேள். தருகிறேன்” என்றார்.

    “எனக்கு நீராட நதி ஒன்று வேண்டும்” என்றார் அகத்தியர். உடனே, பொதிகை மலையில் நதி ஒன்றை உருவாக்கி அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார் சிவபெருமான். இந்நதி உருவான போது, அது தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் சூட்டினார் ஈசனார். காலப் போக்கில் அது தாமிரபரணி என்று மாற்றம் பெற்றது.

    தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானம் பாண தீர்த்தம் எனப்படும். இது பொதிகை மலையில் உள்ளது. இதை அடைவது மிகக் கடினம். 1730 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 125 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே புன்னைக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது தாமிரபரணி.

    வற்றாத ஜீவ நதியாக வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியில் தான் நடராஜப் பெருமானின் நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ளது.இந்நதிக்கரையில் ஏராளமான திருக்கோயில்கள் உள்ளன. ‘நவகைலாயம்’ என்று புகழ் பெற்ற ஒன்பது கைலாயங்கள் இந்நதிக்கரையில் உள்ளன. நவதிருப்பதி என்று புகழ் பெற்ற ஒன்பது வைணவ தலங்களும், தாமிரபரணி நதிக்கரையின் அருகிலேயே அமைந்துள்ளன.

    சைவமும், வைணவமும் ஞான சுகங்களை பிறப்பிக்கும் இடமாக தாமிரபரணி நதிக்கரை விளங்குகிறது. இத்தகைய புனித நதியான தாமிரபரணி நதியில் படைப்புக் கடவுளான பிரம்மனின் புஷ்கரம் வரும் 12-10-2018 அன்று முதல் கலந்து கரைந்து போகவிருக்கிறது. இதன் மூலம் தெய்வீகமான இன்னியல்பு தாமிரபரணிக்கு அதிகரிக்கவிருக்கிறது. புதிய புனிதம் ஒன்று அதற்கு வந்து சேரவிருக்கிறது.

    12-10-2018 முதல் 23-10-2018 வரை மஹா புஷ்கரம் என்ற பெயரோடு முற்றிலும் புனித நிலையில் 12 நாட்கள் பரமானந்த சொரூபமாய் நிலைத்திருக்கவிருக்கிறது தாமிரபரணி. பரம புண்ணியமயமாகும் இந்நதியில், எல்லாவற்றின் ஆத்மாவாகவும் விளங்குகின்ற பிரம்ம தேவர் அமர்ந்து அந்த நதியைத் தன்மயமாக்கிக் கொண்டு சகல ஜனங்களுக்கும் நன்மை உண்டாகும் பொருட்டு அருள்பாலிக்கின்றார்.

    இந்த தீர்த்தத்தில் பிரம்மாவோடு விஷ்ணுவும், ருத்திரரும் சகல தேவர்களுடன் வசிக்கிறார்கள். இந்த புஷ்கர தீர்த்தத்தில் (தாமிரபரணியில்) பலகோடி தீர்த்தங்கள் சங்கமமாகின்றன. அதனால் சகல தீர்த்தங்களிலும் நீராடிய பலனை இந்த புஷ்கர தீர்த்தமே அளிக்கிறது. புஷ்கர தீர்த்த ஸ்நானம் செய்பவரை அவருடைய பித்ருக்கள் எல்லோரும் மற்றும் தேவர்களும் வாழ்த்துகிறார்கள்.

    ஏனென்றால் அது பித்ருக்களுக்கும் மோட்சம் அளித்து தேவ கணங்களுக்கும் பிரீதி, சந்தோஷம் அளிக்கிறது.இதனால் தரித்திரம் நீங்கி சிறப்பான பலன்களை அடைய முடியும். மந்திரதந்திரங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தோஷங்கள் உங்களை நெருங்காது.



    சரி, இந்த 12 நாள் நீராடல் என்ற கணக்கு எப்படி வந்தது?


    ஜோதிட சாஸ்திரப்படி ராசிகள் மொத்தம் 12. ஒவ்வொரு ராசிக்கு ஒரு நாள் வீதம் 12 ராசிக்காரர்களுக்கு 12 நாள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    வ.எண்.  - தேதி -  கிழமை ராசி

    1.    12.10.2018     (வெள்ளி)     விருச்சிகம்
    2.    13.10.2018 (சனி)     தனுசு
    3.    14.10.2018 (ஞாயிறு)     மகரம்
    4.    15.10.2018 (திங்கள்)     கும்பம்
    5.    16.10.2018     (செவ்வாய்) மீனம்
    6.    17.10.2018 (புதன்)     மேஷம்
    7.    18.10.2018     (வியாழன்) ரிஷபம்
    8.    19.10.2018     (வெள்ளி)     மிதுனம்
    9.    20.10.2018 (சனி)     கடகம்
    10.    21.10.2018 (ஞாயிறு)     சிம்மம்
    11.    22.10.2018 (திங்கள்)     கன்னி
    12.    23.10.2018 (செவ்வாய்) துலாம்

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும்.

    மலர் தூவி வழிபடுதல் :


    நல்ல மனதுக்குப் புறச்சின்னமாய் அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும், எழிலும், மணமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனது என்றென்றும் மலர் போன்று இருத்தல் வேண்டும். அத்தகைய மனதைக் கடவுளிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் மலரை எடுத்துக் கடவுளுக்குத் தூவுகிறோம். அச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல் ஆகிறது.

    தாமிரபரணி நதியில் நீராடி முடித்தவுடன் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர்களை நதியில் விடுவதும், மஞ்சள் துண்டுகளைப் போடுவதும், மஞ்சள் தூளைக் கொட்டுவதும் சிறந்த செயலாகும். பொருள் வசதி கொண்டோர் தங்கக் காசுகளை நதி நீரில் விடலாம். தாமிரபரணி நதிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து பூஜை செய்வது சிறப்பு.

    சிரார்த்தம் (திதி) கொடுத்தல் :

    “புஷ்கரம் எனும் புனித நதிக்கரையில் செய்யப்பட்ட சிரார்த்தம், ஜபம், ஹோமம், தபசுகள் அட்சயமான (அழிவற்ற) பலனைக் கொடுக்கின்றன” என்று வியாச முனிவர் கூறுகின்றார். இங்கே திதி கொடுப்பது காசி, கயாவில் கொடுப்பதற்குச் சமம். இங்கே பிண்ட தானம் செய்பவர் தனது பித்ருக்கள் அனைவருக்கும் திருப்தியளித்தவர் ஆகிறார். அவருடைய பித்ருக்கள் பிரளய காலம் வரையிலுமே மிகவும் திருப்தியுடன் இருப்பார்கள். இங்கே பித்ரு காரியம் செய்பவர் தனது மூதாதையர் அனைவரும் விமோசனம் அடைவதற்கு வழி செய்தவராவார்.

    நதிக்கரையில் பித்ரு காரியம் செய்பவர்கள் ஒரு சிறிய துணிப் பந்தல் அமைத்து அதனடியில் அமர்ந்து இதைச் செய்ய வேண்டும். வெட்ட வெளியில் செய்யக்கூடாது என்பது தர்ம சாஸ்திர விதி.


     
    தாமிரபரணியில் எங்கே நீராடலாம்? :

    தாமிரபரணி நதிக்கரை யில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை மொத்தம் 143 படித்துறைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    இதில் எந்த படித்துறையில் வேண்டுமானாலும் நீராடலாம்; திதி கொடுக்கலாம்; தானம் செய்யலாம் என்றாலும் நவகைலாயம் அமைந்துள்ள ஒன்பது சிவ திருத்தலங்களில் நீராடுவது அதிக மகிமை உடையதாகும்.

    நடராஜமூர்த்தியின் ஐந்து நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ள திருநெல்வேலி தாமிரபரணி நதி “பிரம்ம தீர்த்தம்” எனப்படும். ஆகவே, திருநெல்வேலி நகர் முழுமையும் உள்ள தாமிரபரணி நதியில் நீராடுவதும் அதிகமான நற்பலனைத்தரும். ஆலயம் உள்ள தலத்தில் ஓடும் நதி அதிக சுபகரமானதாகும். அது அதிக சுகத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். ஆகவே ஆலயம் உள்ள இடங்களில் நீராடுவது நல்லது.

    யாகம் நடத்துதல் :

    உலக மக்கள் நலன் கருதி புஷ்கர தீர்த்தக் கரையில் 12 நாட்களும் யாகம் நடத்த வேண்டும் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.தாமிரபரணி நதி பாய்கின்ற ஊர்களில் வசிக்கின்ற மக்கள் எல்லாம் ஒன்று கூடி யாகம் நடத்தினால் ஊர் செழிக்கும், ஒற்றுமை மேலோங்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ராசிக்காரர்கள் ஒன்று கூடி நிதி திரட்டி இந்த யாகத்தை நடத்தி நன்மை பெறலாம்.

    12-10-2018 அன்று விருச்சிக ராசிக்காரர்களும், அதன் பின்னர் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களும் என வரிசையாக 12 நாட்கள் யாகம் நடத்தலாம். ‘புஷ்கர்’ என்றால் தாமரை. பிரம்மாவின் கையிலிருந்து தாமரை ரசாதலத்தின் மேல் விழுந்ததின் காரணமாக புஷ்கர தீர்த்தம் உண்டாயிற்று என்று பத்ம புராணம் கூறுகிறது. பிரம்மம் என்று சொல்லப்படுகின்ற பரம்பொருளே யாகங்களுக்கு தலைவரான சாஸ்வதப் பிரபு ஆவார்.

    யாகங்களை நாம் நடத்துவதன் மூலம் பிரம்மன் முதலான அனைத்து கடவுளர்களும் அந்த யாகங்களில் தோன்றி நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.
    அந்தக் காரணத்தினால் இவ்விடத்தில் சிரத்தையோடு வேத பாடங்களை உச்சரிப்பவர்களும், விதிமுறைப்படி மந்திரங்களை உச்சரிப்பவர்களும் குரு பகவானின் கிருபையால் பல நன்மைகளை அடைவார்கள்.

    ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திக் கச்சேரிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வில்லிசை, நாதஸ்வர கச்சேரிகள், நாட்டியாஞ்சலிகள் என நாளும் ஒரு பக்தி நிகழ்ச்சி நடத்தி அன்னை தாமிரபரணியிடம் சிரத்தை, பக்தி, விசுவாசம் கொண்டு அத்யாத்மிக அன்போடு உங்களை பரிபூரணமாக்கி ஒருவிதமான கசப்பும் இல்லாமல் ஊர் முழுக்க ஒற்றுமையோடும் வளமோடும் ஆயுள் ஆரோக்கியத்தோடும் வாழப் பிரார்த்திக்க வேண்டும்.

    பஜனை, தியானம் :

    இறைவன் ஆட்சி புரியும் உன்னதமான தாமிரபரணி நதிக் கரையில் விடியற்காலை சாத்வீகமான நேரத்தில் பிரார்த்தனை, தியானம், காயத்ரி ஜபம், பிராணாயாமம், பஜனை, ஜபம், நாம சங்கீர்த்தனம் இவைகளைச் செய்வதால் சாந்தி, ஆனந்தம், விவேகம், வைராக்கியம் எல்லாம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் 15 நிமிடம் தியானம் செய்தால் வேறு காலத்தில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்கு சமமாகும்.

    எல்லா மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானிகள், தபஸ்விகள், ஆன்மீகப் பெரியவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வருகை தர விருப்பம் கொண்டு அதற்கான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தாமிரபரணி நதி தீரம் இப்போதே தீபங்களால் சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது.

    144 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நீராடும் நல்லதோர் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இனி 2162 ஆம் ஆண்டில்தான் இந்தப் பெரும் பாக்கியம் நமக்குக் கிட்டும். எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை மனப் பூர்வமாகச் செய்தால் பகவான் அதற்குப் பரிபூரணமாக அனுக்கிரகம் புரிவார்.

    இந்த நதி நீராடல், சிரார்த்தம், தானம் இவைகளை மனப் பூர்வமாகச் செய்து ஒவ்வொருவரும் பேரானந்தத்தையும், தெய்வீக சாந்தியையும், வாழ்வில் வெற்றியையும் அடைய வேண்டும். மண்ணையும் மனிதனையும் வளமாக்கும் அன்னை தாமிரபரணியின் அருள் எப்பொழுதும் உங்கள் மேல் இருக்கட்டும்.

    புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனையும் தரும், இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறுவார்கள்.

    தாமிரபரணி மகாத்மியம் :

    வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம்.

    தாமிரபரணியில் கல்கி அவதாரம் :


    தாமிரபரணி நதிக்கரையில்தான், தசாவதாரத்தில் நிறைவான அவதாரமான கல்கி அவதாரம் நிகழப்போவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
    தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உலகத்திலேயே மிக அரிதான விலை உயர்ந்த முத்துக்கள் விளைந்ததாக இலக்கியங்களும் வரலாறும் பேசுகின்றன. தொன்மை வாய்ந்த இந்தத் தாமிரபரணி நதியானது, கடல்கோள் நிகழ்வதற்கு முன்னதாக இன்றைய இலங்கை வரை சென்று செழுமை சேர்த்திருக்கிறது. இதுபற்றிய குறிப்புகள் வரலாற்று நூல்களிலும், இலக்கியங்களிலும் நிறையவே காணப்படுகின்றன.

    தாமிரபரணி பொதிகை மலையில் இருந்து சமவெளி பகுதியில் பாயும் முதல் இடமான பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் ஒருங்கிணைப்பில் தமிழ் ஆகம முறைப்படி 16 வகை தீப ஆராதனைகள் தாமிரபரணிக்கு வழிபாடு செய்ய உள்ளனர்.  மேலும் அகத்தியர் மாமுனிவரின் 10 அடி உயர திரு உருவச் சிலை விழா மேடை அருகே வைக்க பட உள்ளது.

    -எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் (ஜோதிடர்)
    செல்: 98407 67760



    Next Story
    ×