search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.
    X
    பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.

    திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கக்கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு தங்கக்கருட வாகன வீதிஉலா நடந்தது. கொட்டும் மழையில் நடந்த வாகன வீதிஉலாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அவதார வீதிஉலா நடந்தது. அசுரர்களிடம் இருந்து தேவர்களை காக்க மகா விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். எனவே அதனை விளக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் பல வண்ணமலர்கள், பிரத்யேக தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மோகினி அவதாரத்தை ரசிக்கும் வகையில், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் உடன் வந்தார். வாகன வீதி உலாவின்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவின் முன்னால் நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது.

    பின்னர் சிகர நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை, தங்கக்கருட வாகன வீதிஉலா (கருட சேவை உற்சவம்) நடந்தது. பட்டு வஸ்திரம், கிளி ஆகியவற்றாலும், லட்சுமி ஆரம், மகர கண்டி, சகஸ்ர நாமாவளி ஆரம், கடிக அஸ்தம் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் மலையப்பசாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். உற்சவர் மலையப்பசாமி மற்ற நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தாலும் தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா... அனாத ரட்சகா, ஆபத் பாந்தவா கோவிந்தா... கோவிந்தா... என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், பக்தர்களின் கண்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    முன்னதாக கருட சேவையை பார்ப்பதற்காக நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் காலை 10 மணியளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு குடிநீர், மோர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வந்ததை சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீதிஉலாவில் மத்திய மந்திரி ஆர்.கே.சிங், திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர்யாதவ், தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ, கோவில் அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×