search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி பூஜையின் தத்துவமும், சிறப்புகளும்
    X

    நவராத்திரி பூஜையின் தத்துவமும், சிறப்புகளும்

    அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது.
    இந்தியா முழுவதுமே நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 9 நாளும் மாலை நேரத்தில் பூஜை ஆரம்பித்து இரவில் நடைபெறும் பண்டிகை என்பதுடன் முடிந்து 10-ம் நாள் விஜயதசமி என்றவாறு நவராத்திரி விழா முழுமை பெறுகிறது. நவராத்திரி என்து 9 இரவை குறிப்பிடுகிறது. இரவு என்பது இருள் மயமானது. அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த 3 நாள் லட்சுமி வழிபாடும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி வழிபாடும் நடைபெறுகின்றன.

    முதல் 3 நாட்களின் வழிபாடாக சிங்க வாகினி துர்க்கை வழிபாடு நிகழ்கிறது. துர்க்கை என்பவள் சக்தி ரூபம். உக்கிரத்தின் வடிவம். நமது உள்ளத்தில் உள்ள எதிரிகளை அழிக்க மனம் உறுதி பெறவேண்டும். மன உறுதியை பெற சக்தி வேண்டும். துர்க்கையை வழிபடுவதன் மூலமே உள் மனதில் சக்தியை பெற்று மன பலவீனங்களை எதிர்த்து போரிட முடியும் என்பதே அதன் தத்துவம்.

    இவ்வாறு பெறும் ஆத்ம சக்தியினால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகன்று மனதில் நற்குணங்கள் நிறைவதற்கு வழி பிறக்கும். அதற்காகவே அடுத்த 3 தினங்கள் மகாலட்சுமியை வழிபடுகிறோம். மகாலட்சுமியின் பூஜையின் மூலம் நற்குணங்களை பெறமுடியும். அன்பு, இரக்கம், கருணை, தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குண செல்வங்களை பெறவே இம்மூன்று தின வழிபாடு செய்யப்படுகிறது. இதில் பெறும் நற்குணங்களை கொண்டு மனம் புதிய உத்வேகத்துடன் ஞானம் பெறும்.

    கடைசி 3 நாட்களும் ஞானம், கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். ஞானத்தின் பிறப்பிடமான சரஸ்வதி தேவியை வணங்கி அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் பெற்று உலகம் சிறக்க, மனிதர்கள் சிறக்க வழி வகை செய்ய பூஜை மேற்கொள்ளப்படுகின்றன. இந்நாளில் செய்யப்படும் ஜப, தியான, ஹோமங்கள் வெற்றி பெறும் நோக்கில் விஜயதசமி என்பது பத்தாம் நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நான்கு நவராத்திரிகள் :

    பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 4 நவராத்திரிகள் உண்டு. சித்திரை மாதத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். ஆடி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பாக்ரபத (அ) சாரதா நவராத்திரி என கூறப்படும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியைதான் அனைவரும் கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தை சரத்காலம் என்று கூறுவர். சரத் காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுகின்றனர்.

    இந்த நவராத்திரி விழாவில் ஒருநாள் இணைந்து 10 நாள் தசரா விழாவாக மைசூர் சாமுண்டிஸ்வரி அம்மனுக்கு கொண்டாடப்படுகிறது. இதுவே மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி விழாவில் நவசக்தி வழிபாடு :


    9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் முப்பெரும் சக்திகளுக்கு உரிய தனித்தனி 3 சக்தி அம்சங்கள் உள்ளன. துர்க்கா தேவிக்கு மகேஸ்வரி, கவுமாரி, வராகி எனவும், லட்சுமிக்கு மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திரராணி எனவும், சரஸ்வதிக்கு சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி என்றவாறு அவரவர்க்கு உரிய சக்திகள் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் வரிசைப்படி நவசக்தி வழிபாடும் செய்யவேண்டும். இந்த 9 தேவியர்களில் ஒரு தேவி முதன்மையானவராகவும், மற்றவர்களை பரிவார தெய்வமாக கொண்டு நவசக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

    கன்னியர்கள் வழிபாடு :


    நவராத்திரி வழிபாட்டில் கன்னி வழிபாடு பிரதானமாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியரையும் ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபாடு நிகழ்த்தப்படும். கன்னிகளும், பெண் குழந்தைகளும் தேவியாக பாவித்து குடும்பத்தினர் அனைவரும் அவர்களை மகாசக்தியின் உருவமாக மனதார நினைத்து வழிபாடு செய்கின்றனர். நவராத்திரி என்பது குடும்பத்தினர் மன அழுக்குகளை நீக்கி மனபூர்வமாக சந்தோஷத்துடன் கொண்டாடும் விழாவாகும். 
    Next Story
    ×