search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் காட்சியை படத்தில் காணலாம்.
    X
    சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் காட்சியை படத்தில் காணலாம்.

    கொங்கணீஸ்வரர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

    காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இதனை திரளான பொதுமக்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காவேரிப்பாக்கத்தில் கொங்கணர் மகரிஷி வழிபட்ட ஞானகுழலேந்தி உடனுறை கொங்கணீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் ஒருகாலத்தில் கோட்டை கோவில் என்றும், ஞானகுழலேந்தி குங்கும வள்ளிஅம்பாள் உடனுறை கொங்கணீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

    கோட்டை கோவில் என்று அழைக்கப்பட்ட இக்கோவில் இன்று அதற்கான அடையாளம் எதுவும் இன்றி மூலவர் விமான கோபுரம், சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சைவபுரம் என்று அழைக்கப்படும் கொண்டாபுரம் கிராமம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் மனைவி வாசுகி பிறந்த ஊராகும். கலிங்கம், காந்தாரம், அயோத்தியா, அவந்தியா, பர்மா, பாரசீகம் உள்ளிட்ட 56 தேசங்களை ஆண்ட கொங்கணர் இல்லறத்தை துறந்து கானகம் மேற்கொண்டபோது இந்த ஊருக்கு வந்து இங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.

    அதனால் இக்கோவில் கொங்கணீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டது. அவருடன் மனைவி ஞானகிளியாம்பிகை உடன் வந்துள்ளார். பின்னர் கொங்கணர் இங்கு ஆசிரமம் அமைத்து ஈஸ்வரருக்கு பூஜைகள் செய்து தவம் புரிந்துள்ளார். சிறிது காலத்துக்கு பின்னர் அவர் திருப்பதி மலையடிவாரம் சென்று அங்கு ஜீவசமாதி அடைந்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் மூலவர் கொங்கணீஸ்வரர் மேற்கு நோக்கியும், குங்குமவள்ளி அம்மன் வடக்குதிசை நோக்கியும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் புரட்டாசிமாத மகாளய அமாவாசையன்றும், அதனை தொடர்ந்து 2 நாட்கள் மூலவர் கொங்கணீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் மாலை மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது. இக்காட்சியை திரளான பொதுமக்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் ஓம் சிவாய நம, தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×