search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரிய வழிபாட்டின் சிறப்பம்சங்கள்
    X

    சூரிய வழிபாட்டின் சிறப்பம்சங்கள்

    சூரிய வழிபாடு என்பது தினசரி மற்றும் ஆரோக்கிய நிகழ்வாக அறியப்பட்டாலும் சூரியன் தான் பூமியின் ஆக்க சக்தியில் ஒன்றாகவே திகழ்கிறது.
    பொங்கல் வழிபாட்டின் பிரதான கடவுளாக சூரிய பகவான் அறியப்படுகிறார். சூரியன் தினந்தோறும் காலையில் தோன்றி மாலையில் மறைபவன், காலை எழுந்தவுடன் சூரியனை வணங்குவது தினசரி நிகழ்வு. அதனையே உடல் நலம் காக்கும் யோகாசனமாக செய்தால் அதுவே “சூரியநமஸ்காரம்”.

    சூரிய வழிபாடு என்பது தினசரி மற்றும் ஆரோக்கிய நிகழ்வாக அறியப்பட்டாலும் சூரியன் தான் பூமியின் ஆக்க சக்தியில் ஒன்றாகவே திகழ்கிறது. இதனை அறிந்த நம்முன்னோர் இன்றைய தெய்வ உருவ வழிபாட்டிற்கு எல்லாம் முன்னரே இயற்கையை வணங்கினான். இயற்கை வணக்கத்தின் முழுமுதற் கடவுளும் சூரியனே. பழங்கால நாகரீக தொட்டில்களாக விளங்கிய சிந்துசமவெளியிலும், எகிப்து மற்றும் கிரேக்க நாகரீகத்திலும் சூரிய வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன.

    எகிப்தியர்கள் ஆமன்ரா என்றும், கிரேக்கர்கள் போபஸ்-அப்போல்லோ என்றும், ஈரானியர்கள் மித்ரா என்றும் சூரியனை போற்றி வழிபடுகின்றனர். கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு நிகழ்த்தப்பட்டதன் ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. இந்தியாவில் வேதகாலத்தில் இருந்து சூரிய வழிபாடு நிகழ்ந்ததாய் வேத நூல்கள் கூறுகின்றன. ஆகவே சூரிய வழிபாடு என்பது பழங்காலந்தொட்டு இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. வேத காலகட்டத்தில் சூரியவழிபாடு ஏற்பட்டதாய் கூறும் வேதநூல்களையே சூரியன் வடிவமாக சூரிய அஷ்டகம் கூறுகிறது. அதாவது காலையில் ரிக்வேதமாகவும், மதியம் யஜீர்வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேதமாகவும் சூரியன் திகழ்கிறான் என கூறுகிறது.

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்றவன்

    சூரியன் இயற்கை வடிவமைப்பின் முதல் கிரகமாக கருத்தப்படுகிறது. புராணத்தின்படி காசிபர்-அதிதி தம்பதியின் மகனாக பிறந்த விஸ்வான் என்பவரே சூரியன். இவருக்கு நான்கு மனைவிகள். செம்பொன் நிறமேனியுடன் காலசக்கரங்கள் சுழல ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் பயணிக்கின்றான். ரதத்தின் சக்கரமே காலசக்கரம் அதுவே காலமாக திகழ்கிறது. அதன் ஏழு நாட்களே ஏழு குதிரைகள். எனவே காலத்தின் கடவுள் சூரியன் என வேதம் கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் சூரியன் வெவ்வேறு பெயருடன் தன் மாறுபட்ட ஒளிகிரணங்களை பாய்ச்சி பயணிக்கிறான் என வேதம் கூறுகிறது. இதனை அறிவியலும் ஏற்கிறது.

    ஆயிரம் கரங்கள் நீட்டி என கதிரவனை புகழும் பாடலில் உள்ளது போல் கதிரவனின் ஒளிக்கதிர்கள் ஆயிரம் என்றவாறே உள்ளது. இது ஒவ்வொரு மாதமும் அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். எனவே அதற்கேற்ப சூரியனுக்கு 12 மாதங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளது. மேலும் தனிப்பட்ட 21 பெயர்கள் சூரியனுக்கு உள்ளன. அதுமட்டுமல்ல சூரியனின் ஆயிரம் பெயர்கள் உள்ளனவாம். அதனை கூறி அவரை புகழ்ந்து பாடினால் எண்ணிய எண்ணம் யாவும் திண்ணம் என வேதம் கூறுகிறது.

    தைப்பொங்கலில் சூரிய வழிபாடு

    சூரியன் தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயருடன் ஆயிரம் கதிர்களுடன் ஒளியை வீசுபவன். சூரியன் வடக்கு நோக்கி சொல்லும் உத்தராயணம் காலத்தின் முதல்நாள் என்பதால் பொங்களன்று சூரியவழிபாடு சிறப்புடன் செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி வடமாநிலங்களிலும் பல உலக நாடுகளிலும் இதே நாளில் சூரியவழிபாடு பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

    சூரியனை பிரதான தெய்வமாக கொண்டு பொங்கல் திருவிழா சூரிய வெளிச்சம்படும் வெட்டவெளியில் பொங்கல் வைத்து படையலிட்டு கொண்டாடப்படுகிறது. ஞாயிறு, ஆதவன், கதிரவன், செங்கதிரோன், கதிர்செல்வன் என செந்தமிழ் பெயர்கள் பல கொண்ட சூரியனை வணங்குவதன் மூலம் உலகமே செழிப்படையும். உடல் ஆரோக்கியத்தை அளிப்பவரும், மழை பெய்ய காரணமானவரும், இதயநோயை நீக்குபவரும், ஆன்மாவை எழுப்பி தன்வழி படுத்துபவரும் ஆன சூரியனை போற்றுவோம். நல்வளங்களை பெறுவோம்.
    Next Story
    ×