search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவடி பணிந்தால் தினம் நிலை உயரும்
    X

    திருவடி பணிந்தால் தினம் நிலை உயரும்

    அனைத்தும் வளமாக வேண்டுமானால் இறைவனின் இணையடிகளைப் பார்த்து வழிபாடு செய்வது அவசியமாகும். நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று இறைவனின் அடிமலர் போற்றுவோம்.
    ‘எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். சிரசு எனப்படும் தலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் அவை சாதாரண மனிதர்களுக்குத் தான். மனிதர்கள் புனிதர்களாக மாற இறைவனது பாதங்கள் தான்வழி வகுக்கின்றன. ஆண்டவனின் அருளே அவனது திருப்பாதங்களில் தான் தேங்கி நிற்கின்றது. எனவே அவனது திருவடியைப் பற்றினால் அருள்மழையில் நனைந்து ஆனந்த வாழ்வைப்பெறலாம்.

    ஆண்டவனின் வழிபாடு என்பதே அடி பணிதலில் தான் தொடங்குகிறது. அதனால் தான் ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்று திருவாசகத்திலே குறிப்பிடுகின்றார்கள். அவன் தாளை, அதாவது இறைவனின் திருவடியைப் பணிவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். ஞானிகள் தெய்வத்தின் திருவடி தரிசனம் அருள் வழங்கும், பொருள் வழங்கும், அகிலத்தில் மேன்மை தரும்.

    தலை தாழ்த்திப் பணிந்து நிற்கின்றோம், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறோம். இவையெல்லாம் கூட இறைவனின் பாதக் கமலங்களை வணங்குவதற்காகத் தான். இவ்வாறு வணங்கினால் நமது பாவங்கள் விலகி ஓடும். சாபங்களும் விலகி விடும்.

    இறைவனது திருவடியைப் பணிவதில் ஒரு தத்துவம் உள்ளது. வாழ்வில் ஒவ்வொருவரும் பெரியவர்களுக்கும், குருவாக விளங்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கீழ் படிதல் வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகத் தான் திருவடி வழிபாடு உருவாக்கப்பட்டது. எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் முதலில் இறைவனின் பாதம் தொடங்கி படிப்படியாக மேல்நோக்கி வணங்கி வாருங்கள். நமது வாழ்க்கையும் படிப்படியான உயர்ந்த நிலையை அடையும்.

    முண்டாசுக் கவிஞன் பாரதியாருடைய கவிதையை உற்று நோக்குங்கள். ‘கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடுவோம்!’ என்று அன்றைக்கே கணபதியினுடைய காலைத்தான் பிடிக்கச் சொல்லியிருக்கின்றார்.

    சரணம், சரணம் என்று இறைவனிடம் தஞ்சம் புக வேண்டும் என்று அடியார்கள் எடுத்துரைத்தார்கள். எண்ணும் பொழுதெல்லாம் இறைவனின் பாதங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இறைவனுக்கும் கரங்கள் பல இருந்தாலும் கூட, கால் மட்டம் இரண்டைத் தான் பெற்றிருக்கின்றனர். காரணம் அடியவர்கள் அப்பொழுது தான் பற்றிக் கொள்ள இயலும். நமக்கெல்லாம் கரங்கள் இரண்டுதான் உள்ளது. வலது கரம், இடது கரம். இந்த இரண்டு கரங்களால் எண்ணற்ற கால்கள் இறைவனுக்கு இருந்தால் எப்படிப் பற்றிக் கொள்ள இயலும் என்பதால் தான், கால்கள் இரண்டாகவும், கைகள் அள்ளிக் கொடுப்பதற்கு பலவாகவும் இருக்கின்றது என்பதை நாம் உணரலாம்.

    எல்லாத் தெய்வங்களும் கரங்களை உயர்த்தி நமக்கு அருளை வழங்கும் விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் திருப்பதி ஏழுமலையான் என்று போற்றப்படும் சீனிவாசப் பெருமாளாம், வெங்கடாஜலபதியைப் பாருங்கள். அவருடைய கை கீழ்புறத்தைக் காண்பிக்கும் விதத்தில் இருக்கும். என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்.



    உன் கவலைகள் மறைய, கனதனம் பெருக, என் பாதங்களைப் பற்றிக் கொண்டு என்னைச் சரணடைய வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் எழுந்தருளியுள்ளார்.

    இந்தத் திருவடிகளின் பெருமையை முழுவதுமாக உணர்ந்தவர்களுள், கூற்றுவ நாயனாருக்கு தனி இடம் உண்டு. இறைவனிடம் பொன்னார் மேனியனே! எனக்கு மணிமுடி தேவை. என் நாட்டை நல்லபடி வழி நடத்த உன் திருப்பாதங்களே என் மகுடமாக அமைய வேண்டும் என்று வேண்டினார். நடராஜப் பெருமான் பக்தன் மீது கருணை கொண்டு கூற்றுவனாரின் கனவில் காட்சி தந்து தனது பாதக்கமலங்களால் அவருடைய தலையில் வைத்து ஆசி தந்தார்.

    திருவடிகளைப் பற்றினால் காலனைக் கூட வெல்ல முடியும். இதற்கு திருக்கடையூர் வரலாறு சாட்சி கூறுகிறது. மார்க்கண்டேயனின் உயிரை எடுப்பதற்கு பாசக்கயிற்றை வீசினான் காலன். மார்க்கண்டேயன் அலறி ஓடி சிவலிங்கத்தை இறுக்கக் கட்டிக் கொண்டான். எமதர்மனால் வீசப்பட்ட பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. லிங்கத்தில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டார். காலனைத் தன் காலால் உதைத்தார். எம தர்மன் இறைவனைப் பணிந்து மார்க்கண்டேயனுக்கு விதி விலக்கு அளித்தது உலகறிந்த உண்மையல்லவா?

    இவற்றில் இருந்து இறைவனின் திருவடியைப் பற்றிக் கொண்டால் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கட்டாயம் நம்மைக் காப்பாற்றுவார். ஜோதி வடிவான ஆதிப் பரம்பொருளாகிய ஈசனின் அடிமுடி காண, மாலும் அயனும் முயன்றனர். திருவடி தேடிச் சென்றவர் திருமால், திருமுடி தேடிச் சென்றவர் பிரம்மன்.

    இறைவனின் திருவடியை முதலில் பணிந்தால் நம் மனதில் பக்குவம் ஏற்படும். எதிலும் தாழ்வு எண்ணாத உயர்ந்த நிலை வரும். நாம் தலையைக் குனிந்து வழிபட்டால் திருவடி தெரியும். திருமால் வீற்றிருக்கும் ஆலயங்களில் பாதச்சுவடுகளைப் பதித்த சடாரி வைப்பர். அகக்கண் திறந்து அனைத்தும் வளமாக வேண்டுமானால் இறைவனின் இணையடிகளைப் பார்த்து வழிபாடு செய்வது அவசியமாகும். நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று இறைவனின் அடிமலர் போற்றுவோம். அகிலம்போற்றும் நிலை பெறுவோம்.
    Next Story
    ×