search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த கருடன்
    X

    தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்த கருடன்

    கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்து தன் தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இது குறித்த கதையை பார்க்கலாம்.
    காசிப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்தாள். ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ என கேட்டாள்.

    அதற்கு வினதை ‘வெள்ளை நிறம்’ என்று பதிலளித்தாள்.

    கத்ருவோ, ‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள். விவாதம் வளர்ந்து போட்டியாக மாறியது.

    இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்று இருவரும் நிபந்தனை வகுத்துக் கொண்டனர்.

    கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கறுப்பு நிறமாக மாற்ற தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்க்கோடகன் செய்ய பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமைக் கொண்டாள். வினதை அடிமையானதால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் அடிமையாயினர். தாயின் அடிமையை நீக்கச் சென்ற கருடனிடம் தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால் உன் தாயான வினதைக்கு விடுதலை கிடைக்கும் என்றாள்.

    கருடனும், சரி என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர்களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன் தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார்.

    இதைப்பார்த்து இந்திரன் மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் கருடன், தன் தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதை கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு நீங்கள் மறுபடியும் இதைக் கொண்டு வந்து விடலாம் என்று கூறினார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தார்.

    கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்து தன் தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். கத்ரு மகிழ்ந்து கருடனை ‘ஸீபர்ணன்’ என்று போற்றினாள். கருடன் வேதமே வடிவானவர். ராமாயணத்தில் இந்திர சித்தன் எய்திய நாக பாசத்தால் ராமரும் லட்சுமணரும் திகைத்து நிற்கையில், கருடனின் காற்றுப்பட்டு ராம, லட்சுமணர்களை கட்டியிருந்த நாகாஸ்திரம் விலகியது. கருடனின் சகோதரரான அருணன், சூரியன் ரத சாரதியாக விளங்குகிறார்.
    Next Story
    ×