search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்ரா பவுர்ணமியையட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்.
    X
    சித்ரா பவுர்ணமியையட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்.

    திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

    திருவண்ணாமலையில் பிரசித்திப் பெற்ற சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலையில் பிரசித்திப் பெற்ற சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  மேலும், அம்மன் சன்னதி முன்பு நவகிரகம் அருகே உள்ள சித்ர குப்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது. இந்த திருநாள் அம்மனுக்கு உகந்தது என்பதால், சித்தர்கள் தரிசிக்க திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

    ரூபம் இல்லாமல் நடமாடுவதாக நம்பப்படும் சித்தர்களின் அருளை பெற லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வந்து வழிபடுவார்கள். அதிகாலை 12.09 மணிக்கு பவுர்ணமி ஆரம்பித்ததால் பக்தர்கள் நள்ளிரவில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

    தரிசனத்துக்காக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் பக்தர்கள் வழிபட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று இரவில் 10 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை 3.04 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதையட்டி, வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. 106 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த நிலையில் பகலில் வெயில் கொளுத்தும் நிலையில், கடந்த 2 நாளாக இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்தது.



    வெப்பச்சலனம் காரணமாக நேற்றிரவு சூறைக் காற்று வீசியது. தொடர்ந்து அரை மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே 100 டிகிரி மேல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    இதற்கிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் சுட்டெரித்த வெயிலிலும் குழந்தைகள், பெண்கள் குடும்பத்துடன் கிரிவலம் வந்தனர். பக்தர்களின் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் விண்ணதிர செய்தது.

    பக்தர்களின் வசதிக்காக, 2,146 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நகரை சுற்றிலும் 12 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, அன்பு நகரில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகத்துக்கும், நல்லவன் பாளையம் முதல் பழைய அரசு ஆஸ்பத்திரி வழியாக காமராஜர் சிலை வரைக்கும் 23 இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் 3 ஆயிரம் போலீசார் அசாம்பாவிதங்களை தடுக்க தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×