என் மலர்

  ஆன்மிகம்

  மதுரையில் இன்று கள்ளழகரை வரவேற்று தரிசனம்: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்
  X

  மதுரையில் இன்று கள்ளழகரை வரவேற்று தரிசனம்: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த அழகரை எதிர்கொண்டு ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
  மதுரையின் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 10 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் சிறப்பாக நடந்தது.

  இதனை தொடர்ந்து அழகர் மதுரைக்கு எழுந்தருளும் திருவிழா தொடங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு அழகர் கோவிலில் இருந்து தோளுக்கினியான் என்ற சுந்தரராஜ பெருமாள் கள்ளர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். வழியில் உள்ள பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தர ராஜன்பட்டி ஆகிய இடங்களில் தங்கி இன்று அதிகாலை 2.30 மணிக்கு மதுரை நகருக்கு எழுந்தருளினார்.

  வழிநெடுக அமைக்கப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட திருக்கண்மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவிலும் கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 6 மணிக்கு நகர் எல்லையான மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு (எதிர்சேவை) கள்ளழகரை வரவேற்றனர். பக்தர்கள் செம்புகளில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை நிரப்பி தீபாராதனை காட்டினர். அப்போது கோவிந்தா... கோவிந்தா... என்று கோ‌ஷமிட்டு தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து கள்ளழகர் புதூர் வழியாக அவுட் போஸ்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கும் பக்தர்கள் திரண்டு அழகரை தரிசனம் செய்தனர். அங்கிருந்து இன்று மாலை 5 மணிக்கு அழகர் புறப்பாடாகி அம்பலக்காரர் மண்டபத்துக்கு வருகிறார். இரவு 9.30 மணிக்கு தல்லா குளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு திருமஞ்சனமாகி, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

  பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை அணிந்து கொண்டு இரவு 12 மணிக்கு தமுக்கம் கருப்பண சுவாமி கோவிலுக்கு வருகிறார். அங்கு ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்படுகிறார். வழி நெடுக மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6.15 மணிக்கு வைகை ஆற்றில் இறங்குகிறார்.

  இந்த நிகழ்ச்சியை காண வைகை ஆற்றில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரளுகிறார்கள். இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அழகரை வரவேற்பதற்காக கள்ளழகர் வேட மணிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வந்துள்ளனர். இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளிக்கிறது.

  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதையொட்டி நாளை (9-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
  Next Story
  ×