என் மலர்

  ஆன்மிகம்

  சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளிய காட்சி.
  X
  சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளிய காட்சி.

  மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் “‘சிவாயநம, சிவாயநம” கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

  இத்தனை சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

  இதில் கடந்த 4-ந்தேதி சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் அவரது தாயாக வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியும், 5-ந்தேதி காலை சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


  திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

  9-ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சாமி புறப்பாடு நடந்தது. மலைக்கோட்டை உள்வீதியில் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு தேரிலும், சுவாமி-அம்பாள் மற்றொரு தேரிலும், அம்மன் ஒரு தேரிலும் காலை 6.25 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள்.

  பின்னர் 6.30 மணியளவில் சகல வாத்தியங்களுடன் கோவில் யானை லட்சுமி கால்களில் வெள்ளி கொலுசு அணிந்து முன்னே செல்ல திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாயநம, சிவாயநம என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழ ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு, நந்தி கோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக சென்று காலை 8.50 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு தேர்வரும் வீதிகளில் நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.


  காலில் கொலுசு அணிந்தபடி தேருக்கு முன் ஒய்யாரமாக நடந்து சென்ற மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி.

  தொடர்ந்து மாலை வரை சுவாமியும், அம்பாளும் தேரில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் இரவு தேரில் இருந்து கீழே இறக்கப்பட்டு கோவில் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

  திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகணன்(சட்டம்-ஒழுங்கு), பிரபாகரன்(குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர்கள் சீனிவாச பெருமாள், பெரியண்ணன், முருகேசன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சீத்தாராமன், சிவக்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசாரும், குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  மேலும் தேர் செல்லும் பகுதிகளில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நாளை காலை நடராஜர் தரிசனமும், பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
  Next Story
  ×