என் மலர்

  ஆன்மிகம்

  ஈரோடு சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  X

  ஈரோடு சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
  ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 18-ந் தேதி 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. பெரிய மாரியம்மன் கோவிலில் உள்ள கம்பத்திற்கு பகலில் மட்டுமின்றி நள்ளிரவிலும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

  நேற்று முன்தினம் காலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் இரவு மாவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மனின் திருவீதி உலா நடந்தது.

  ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலுக்கு அருகில் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெரியார் வீதி, அக்ரஹாரம் வீதி வழியாக தேர் சென்றபோது இருபுறமும் பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். பின்னர் அக்ரஹாரம் வீதியில் தேர் நிறுத்தப்பட்டது.

  இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மீண்டும் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டு கச்சேரி வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மீண்டும் தேர் வடம்பிடிக்கப்பட்டு சின்ன மாரியம்மன் கோவிலில் நிலை சேருகிறது. இரவு 9.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மனின் திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு சின்ன மாரியம்மனின் திருவீதி உலாவும் நடக்கிறது.

  வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கம்பங்களின் ஊர்வலம் நடக்கிறது. இதில் 3 கோவில்களிலும் நடப்பட்டு உள்ள கம்பங்கள் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆற்றில் விடப்படுகிறது. அப்போது மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுவதால் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வார்கள்.

  2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
  Next Story
  ×