search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் கோவில் தேரோட்டத்தின் போது முதல் தேரில் சுவாமியும், 2-வது தேரில் அம்பாளும் பவனி வந்த காட்சி.
    X
    திருவானைக்காவல் கோவில் தேரோட்டத்தின் போது முதல் தேரில் சுவாமியும், 2-வது தேரில் அம்பாளும் பவனி வந்த காட்சி.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேரோட்டம்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 23-ந் தேதி கோவிலின் 8 திசைகளிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி(ஜம்புகேஸ்வரர்) ஒரு தேரிலும், அம்பாள்(அகிலாண்டேஸ்வரி) மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகரும், சுப்ரமணியரும் சிறிய தேரில் புறப்பட்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    அதன்பின்னர், காலை 5.45 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய 4 பிரகாரங்களில் வீதி உலா வந்தது. காலை 7 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.



    பின்னர் காலை 7.30 மணிக்கு அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அம்பாள் தேர், சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம்பிடித்து இழுத்து வர காலை 10.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

    சுவாமி தேர் நிலைக்கு வந்த பின்னர் அம்பாள் தேர் காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை யொட்டி அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், சோமாஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல மேளதாளங்கள், வாண வேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்தனர்.

    தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்று விண்ணதிர கோஷம் எழுப்பி தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும் தான். தேரோட்ட ஏற்பாடுகளை கோவிலின் உதவி ஆணையர் ஜெயப் பிரியா மற்றும் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×