search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளஹஸ்தியில் பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உலா
    X

    காளஹஸ்தியில் பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உலா

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை அன்ன வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்ன வாகனத்திலும், உற்சவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    முன்னதாக, உற்சவ மூர்த்திகள் அலங்கார மண்டபத்துக்குக் கொண்டு சென்று பல வண்ணமலர்கள், மாலைகள், தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டனர். பின்னர் சிறப்புப்பூஜைகள், தீபாராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகள் கோவிலில் இருந்து புதிய ராஜகோபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சாமி வீதிஉலாவுக்கு முன்னால் பிரசார வாகனம் சென்றது. மேள, தாளம் முழங்க கோலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற நடனம், செண்டை மேள கச்சேரி, தூர்செட்டி அரங்கில் நாட்டிய, நடன கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது.

    சாமி வீதிஉலாவில் கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா, அறங்காவலர் குழு தலைவர் குருவய்யநாயுடு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்திரா, லோகநாதம்நாயுடு, நாராயணயாதவ், ஜெயகோபால், உமா, பிரமிளா, ரமேஷ் மற்றும் கோவில் ஆய்வாளர்கள் லோகேஷ், தனபால், நாகபூஷனம், அதிகாரி ஸ்ரீமன்நாராயணன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ராவண வாகனத்திலும், உற்சவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் மயில் வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பின்னர் இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
    Next Story
    ×