search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரியரிபிராட்டி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது
    X

    அரியரிபிராட்டி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது

    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள அரியரிபிராட்டி அங்காளம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அரியரிபிராட்டி அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே குண்டம் திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அப்போது ஒரு சமயம் பக்தர்கள் குண்டம் இறங்குவதை ஒரு நபர் புகைப்படம் எடுத்து உள்ளார். இதனால் அவருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. அதன்பிறகு அந்த நபர் அங்காளம்மனை வேண்டி பிரார்த்தனை செய்து உள்ளார்.

    இதன் பலனாய் அந்த நபருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்து உள்ளது. அதற்கு கைமாறாக ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழாவிற்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்து மரிக்கொழுந்தை தற்போது வரை பூஜைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், அம்மன் சன்னதியின் முன் நந்தி வாகனம் அமைந்து உள்ளது இந்த கோவிலின் தனிச்சிறப் பாகும்.

    பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படும் இந்த கோவில் தற்போது புணரமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் மாலை செண்டை மேளம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்தக் குடங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரிகளையும், தீர்த்தக்குடங்களையும் எடுத்து வந்தனர்.

    பின்னர் மாலையில் முதல் கால வேள்வி பூஜையும், தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால வேள்விபூஜை, மாலை 3-ம் கால வேள்வி பூஜையும் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×