search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரனால் கிடைத்த ஆட்சிப் பொறுப்பு
    X

    அரனால் கிடைத்த ஆட்சிப் பொறுப்பு

    மூர்த்தி நாயனாரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம்.
    28-7-2016 அன்று மூர்த்தி நாயனார் குருபூஜை

    மதுரை நகரில் வணிகத் தொழில் செய்து வந்தவர் மூர்த்தி நாயனார். இறைவனின் மீது மட்டுமே பற்று கொண்டு, வேறு எதன் மீதும் பற்று இல்லாமல் வாழ்ந்து வந்த சிவனடியார்களில் ஒருவர். இவர் தினமும் மதுரை சொக்கநாதரின் திருமேனிக்கு அணிவிக்கும் சந்தனக் காப்புக்கு, சந்தனம் அரைத்து கொடுக்கும் பணியை செவ்வனேச் செய்து வந்தார்.

    வடுகக் கருநாடு என்ற பகுதியை ஆளும் மன்னன் ஒருவன், தன் நால்வகை படையுடன் தென்திசை நோக்கி படையெடுத்தான். இதில் மதுரையம்பதியை பாண்டிய மன்னனிடம் இருந்து வென்று தன் வசப்படுத்திக் கொண்டான். நேர்மை என்பதை அறியாத அந்த மன்னன், தெய்வ பக்தி நிறைந்த சைவத் திருத்தொண்டர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். முக்தியைத் தரும் பக்தி மார்க்கமான சைவ நெறியை எதிர்த்தான்.

    கீர்த்தி மிகுந்த மூர்த்தி நாயனாருக்கும் இடர்மிக புரிந்தான். ஆனால் திடம் கொண்ட மூர்த்தி நாயனார், இடரை பொருட்படுத்தாது, தமது திருத்தொண்டினை, முன்பைவிடவும் பல மடங்கு அன்புடன் இறைவனுக்கு செய்து வந்தார். வடுக மன்னன் கொடுமைகள் பல செய்தும், மூர்த்தி நாயனார் திருத்தொண்டு செய்து வந்ததால், சந்தனக் கட்டைகள் கிடைக்கும் வழியை மன்னன் தடுத்து விட்டான்.

    இதனால் செய்வதறியாது தவித்த மூர்த்தி நாயனார், பரம்பொருளான சிவபெருமானிடம் முறையிட்டார். பெரும் முயற்சி செய்தும் அன்றைய தினம் சந்தனக் காப்பு நடத்துவதற்கு தேவையான சந்தனம் கிடைக்கவில்லை. பகல் பொழுது கழிந்து சென்று கொண்டிருந்தது. சைவ நெறிக்கு வந்த சோதனையை எண்ணி வருந்தினார் மூர்த்தி நாயனார்.

    மாலைப் பொழுதில் சோமசுந்தரரின் திருக்கோவிலை அடைந்தார். ‘ஈசனின் திருமேனிக்குப் பூசும் சந்தனக் கட்டைக்குத்தான் தடை வந்தது. சந்தனத்தை தேய்க்கும் கைக்கு எந்த தடையும் இல்லையே!’ என்று எண்ணியவர், அங்கிருந்த வட்டப் பாறையில் தனது கையை வைத்து தேய்த்தார். தோல் தேய்ந்து, நரம்பு எலும்புகள் முதலியன சிதைந்து போயின.

    இதைக் கண்டு பொறுக்க முடியாத இறைவன், உடனடியாக மூர்த்தி நாயனாரை தடுத்தாட்கொண்டார். நாயனாரின் முன்பு தோன்றிய ஈசன், ‘அன்பனே! அன்பின் மிகுதியால் இவ்வாறு செய்யாதே. உன்பால் கொடுமை செய்தவன் வலிந்து கொண்ட நாடு முழுமையும் நீயே ஆட்சி செய்யும் நிலை ஏற்படும். அப்போது நீதியை நிலைநாட்டு. நியதியுடன் அறப்பணியும், திருப்பணியும் செய்வாயாக. பின் சிவலோகம் வந்தடைவாயாக! என்று வாழ்த்தினார்.

    இறைவனின் வார்த்தையைக் கேட்டு கல்லில் கையை தேய்ப்பதை நிறுத்தினார். அவரது கை முன்போலவே பொலிவுடன் காணப்பட்டது.

    நல்லவர்களுக்கு தீங்கு செய்த வடுகமன்னன் கடும் நோயில் விழுந்து இறந்தான். அவையில் இருந்த அமைச்சர்கள், அடுத்த மன்னனை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து பட்டத்து யானையின் கண்ணை, துணியால் கட்டி, ‘இந்த அரசை ஆளும் தகுதி படைத்தவரை, தும்பிக்கையில் ஏந்தி வருக!’ என்று கூறி விடுவித்தனர்.

    கண் கட்டிவிடப்பட்ட யானை வீதிகளில் திரிந்து, கோவில் முன்பு நின்று கொண்டிருந்த மூர்த்தி நாயனாரை தூக்கிக் கொண்டு வந்தது. அதைக் கண்ட அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மூர்த்தி நாயனார் அடிமலர் வீழ்ந்து வணங்கினர். நாடெங்கும் வாழ்த்தொலி எழுந்தது.

    அப்போது மூர்த்தி நாயனார், ‘இந்த தேசம் எங்கும் சைவ ஒளி ஓங்குமாயின், இந்த அரசை ஏற்று ஆள்வேன். அவ்வாறு அரசாட்சி செய்யும்போது, திருநீறே அபிஷேகமாகவும், உத்திராட்சமே அணிகலனாகவும், சடைமுடியே மணி முடியாகவும் இருக்க வேண்டும்’ என்று அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனை அமைச்சர்கள் அப்படியே ஏற்பதாக தெரிவித்தனர். மூர்த்தி நாயனார் செங்கோல் தாங்கினார். திருக்கோவில் சென்று சோம சுந்தரக் கடவுளை வணங்கி நகரை வலம் வந்தார். அமைச்சர்கள் அவர் வழி நின்றனர். அனைவரையும் மதித்து ஆட்சி செய்த மூர்த்தி நாயனார் இறுதியில் சிவனடி சேர்ந்தார்.
    Next Story
    ×