search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 9-ந்தேதி நடக்கிறது
    X

    கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 9-ந்தேதி நடக்கிறது

    ‘வெள்ளம் காத்த விநாயகர்’ என்று பக்தர்களால் அழைத்து வணங்கப்படும் கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவிலில் 9-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    கோட்டூர்புரம் பாலம் அருகில் பழமையான வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியை தொடர்ந்து பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, சூரியநாராயணன், கனக துர்க்கை அம்மன், நாராயணமூர்த்தி, நவகிரகங்கள், சாந்த ஆஞ்சநேயர் மற்றும் நாகர் சன்னதிகள் புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது இந்தப்பணிகள் முடிக்கப்பட்டு 9-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் தலைமை குருக்கள் ஜி.சபாபதி சிவாச்சாரியார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோட்டூர்புரம் பாலம் அருகில் உள்ள பழமையான வரசித்தி விநாயகரை பக்தர்கள், வெள்ளம் காத்த விநாயகராக வழிபடுகின்றனர். சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்திலும் அனைவரையும் விநாயகர் காத்துக் கொண்டார்.

    இதுதவிர தேங்காய் மாலை அணிவித்து இந்த விநாயகரை வணங்குவதால், எளிதில் வெளிநாடு செல்வதற்கான ‘விசா’ கிடைப்பதாகவும் பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3 முறை இந்த கோவிலுக்கு வந்துள்ளார். இந்தவழியாக செல்லும் போதும் விநாயகரை வழிபட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த விநாயகர் கோவிலில் கடந்த 1980, 1992, 2004 மற்றும் 1995-ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    தற்போது கோவில் முழுவதும் ரூ.30 லட்சம் செலவில் அனைத்து சன்னதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் ராஜகோபுரத்தில் உள்ள 5 கலசம் உள்பட கோவிலில் உள்ள 13 கலசங்களுக்கும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகம் 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை வரும் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. 7-ந்தேதி மாலை 5 மணி முதல் யாக சாலை பூஜையும், வரும் 8-ந்தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது.

    9-ந்தேதி காலை 7.30 மணிக்கு 4-ம் காலயாகசாலை பூஜை நிறைவடைந்ததும், காலை 10 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 11.30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்குகிறார்.

    திருக்கண்ணங்குடி டி.கே.பாலாமணி சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×