search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா 17-ந் தேதி தொடங்குகிறது
    X

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா 17-ந் தேதி தொடங்குகிறது

    பிரசித்திபெற்ற காரைக் கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா, வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதியன்று சாமி வீதி உலாவின்போது பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    கி.பி.5-ம் நூற்றாண்டில் காரைக்காலை சேர்ந்த தனதத்தர் என்ற செல்வந்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார்(காரைக்கால் அம்மையார்). இளவயது முதல் சிறந்த சிவபக்தையாக அவர் விளங்கினார்.

    இந்த நிலையில் புனிதவதியாருக்கு, நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வந்தரான பரமதத்த செட்டியார் மணமுடித்து வைக்கப்பட்டார். ஒருநாள் பரமதத்த செட்டியாரை காண வந்த வணிகர் ஒருவர் இரண்டு மாங்கனிகளை அவரிடம் கொடுத்துச்சென்றார். பரமதத்தர் அந்த இரண்டு மாங்கனிகளையும் தமது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் புனிதவதியாரின் இல்லத்திற்கு சிவனடியார் ஒருவர் பசித்த நிலையில் வந்தபோது புனிதவதி யார் அவரை தமது இல்லத்திற்குள் அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். அப்பொழுது கணவர் அனுப்பி இருந்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை அவருக்கு அளித்தார்.

    அதன் பிறகு இல்லம் வந்த கணவருக்கு புனிதவதியார் மாங்கனியுடன் உணவு பரிமாறினார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால் மற்றொரு மாங்கனியை கேட்க, புனிதவதியார் என்ன செய்வது? என்று தெரியாமல் இறைவனை வேண்டினார். அப்போது அவரது கையில் இறைவனின் கருணையால் மாங்கனி ஒன்று வந்தடைந்தது.

    அந்த மாங்கனியை புனிதவதியார் தமது கணவருக்கு அளித்தார். அந்த மாங்கனி முன்பை விட இனிமையாக இருந்ததால் இதுதான் அனுப்பியது அல்ல என்றும், இந்த மாங்கனி ஏது? என்றும் பரமதத்தர் கேட்க, புனிதவதியாரும் நடந்த உண்மைகளை கணவரிடம் கூறினார். அப்படி என்றால் இன்னொரு மாங்கனியை பெற்றுத்தா என்று பரமதத்தர் கேட்கவும், புனிதவதியார் கைகளை ஏந்தி இறைவனை வேண்டினார். அப்போது அவரது கையில் மேலும் ஒரு மாங்கனி வர அதனை அவர் கணவரிடம் அளித்தார்.

    அந்த மாங்கனியை பரமதத்த செட்டியார் வாங்கும்போது அது திடீரென்று மறைந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பரமதத்தர் தமது மனைவி மனிதப்பிறவி அல்ல, தெய்வப்பிறவி என்பதை அறிந்து அவரை விட்டு விலகிச்சென்று பாண்டிய நாட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    கணவர் பாண்டிய நாட்டில் இருப்பதை அறிந்த புனிதவதியார் அவரை தேடிச்சென்றபோது பரமதத்த செட்டியார் தமது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் வந்து புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினார். அதனைத் தொடர்ந்து தமக்கு இனி இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவரது வேண்டுதலுக்கு இரங்கினார். பேய் உருவம் தாங்கிய நிலையில் தலையால் நடந்து கயிலாயத்தை சென்றடைந்தார். அங்கு அவரை சிவபெருமான் அன்புடன் ‘அம்மையே’ என்று அம்மையாரை அழைக்க, அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்று அழைத்து அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

    அப்போது ‘நம்மிடம் நீ வேண்டுவது யாது’ என்று சிவபெருமான் கேட்க, அதற்கு அம்மையார் ‘இறவாத அன்பு வேண்டும், பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். உன் ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த வண்ணம் பாடிக் கொண்டே உன் பாதத்தின் கீழிருக்க வேண்டும்’ என்று வேண்டினார்.

    அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், ‘அம்மையே! நீ திருவாலங்காடு அடைந்து எமைப்பாடு என்று கூறினார். அதனை தொடர்ந்து திருவாலங்காடு சென்றடைந்த அம்மையார், ‘கொங்கை திரங்கி’ மற்றும் ‘எட்டி இலம் ஈகை’ என்று தொடங்கும் திருப்பதிகங்களை பாடி அருளினார். திருவாலங்காட்டில் இறைவனின் பொற்பாத நிழலில் என்றும் வீற்றிருக்கும் பெரும்பேறு பெற்றார் என்பது புராண வரலாறு.

    காரைக்காலம்மையார் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த காரைக்காலில் புராண வரலாறை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ‘மாங்கனித் திருவிழா’ வெகு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது காரைக்காலில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.

    சாமி அமுது உண்ண காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு செல்வதால் பக்தர்கள் சாமிக்கு தாம்பூலத் தட்டில் மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்துவார்கள். சாமி வீதியுலாவை தொடர்ந்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்தும், மாடியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அந்த மாங்கனியை குழந்தை இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு ‘மாங்கனித் திருவிழா’ வருகிற 17-ந் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 18-ந் தேதி காலை 11 மணிக்கு அம்மையார் திருக்கல்யாணமும், மாலை 6-30 மணிக்கு சாமி வெள்ளைச்சாத்தி புறப்பாடும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்துப்பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறு கிறது.

    19-ந் தேதி காலை 9-05 மணிக்கு சாமி வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வேண்டிக் கொள்கிறார்கள். சாமி வீதி உலா முடிந்து மாலை 6 மணியளவில் அம்மையார் கோவிலுக்கு சாமி எழுந்தருளியதும் அமுதுபடையலுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி சித்திவிநாயகர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    Next Story
    ×