search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி சோழராஜா கோவில்.

    ஆன்மிக பூமியான இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய தலமாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடைபெறும் 'சிவாலய ஓட்டம்' மிகவும் பிரசித்தி பெற்றது. முக்கடல் சங்கமிக்கும் இங்கு சிவபெருமானுக்கு என பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன.

    அற்புதங்கள் நிறைந்த கோவில்

    அந்த வகையில் பல்வேறு அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி உடனுறை சோழராஜா கோவில். இந்த கோவில் 'சோழராஜா கோவில்' என்று அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர் அமைத்த சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

    தற்போது உள்ள நாகர்கோவில் முன்பு கோட்டார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப்பகுதிகள் மாறிவிட்டன. ஆகவே நாகர்கோவிலின் நுழைவு வாசலாக ஒழுகினசேரி திகழ்கிறது. 'உலக முழுதுடையான் சேரி்' என்ற பெயரே காலப்போக்கில் மருவி 'ஒழுகினசேரி' என்று மாறியதாக கூறப்படுகிறது.

    இங்கு 'அரவ நீள்சடையான்' என்ற பெயரில் மகா தேவரான சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பூம்குழலி என்ற பெயரில் கோலவார் குழலாள் ஈஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

     தஞ்சை பெரியகோவிலின் கட்டமைப்பு

    கி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது, இந்த சோழ ராஜா கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை மாதிரியாகக் கொண்டு இந்த ஆலயத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே இதை குமரி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் என்றும் கூறுகிறார்கள். இங்கு மூலவர் லிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    ராஜேந்திர சோழீஸ்வரன், சேர நாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் வந்து நாகர்கோவிலில் தங்கி உள்ளார்.

    அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரனால் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு மூலவரான அரவ நீள்சடையான் சன்னிதி, உயரமான மேடை போல் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் படி ஏறி தான் சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜா கோவில்' என்ற பெயரில் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சோழ ராஜா கோவிலுக்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி, உரிய காலத்தில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டால், குழந்தை தோஷங்கள் நீங்கி, புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் சோதனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இக்கோவில் கல்வெட்டுகளில் அரவநீள்சடையான் என்று உள்ளதாகவும், மேலும் சோழீஸ்வரமுடையர், ராஜேந்திர சோழீஸ்வர முடைய நயினார், பெரிய நயினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜா கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன.

    தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான விமானமும், நான்கு பக்க கற்சுவர்களின் மேற்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன. சோழர்கள் காலத்திற்கு பிறகு பாண்டிய மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் இந்த கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    18 அடி உயரமுள்ள சிவலிங்கம் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் லிங்க வடிவான சிவபெருமானின் மொத்த உயரம் 18 அடி ஆகும். விட்டம் 16 அடி. இதில் 3½  அடி உயரத்திலும், நிலத்தின் அடியில் மீதிமுள்ள 14½ அடி மண்ணில் புதைந்த நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப் பார்த்து அருள்பாலித்து வருகிறார். தூய மனதுடன் பக்தி பரவசத்துடன் கருவறையில் இருக்கும் அரவ நீள்சடையானை 'ஓம் நமசிவாய' என்று இருகரம் கூப்பி வணங்குபவர்கள் சிவபெருமானையே நேரில் பார்ப்பது போல் உணர்வதாக கூறுகின்றனர்.

    பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இங்கு வந்து முறையிட்டால் உடனே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வு அதிர்வலைகளை உணரமுடியும் என்றும் கூறுகிறார்கள். கோவிலின் சுற்றுப் பகுதியின் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் ஆறுமுக நயினாரும், கிழக்கு பார்த்து தனித்தனி சன்னிதிகளில் அமர்ந்து அருள்புரிந்து வருகின்றனர். இரு சன்னிதிகளுக்கு இடையே நாகராஜரும் அருள்தருகிறார்.

    மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் ஐயப்பன் சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. இந்த கோவிலில் 2 பிரகாரம் உள்ளது. 2 பிரகாரம் கோவிலின் நந்தவனம் ஆகும்.

    சிவனை ஓரக்கண்ணால் பார்க்கும் அம்பாள் இத்திருத்தலத்தில் அம்பாள், கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயரில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களில் அம்பாள் எப்போதும் பக்தர்களை நேரில் பார்த்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அம்மன், தனது முகத்தை சற்று இடதுபுறமாக சாய்த்து, சிவனை ஓரக்கண்ணால் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருப்பது ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

    அம்பாள் சன்னிதிக்கு மேல்பக்கம் ஒரு கிணறு உள்ளது. முன்பெல்லாம் கோவில்களின் விக்கிரங்களை தூய்மைப் படுத்துவதற்கும், அபிஷேகத்திற்கும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுப்பார்கள். காலப்போக்கில் அவை மாறிவிட்டன.

    தல விருட்சம் வில்வம்

    இக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். இந்த விருட்சம் அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறது. கொன்றை மரம் பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்பு கொண்டது. ஆனால் இங்குள்ள கொன்றை மரம் வருடத்தில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவு வாசலுக்கு வடக்கு பக்கம் நவக்கிரக சன்னிதியும், பைரவர் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் சோழர்களின் பண்பாட்டை பற்றி தெரிந்துகொள்ள இந்த கோவில் உதவுகிறது. அதிலும் குறிப்பாக 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 சோழர் கால கல்வெட்டுகள், அவர்கள் நிர்வாகத்தினையும் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கி.பி.17-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

    குமரி மாவட்டம் வரும் ஆன்மிக பக்தர்கள் நிச்சயம் சோழராஜா கோவிலுக்கு வந்து வணங்கினால் ஈசன், அம்பாளின் முழு அருளை பெற முடியும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

    வருஷாபிஷேகம்

    இந்த கோவிலில் கொடிமரம் மற்றும் பலிபீடம் இல்லை. கோவில் நுழை வாசலில் அழகிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பின்னர் வருடம் தோறும் வரு ஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான வருஷாபிஷேகம் விரைவில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருஷாபிஷேகம் அன்று சாமிக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    பூஜைகள்

    இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மாதம் ஒரு முறை சங்கடஹர சதுர்த்தி பூஜை விநாயகருக்கு நடை பெறும் முக்கிய பூஜைகள் ஆகும். ஐயப்ப சாமிக்கு பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மண்டல பூஜை நடைபெறும். தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அர்ச்சனை வழிபாடும், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரம் மற்றும் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் நாகர் தேவதை பூஜையும் நடக்கிறது.

    மேலும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி மற்றும் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிறு தோறும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடை பெறுகிறது. அம்பாளுக்கு மாதந்தோறும் பவுர் ணமி மற்றும் நவராத்திரி பூஜை, ஆடி செவ்வாய் வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் அர்ச்சனை செய்யப்படுகிறது.

    மூலவருக்கு மாதம் வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், புஷ் பாஞ்சலி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    குறிப்பாக மகா சிவராத்திரி வழிபாடு கோவிலில் சிறப்பாக நடத்தப்படும். அன்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். கோவில் நடை காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு 10.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு மொத்தம் 7 பிரகாரங்கள் இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகை உள்ளிட்ட பல்வேறு படையெடுப்பு காரணமாக 2 பிரகாரங்கள் மட்டுமே தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

    • புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-

    தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

    ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூய அன்பிற்கு முன்னால், பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை.
    • உலகில் மதிப்பிட முடியாத ஒரே விஷயம், அன்பு மட்டும்தான்.

    புத்தர் மீது பேரன்பு கொண்ட தொழிலாளி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் பணிக்கு சென்றால் தான், அவரது குடும்பம் ஒரு வேளை உணவை சாப்பிட முடியும். அப்படிப்பட்டவருக்கு திடீரென்று இரண்டு தினங்களாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவரது குடும்பம் பட்டினியால் வாடியது. அவரை நம்பி பணம் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. எப்படியாவது ஒரு வேலைக்குச் சென்று பணம் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன் வீட்டை விட்டு வெளியேறி, நடந்து சென்று கொண்டிருந்தார்.

     அப்போது ஒரு குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூவை பார்த்தார். அந்த தாமரைப் பூ, வழக்கமான தாமரை மலரைப் போன்று இல்லாமல், மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அதன் மீது சூரியஒளி பட்டதும், தங்கத் தாமரை போல மின்னியது.

    அபூர்வமான தோற்றத்தில் அழகும் நிறைந்திருந்த அந்த மலரை பறித்து சந்தையில் விற்றால் ஏதாவது பணம் கிடைக்கலாம் என்று எண்ணிய அந்த தொழிலாளி, உடனடியாக குளத்தில் இறங்கி அந்த மலரைப் பறித்தார். பின்னர் அந்த மலரை எடுத்துக் கொண்டு சந்தையை நோக்கி பயணித்தார்.

    அப்போது ஒரு வியாபாரி, தொழிலாளியின் எதிரில் வந்தார். தொழிலாளியின் கையில் இருக்கும் தாமரைப் பூவைக் கண்ட அவர், "இதை எனக்கு விற்கிறாயா? நான் 10 பொற்காசுகள் தருகிறேன்" என்றார். ஆனால் ஏனோ அதை அந்த வியாபாரியிடம் கொடுக்க அந்த தொழிலாளிக்கு எண்ணம் இல்லை. மறுத்து விட்டு, மீண்டும் சந்தையை நோக்கி பயணப்பட்டார்.

    இப்போது வழியில் ஒரு செல்வந்தன் வந்தார். அவரும் அந்த தொழிலாளியின் கையில் இருந்த அழகான தாமரை மலரை பார்த்து விட்டு, "இதை எனக்குத் தா.. அதை என் வீட்டில் பாதுகாக்க விரும்புகிறேன். அதற்காக உனக்கு 50 பொற்காசுகளைத் தருகிறேன்" என்றார்.

    அதைப் பெற்றுக் கொண்டால், தன் குடும்பம் வெகு நாட்கள் பசியாறும் என்றாலும், ஏனோ தொழிலாளியின் உள்ளு ணர்வு 'வேண்டாம்' என்று தடுத்தது. செல்வந்தருக்கும் அந்த பூவை கொடுக்காமல் பயணத்தைத் தொடங்கினார்.

    மீண்டும் வழியில் வந்து அந்த மலரை ஒருவர் கேட்டார். அவர் அந்த நாட்டின் மன்னன். "நான் இந்த பூவை, நம் ஊருக்கு வந்துள்ள புத்தருக்கு கொடுக்க விரும்புகிறேன். எனவே இதை என்னிடம் கொடு. உனக்கு தேவையான பொன்னையும், பொருளையும் தருகிறேன்" என்றார்.

    மன்னன் புத்தரைப்பற்றி சொன்னதும், தொழிலாளியின் மனம் மகிழ்ந்தது. வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் அன்புக் கடவுள், தன் ஊர் வந்திருப்பதை அறிந்ததும், அபூர்வமான தாமரையை தானே புத்தருக்கு வழங்க வேண்டும் என்று அவரது மனம் உந்தித்தள்ளியது. மன்னனுக்கும் மறுப்பு சொல்லிவிட்டு, நேராக புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார், தொழிலாளி.

    தன் கையில் இருக்கும் தாமரைப் பூவை ஒருமுறை பார்த்தார். பின்னர் தன் எதிரில் இருக்கும் புத்தரை பார்த்தார். இரண்டின் பிரகாசமும் ஒன்று போலவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், எதையோ சாதித்துவிட்ட புத்தரின் முகத்தில், தங்க நிறத்திலான தாமரையை விடவும் கொஞ்சம் பிரகாசம் அதிகம் தான். இதனால், தான் கொண்டு வந்த மலரை, புத்தரின் காலடியில் சமர்ப்பித்தார். அவரின் திருவடிகளை தொட்டு வணங்கினார்.

    தொழிலாளியின் தோள்களை தொட்டு தூக்கி விட்ட புத்தர், "உன் வறுமை என்னவென்று உனக்கு நன்றாகத் தெரியும். அது எனக்கும் தெரியும். அப்படி இருக்கையில், இந்த மலருக்காக பலரும் உன்னிடம் அதிக விலை கொடுக்க முன்வந்தனர். ஒரு கட்டத்தில் மன்னனும் கூட இந்த மலரைக் கேட்டார். அவருக்கு நீ இந்த மலரைக் கொடுத்திருந்தால், உன் குடும்பம் இன்னும் சில தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் வகையிலான பொன், பொருள் கூட உனக்கு கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அவற்றை எல்லாம் தவிர்த்து, என் காலடியில் இந்த மலரை சமர்ப்பிக்க என்ன காரணம்?" என்று கேட்டார்.

     அதற்கு பதிலளித்த தொழிலாளி, "இந்த உலகத்தை அன்பாலும், ஞானத்தாலும் வென்றவர் நீங்கள். குளத்தில் இருந்து பறித்தபோது, இதை ஒரு மலராகவும், என் குடும்பத்தில் பசியை போக்கும் பொருளாகவும் தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும், இந்த மலர் அன்பால் நிரப்பப்பட்ட என் இதயமாக மாறிவிட்டது. என் இதயத்தை சமர்ப்பிக்க ஏற்ற இடம் உங்கள் திருவடியைத் தவிர வேறு எதுவும்' இல்லை" என்றார்.

    அவரை புத்தர் தன் மார்போடு இறுகத் தழுவிக்கொண்டார். "இனியவனே.. தூய அன்பிற்கு முன்னால், பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. இந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரே விஷயம், அன்பு மட்டும்தான். வறுமையில் இருந்தாலும் இந்த உலகத்தின் அரசன் நீதான். நிம்மதியாகப் போ.. உன் வாழ்க்கை வளமாகும்" என்று அருளாசி கூறி அனுப்பினார். அவர் சொன்னது போலவே பின்னாளில் அந்த தொழிலாளியின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது.

    • கர்னூல் மாவட்டத்தில் விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா.

    திருப்பதி:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியாக வண்ணங்களை தூவி உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

    ஆனால் ஆந்திராவில் ஹோலி பண்டிகையில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சந்தேகுட்லூர் கிராமத்தில் பழங்காலத்தில் இருந்தே விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மன்மதா தெய்வத்திற்கு திருவிழா நடத்தப்படுகிறது.

    அப்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்கள் வேடமணிகிறார்கள். அவர்கள் அழகாக பட்டு சேலை கட்டி, நகைகள் அணிந்து பெண்கள் போல அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் தலை நிறைய பூ வைத்து தட்டுகளில் பூ, பழம் தேங்காய் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக அங்குள்ள மன்மதன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு ஆண்கள் பெண்கள் உடையில் மன்மத பூஜை செய்கிறார்கள். மேலும் அந்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களையும் செலுத்துகின்றனர். பாரம்பரியமாக நடைபெறும் மன்மதத் திருவிழா எங்கள் கிராமத்தின் கடவுள் நம்பிக்கையின் உணர்வை குறிக்கிறது என அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • சிவாயநம என்று சொல்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை.
    • எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள்தான் சித்தர்கள்.

    சிவாயநம என்று சொல்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பது ஆன்மிக சித்தாந்தம். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள்தான் சித்தர்கள். அவர்களின் வழி வந்தவர்தான் கடுவெளி சித்தர். அவர் தங்கியிருந்த இரும்பை என்ற ஊரில் உள்ளது மாகாளீஸ்வரர் திருக்கோவில்.

     தல வரலாறு

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். சோழ மன்னர்கள் காலத்தில் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தல இறைவனான சிவபெருமான், சிவலிங்க வடிவத்தில் மாகாளீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மகாகாளர் என்கிற முனிவர் இக்கோவிலின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். எனவே அவரின் பெயராலேயே 'மகாகாளேஸ்வரர்' என்றும், '`மாகாளீஸ்வரர்' என்றும் பெயர் பெற்று விளங்குகிறார். இவரது உற்சவர் திருநாமம், சந்திரசேகரன் என்பதாகும்.

    இவ்வாலய நாயகி, குயில் மொழி நாயகி என்று அழைக்கப்படுகிறார். சுந்தர நாயகி என்ற பெயரும் உண்டு. மதுரை புராண காலத்தில் இந்த ஊர், 'திரு இரும்பை மாகாளம்' என அழைக்கப்பட்டது. இரும்பன், இரும்பாறை ஆகிய இரண்டு அசுரர்களை காளி அவதாரம் எடுத்து, பார்வதி தேவி வதம் செய்தாள். இதனால் அன்னைக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் விலக அன்னை இத்திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். இதையடுத்து அன்னையின் தோஷம் நீங்கியதாக சொல்லப்படுகிறது.

    முற்காலத்தில் இவ்வூரில் கடுவெளி சித்தர் தங்கியிருந்தார். அந்த காலத்தில் அவ்வூரில் மழையே பெய்ய வில்லை. முனிவரின் கடுமையான தவத்தின் காரணமாகத்தான் மழை பெய்யவில்லை என்று எண்ணிய அப்பகுதி மக்கள், ஒரு நடன மங்கையை அழைத்து வந்து, முனிவரின் தவத்தைக் கலைத்தனர். சலங்கை ஒலியும், இசை சப்தமும் முனிவரின் தவத்தைக் கலைத்தது. தன் தவம் கலைந்ததால் கடுவெளி சித்தர் பெரும் கோபத்துடன் மக்களைப் பார்த்தார்.

    இதனால் பயந்துபோன மக்கள், உங்களின் தவத்தால் தான் ஊரில் மழைப்பொழிவு இல்லை என்று எண்ணியதாலும், ஊரில் மழை பெய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும்தான் இவ்வாறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இதனால் மனம் இரங்கிய கடுவெளி சித்தர், அந்த ஊரில் சிவ தொண்டு செய்தார். அதன் பயனாக அந்த ஊரில் நல்ல மழை பெய்து, பஞ்சம் நீங்கியது.

    ஒரு முறை உரில் சிவன் பெருவிழா நடந்தது. இறைவனை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அந்த ஊர்வலத்தின் முன்பாக நாட்டியப் பெண் ஒருவர், நடன மாடியபடி சென்றார். அப்போது அவளது ஒரு கால் சிலம்பு ஒன்று கழன்று விழுந்தது. கடுவெளி சித்தர் அந்த சிலம்பை எடுத்து அந்தப் பெண்ணின் காலில் மாட்டிவிட்டார். இதைக்கண்ட மக்கள், முனிவரை தவறாக பேசினர்.

    இதனால் கடும் கோபமும், வேதனையும் அடைந்த கடுவெளி சித்தர், சிவபெருமானின் மீது ஒரு பதிகம் பாடினார். அப்போது இந்த ஆலயத்தின் சிவலிங்கம் மூன்றாக வெடித்து சிதறியது. இதைக்கண்டு மக்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். பின்னர் மன்னரும், மக்களும் கடுவெளி சித்தரை வேண்டிக்கொள்ள, அவர் சினம் நீங்கி மீண்டும் ஒரு பதிகம் பாடினார். இதையடுத்து மீண்டும் சிவலிங்கம் ஒன்றிணைந்தது.

    கோவிலின் சிறப்புகள்

    இங்கு அரசமரத்திற்கு இடையில் அமர்ந்து கடுவெளி சித்தர் செய்த தவத்தை, அந்த மரத்தின் கிளையில் குயில் வடிவில் இருந்து அம்பாள் கவனித்து வந்ததாகவும், அந்த தவம் பற்றி அவர் சிவபெருமானிடம் கூறியதால் அன்னைக்கு குயில்மொழி நாயகி' என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சன்னிதியில் மகாலட்சுமி கோலத்தில் காட்சி தருகிறார்.

    கோவிலின் மேற்கு பிரகாரத்தில் மேற்கு திசை பார்த்தபடி சந்திரன் காட்சி தருகிறார். இவருக்கு பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள், கல்வி கலைகளில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து 'உஷா, பிரதியுஷா' ஆகிய இரு மனைவியரும் தனது மடி மீது அமர்த்தி இருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோவில் காணப்படுகிறது.

    பேச்சு குறைபாடு உள்ளவர்கள், இசைக் கலையை பயில்பவர்கள், இசைக் கலைஞர்கள், அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் மற்றும் இசைத்திறன் மேம்படுவதாக பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

    ஆயுள் விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும் விருப் பங்களும் நிறைவேறும்.

    அமைவிடம்

    தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரும்பை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயம். இவ்வூருக்கு விழுப்புரத்தில் இருந்தும் புதுவை மாநிலத்தில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளன.

    • புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்’
    • வெற்றி-தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்து.

    புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்'

    புனித ரமலான் மாத நோன்பு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் போர் செய்வதும் கடமையாக்கப்பட்டது.

    நோன்பு என்பது உண்ணாமலும், பருகாமலும் இருந்து உடல் சோர்வுடன், உடல் நலிந்து, மெலிந்து இருப்பது. போர் புரிவது என்பது அழகிய முறையில் ஊட்டச்சத்துக்களை உண்டு, புத்துணர்ச்சி தரும் பானங்களை பருகி உடல் நலத்துடனும், உடல் பலத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது. உடல் தகுதியை நிரூபிப்பது.

    பத்ர் போரின் பின்னணி'

    அபூசுப்யான் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியா தேசத்தில் இருந்து மக்காவை நோக்கி குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது. இவர்களிடம் 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1000 ஒட்டகங்களில் 40 வீரர்களின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்தது.

    மக்கா வாசிகளுக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதற்கு இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனவே, நபி (ஸல்) அவர்கள் போர்புரியும் எண்ணமின்றி இக்கூட்டத்தை நோக்கி புறப்படும்படி தமது தோழர்களிடம் வேண்டினார்கள். ஆனால், அல்லாஹ்வின் எண்ணம் போர் புரிவதாக இருந்தது. அதுவே நடந்தது.

    'போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறை மறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. (திருக்குர்ஆன் 22:39)

    குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாக்க அபூஹஜ்ல் தலைமையில் 1000 வீரர்கள், 100 குதிரைகள், 700 ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன் ஒரு பெரும் படையே வருகிறது.

    இதையறிந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவர் அபூசுப்யான், 'தாங்கள் பாதுகாப்பாக மக்கா திரும்புகிறோம். இனி எங்களை காக்க ஆள் தேவையில்லை. நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று அபூஜஹ்லிடம் தூது அனுப்புகிறார்.

    ஆணவம் பிடித்த அபூஜஹ்ல் கேட்க வில்லை. முன்னே எடுத்து வைத்த காலை பின் வாங்கப்போவதில்லை என திமிர்பிடித்து முஸ்லிம்களை நோக்கி முன்னேறினான். இதுவே பத்ர் போருக்கு வழிகோலியது. கி.பி. 624-ம் ஆண்டு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் பிறை 17-ம் நாள் வெள்ளிக்கிழமை போர் நடந்தது. எனவே, அதற்கு பத்ர் போர் என்று பெயர் வந்தது.

    இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.' (திருக்குர் 3:123)

    முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 நபர்கள். அவர்களிடம் 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள், 8 வாள்கள், 9 உருக்குச் சட்டைகள், 60 கேடயங்கள் மட்டுமே இருந்தன. இவ்வாறு இருந்தும் இஸ்லாமிய படைக்கு இறையருளால் வெற்றி சாத்தியமானது. வெற்றி - தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    பத்ர் போர் நடப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இறைவன் கூறுகின்றான். 'அதி சீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஒடுவர். (திருக்குர் 54:45)

    • ராஜகோபால சுவாமி கோயில் சிறப்பு பெற்ற வைணவக் கோயில் ஆகும்.
    • இந்த கோயிலை தட்சிண துவாரகை என்று கூறுகின்றனர்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் சிறப்பு பெற்ற வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராஜகோபாலசுவாமிக்கு ஸ்ரீ வித்யா ராஜாகோபாலன் என்று திருநாமம். இந்த கோயிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) எனக்கூறுகின்றனர். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால், செண்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால், குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடையும். பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோயில் உற்சவம் இன்று தொடங்குகிறது.

    • மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 14 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை மாலை 4.38 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: சித்திரை பிற்பகல் 3.47 மணி வரை. பிறகு சுவாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம். திருப்பங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் பட்டாபிஷேகம். திருவெள்ளரை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் உற்சவம் ஆரம்பம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். சோளிங்கர் நரசிம்மருக்கு திருமஞ்சனம், பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பயிற்சி

    கன்னி-இன்பம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- பணிவு

    மகரம்-பதவி

    கும்பம்-சுகம்

    மீனம்-புகழ்

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர குண்டம் இறங்கினர்.

     மேலும் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர். மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.
    • பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவின் 9-ம்நாளான நேற்று நம் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது இந்த சேர்த்தி சேவை ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்கள். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று காலை நம் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லாக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்றை கடந்து, தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டறிய முன் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு ஏகாந்தம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம் பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் மதியம் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள்-தாயார் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேர்த்தி சேவை சாதித்தருளினர்.

    தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சேர்த்தி சேவைக்கு செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர் வசதிகள் ஏற்படுத்தபட்டிருந்தது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேத்தி மண்டபம் வரை 5 டன் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 12 இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

    மேலும் ஒரு இடத்தில் மிகப் பெரிய ஏர்கூலரும் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் சுமார் 30 மின்விசிறிகளும் பொருத்தப் பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், நீர் மோர், லட்டு ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரம்மாண்ட எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (27-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
    • 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.

    அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

    பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

    பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    ×