search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
    • ஞான சம்பந்தருக்கு, அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபம் உள்ளன.

    இந்த தஜாரோகண மண்டபத்தில்தான் அருள்தரும் கற்பகாம்பிகை நவராத்திரி கொலுவிருப்பாள். பஞ்ச மூர்த்திகள் திருவீதிஉலாவுக்கு புறப்படுவதற்கு முன் இங்கு வைத்து தான் அலங்காரம் செய்கிறார்கள். மண்டபத்தை யொட்டி திருமுறை பாராயண அறையும் உள்ளன. இதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

     வேத மண்டபம்

    12 கால் மண்டபத்தின் அருகே 4 கால் தூணுடன் விளங்கும் வேத மண்டபத்தில்தான் விழாகாலங்களில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலாட்டுவர்.

    அருணகிரிநாதர்

    இங்கு அருணகிரிநாதருக்கென்று தனி சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. அவரை ஆட்கொண்ட முருகனின் சன்னதிக்கு எதிரிலேயே கூப்பிய கரங்களுடன் இவரது சன்னிதியும் அமைந்துள்ளது சிறப்பு.

    தங்கத்தேர் விசேஷ நாட்களில் உட்பிரகாரத்தில் உலா வரும் காட்சியைக் காண பேறு பெற்றிருக்க வேண்டும். விருப்பப்படும் பக்தர்கள் விசேஷ கட்டணம் செலுத்தி இறைவனை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரத்தில் வலம்வரச் செய்து நல்லாசி பெறுகின்றனர்.

    திருக்குளம், நீராழி மண்டபம்

    மேற்கு பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள மேலைக் கோபுரத்தின் வழியே வெளியில் சென்றால், கடல் போல் பரந்துள்ள திருக்குளம், கபாலீ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நடுவே அழகான நீராழி மண்டபம் உள்ளது. சக்தி தீர்த்தம், முக்தி தீர்த்தம் என்றழைக்கப்படும் இக்குளத்தின் மேற்கு கரையில் எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அதன் அருகில் ஜ்யேஷ்டா தேவியின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

    குளத்தின் வடமேற்கு மூலையில் மூன்று கால் மண்டபமும் தென்கரையில் ஞான சம்பந்தருக்கு பங்குனி விழாவில் அம்பிகை ஞானப்பால் அளிக்கும் மண்டபமும் உள்ளன. கிழக்கே மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் நீராடும் மண்டபமும், வடக்கில் சிவலிங்க மண்டபமும் அமைந்துள்ளது.

    இத்திருக்குளத்தில் தெப்போற்சவம் தைப்பூசத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முதல் நாள் சந்திசேகர சுவாமியும், இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலரும், தெப்பத்தில் எழுந்தருளுவார். முதல்நாள் ஐந்து சுற்று, இரண்டாவது நாள் ஏழு சுற்று, மூன்றாவது நாள் ஒன்பது சுற்று என மூன்று நாட்கள் தெப்பம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.

    தெப்பம் புறப்படுகையில் பெண்கள் வெற்றிலையில் கற்பூரமேற்றி தண்ணீரில் விடுகின்றனர். இத்திருக்குளத்தில் முழுகி பாவங்கள் களைந்தவர்கள் அனேகம். அவ்வாறே கலிங்கத்தை ஆண்ட தருமனின் புதல்வன் சாம்பன் என்பவனும் தனது பாவங்கள் தீர இக்குளத்தில் நீராடி கற்பகாம்பிகை, கபாலீஸ்வரரை வழிபட்டு முக்தியடைந்ததாக 'தீர்த்த சர்க்கம்' என்ற நூல் தெரிவிக்கிறது.

    குளத்திற்கு எதிரே கோபுரத்தின் வடக்குப்புறத்தில் கற்பக விநாயகரையும், அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் பாலமுருகனும் நுழைவாயிலுக்கு எதிரே துவஜஸ்தம்பம் உயர்ந்து காட்சி தருகிறது. அதனருகே பலி பீடத்தையும், ரிஷப தேவரான நந்தியம் பெருமானையும், அடியார்க்கு அருள்புரிய வீற்றிருக்கும் விநாயகரையும் காணலாம்.

    ஸ்ரீ கற்பகாம்பிகை சன்னதி

    இங்கு அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறாள். சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலம். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. அதோடு வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி, நவராத்திரி காலங்களில் பூப்பாவாடை, தங்கக் காசுமாலை மற்றும் வைரக்கிளி தாடங்கமும் அணிந்து காட்சி கொடுக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் வெள்ளித் தொட்டிலில் அம்பாளை வைத்து வேத பாராயணம் ஒலிக்க மும்முறை வலம் வரும் அவளின் அழகைக்காண கண்கோடி வேண்டும். தமிழ் மாதத்தின் கடைசி சுக்ரவாரம் இந்த பவனியுடன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கும்.

    சன்னிதியின் தென்மேற்கில் இறைவனின் பள்ளியறை உள்ளது. பிராகார சுவர்களில் பாமாலைகளும், சவுந்தர்ய லஹரியும், அபிராமி அந்தாதியும் சலவைக் கற்களில் பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.

    • கற்பகாம்பாள் சன்னிதியில் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது.
    • ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது.

    மூலஸ்தானம்

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்-றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்த வந்தவுடன் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது. அதனருகில் சுவரில் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள பாலகர்களைக் திரு துவார கடந்து சன்னிதியில் நுழைந்தால் ஈசன், பெரிய லிங்க உருவில் மேற்கு திசை பார்த்து காட்சி தருகிறார்.

    ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது. இம்மூர்த்தி, வழிபடுபவருக்கு உடனே காட்சி தந்து அருள்புரியும் என்கின்றனர். பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு. சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு.

    சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    துர்கை

    கபாலீஸ்வரரின் கருவறையின் வடக்கு வெளிச்சுவரில் வடக்கு பார்த்து துர்கை வீற்றிருக்கிறாள். மகா வரப்ரசாதியான இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளிகிழமை தோறும் 9 வாரங்கள் ராகு கால வேளை பூஜை செய்து மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் படித்து வந்தால் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    அடுத்து கோமுகம். மேலே பிரம்ம தேவன் அருள்பாலிக்கிறார். கோமுகத்திற்கருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர்,விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் வீற்றிருக்கின்றனர்.

    அடுத்து 63 நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், தொகையடியார் 9 பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை, கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஐந்துதலை நாகர், நாகப்படத்தின் கீழ் சிவலிங்கம், காமாட்சி, ஏகாம்பரேசுவரர், பெரிய சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் சிவலிங்கம், இரு நாகங்களின் படங்களின் கீழ் சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் 2 சிவலிங்கங்கள் மற்றும் தெற்கு நோக்கிய பைரவர் (அஷ்டமியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடத்தப்படுகிறது) திருஉருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் ஒரு சிவலிங்கமும், இதனையடுத்து ஐந்து தலை நாகத்தின் படத்தின் நிழலில் மற்றொரு சிவலிங்கமும், கணேசர், வீரபத்திரர், சிவலிங்கம், சைவ நால்வர், அடுத்து ஒரு சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும் பொள்ளாப் பிள்ளையாரும் உள்ளனர். அதற்கெதிரே மூலஸ்தானத்தின் பின்புறம் திருமாலும் பிரம்மனும் தேடிக்காண முடியாத பிறையண்ணல், லிங்கோத் பவராகக் காட்சியளிக்கிறார். எதிரே பொள்ளாப் பிள்ளையார் அருகில் வரிசையாக 63 நாயன்மார்களின் மூலவ மூர்த்திகளும் சூரிய பகவானும் அருள்புரிகிறார்.

    தட்சிணாமூர்த்தி

    கருவறையின் தெற்கு சுவர் மாடத்தில் குரு தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அருகில் செல்வ கணபதியும் அருள்புரிகிறார்கள். அறுபத்துமூவர் திருஉருவங்களுக்கு அருகில் சேக்கிழார் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து வடக்கு நோக்கியவாறு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேராக வடக்கிலுள்ள நடராஜர் திருஉருவப் பிம்பத்தை காணலாம்.

    மேற்கு வரிசையில் கற்பகாம்பிகை, ஸோமாஸ்கந்தராகிய அம்மையப்பர் உற்சவ மூர்த்திகளை காணலாம். உள்ளே எங்கேயும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது சரியில்லை. ஏனெனில் எங்கு நோக்கினும் சன்னிதிகள். துவஜஸ்தம்பத்தின் அருகில் தான் அதுவும் வடக்கு நோக்கியே பெண்கள் அஷ்டாங்கமாகவும் ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், விழுந்து கும்பிடுவது சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

     அங்கம் பூம்பாவை, திருஞானசம்பந்தர்

    வெளி பிராகாரத்தில் அங்கம்பூம்பாவைக்கென்று சன்னிதி தனி விமானத்துடன் உள்ளது. அங்கம் பூம்பாவை கிழக்கு நோக்கி இருக்க அதே சன்னிதியில் திருஞான சம்பந்தர் வடபுறம் பார்த்துகாட்சி தருகிறார். சிவனருள் பெற்ற அங்கம் பூம்பாவையின் கதையை பார்க்கலாம்.

    சிவபிரானின் அடியாரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை ஒரு நாள் நந்தவனத்தில் சிவபிரானுக்காக மலர் பறிக்கும் வேளையில் கொடிய விஷநாகம் தீண்டி மரணமடைந்தாள். செட்டியார் அவளை திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க நிச்சயித்திருந்தார்.

    ஆனால் திடீரென நிகழ்ந்த அவளது மரணத்தால் அவரது எண்ணம் ஈடேற முடியாமல் போயிற்று. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடலை எரித்த அவர் அவளது சாம்பலை மட்டும் கரைக்க மனமில்லாமல் ஒரு பானையில் எடுத்து. வைத்துக் கொண்டார். அச் சமயம் மயிலைக்கு விஜயம் செய்திருந்த திருஞான சம்பந்தர் நடந்த விஷயத்தை அறிந்து சிவநேசரை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அழைத்துவரச் செய்தார். அவரும் தனது மகளின் சாம்பல் அடங்கிய பானையுடன் அவ்விடம் வந்தார்.

    ஞானசம்பந்தர் மனமுருகி சிவபிரானை பிரார்த்தித்தார். உடனே அவர் நாவினின்று 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்துடன் பாடல்கள் சரளமாக வெளிவந்தன. அவர், ஒவ்வொரு திருநாளாகக் குறிப்பிட்டு, அவ்வைபவத்தை 'அதைக் காணாமல் போகலாமா பூம்பவாய்' என பாடப்பாட சிவபெருமான் அருளுடன் எலும்புகள் இணைந்து சாம்பல் சதை பெற்றது. 12 வயது பெண்ணாக குடம் உடை வெளிப்பட்டாள். சாம்பலும், எலும்பும் கபாலீஸ்வரர் அருளால் மீண்டும் பெண்ணாக மாறிய புண்ணிய க்ஷேத்திரமிது.

    வாகனம், யாக சாலை அனுதினமும் கபாலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும்போது அடிக்கும் பெரியமணி உயரே மதில் சுவரில் கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வரிசையாக வாகனங்கள் வைக்கும் அறைகளும், யாக சாலையும் உள்ளன. வலது புறத்தில் புன்னைவன நாதருக்கு அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சியும் அருகில் தல விருட்சமாகிய புன்னை மரம் உள்ளது.

    சனீஸ்வர பகவான்

    சனீஸ்வர பகவானுக்கென்று சன்னிதி தனியாக உள்ளது. காக வாகனத்துடன் மேற்கு பக்கம் பார்த்து அருள்புரியும் இவரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.

    நவக்கிரகம்

    சனீஸ்வரருக்கு எதிர்பக்கம் கிழக்கு பிரகாரத்தில் திரும்பினால் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நவக்கிரகங்கள் மற்றும் ஜகதீச்வரரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.

    கோவில் பிராகாரம்

    தரிசனம் முடித்து கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் பிராகாரத்தில் உட்கார்ந்து விட்டே கிளம்ப வேண்டும் என்பது மரபு. தெய்வ சிந்தனையுடன் உட்காரும் அந்த சில நிமிட துளிகளில் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது என்பது நிதர்சனம்.

    வீதி உலா

    கோவிலைவிட்டு வெளியே வந்தால் வீதியுலா வரும் தெய்வ மூர்த்திகள் சற்று நேரம் நின்று தரிசனமளிக்கும் 16 கால்மண்டபமும், சன்னிதித் தெருவின் முடிவில் திருத்தேரும் உள்ளன.

    • ஸ்ரீ கற்பகாம்பாளை தரிசனம் செய்தால் சுபமங்களம் கிட்டும்.
    • கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர்.

    1. ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்பு, ஸ்ரீவெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசனம் செய்தால் சுபமங்கள சவுபாக்கியம் கிட்டும். இது தரிசன நியதியுமாகும்.

    2. மகாசிவராத்திரி, மாத சிவராத்திரிகளில் ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசித்து சிவ சிவ என்று கூறினால் நமது கர்ம வினைகள் குறைந்து பிறவிகள் தீரும்.

    3. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர். எனவே, இங்குள்ள புறாக்களின் தரிசனம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    4. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் 3500-க்கும் மேற்பட்ட அதிஅற்புத உன்னத தேவதைகள் இருக்கிறார்கள். எனவே இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது நல்ல எண்ணங்களையும், நியாயமான பிரார்த்தனைகளையும் மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தவிதமான மாற்று எண்ணங்களுடன் இப்பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.

    5. தட்ச யாகத்தில் தட்சனின் யாகத்தை அழித்த கோபாவேசம் கொண்ட ஸ்ரீவீரபத்திரரை சாந்தப்படுத்தவதற்காக மகரிஷிகளும், முனிவர்களும் பனி மலையைக் கொண்டு அழுத்தி சுவாமியின் உக்ரகத்தைத் தணிக்க முயற்சித்தனர். தந்தையாகிய சிவனுடைய கோபம் தணிந்ததே அன்றி, ஸ்ரீவீரபத்திரரின் கோபம் சிறிதும் தணியவில்லை. பல்வேறு வடிவங்களில் ஸ்ரீவீரபத்திரருக்கு சித்தர்களும், மகான்களும் கோவில்கள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சிலா ரூபங்களில், மூலாதார சக்தியின் 500-வது பிரதி பிம்பமே ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார்.

    6. மேற்குப் பார்த்த சூரியனை, சூரிய ஹோரையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இவரை வழிபடுவதால் கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்திக்கான வழி கிட்டும்.

    7. இக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். இத்தலம் முந்தைய யுகங்களில் ராகு, கேது பரிஹார தலமாக விளங்கியது. இதுபோன்று எதிர் காலத்தில் ராகு, கேது பரிகார தலமாக அமையும் என்பது சித்தர்களின் வாக்காகும்.

    8. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உற்சவ காலங்களில் வெயில் நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ் தானத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை சுமந்து வரும் அடியார்களுக்கும் அளித்திடில் தொலைத்தொடர்பு துறையில் இருப்போர் மேன்மை அடைவர். தொலைத்தொடர்பில் இருக்கக் கூடிய இன்னல்கள் தீரும்.

    9. "எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பர். அந்த சிரசில் உள்ள கபாலம் மிகவும் முக்கியமானது. கபாலம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் அபூர்வமான மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர் ஆவார். கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தித் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    10. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் அளவு உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது, ஸ்ரீகேசல குசலாம்பிகாயை நமஹ, ஸ்ரீதையல் நாயகியே நமஹ, ஸ்ரீகபாலீஸ்வராய நமஹ என்று சொல்ல வேண்டும். இதனால் கபாலம் சம்பந்தபட்ட நோய்கள் தணியும். உடலின் உஷ்ணமும் குறையும்.

    11. இக்கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக விளக்கெண்ணெயுடன் பசு நெய் கலந்து, தீபம் இட்டு அன்னதானம் செய்திடில், எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். முறிந்த எலும்பானது விரைவாகக் கூடும்.

    12. இங்கு ஸ்ரீஜகதீஸ்வரர் தனிச்சன்னதி கொண்டுள்ளார். இது வாஸ்து பூஜைக்கு உகந்த இடமாகும். இவருக்கு வழிபாடு செய்திட வாஸ்து குற்றங்கள் குறையும்.

    13. ஒரு நாளைக்கு குறைந்தது பதிமூன்று கோபுர கலசங்களையாவது தரிசனம் செய்தல் விசேஷமாகும். இக்கோவிலில் பதிமூன்றிற்கும் மேலாகவே கோபுர கலசங்கள் உள்ளன. தினந்தோறும் கோபுர தரிசனம் செய்வதால் பாவங்கள் தீரும். இதனையே, `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றார்கள் பெரியவர்கள். இக்கோவிலில் அருள்பாலிக்கும் துர்க்கையின் கலியுக திருநாமம் ஸ்ரீபஸ்பத்ரயாக்னி. அமர்ந்த கோலத்தில் மூன்று தேவியர் அருள்பாலிப்பது இச்சிவலாயத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான்.
    • `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும்.

    ராமாயணம் என்னும் ராமனின் வரலாற்றைச் சொல்லும் காவியத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த ராமாயணத்தை எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றியும், ராமாயணத்தின் சில அரிய தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

     உத்தர காண்டம்சொல்லும் செய்தி

    ராவண யுத்தம் முடிந்து ராமர் பட்டாபிஷேகத்துடன் யுத்த காண்டம் நிறைவுறும். நாட்டு மக்களின் பழிச்சொல்லைக் கேட்டு சீதையை மீண்டும் காட்டிற்கு அனுப்புவது, லவ-குசர்கள் பிறப்பது, அவர்கள் வால்மீகியிடம் ராமாயணத்தை கற்றறிந்து அதை நாட்டில் உள்ள மக்களிடம் பரப்புவது, பிள்ளைகளை ராமரிடம் ஒப்படைத்து, சீதாதேவி பூமியில் மறைவது, லவ-குசர்களுக்கு நாட்டை சரியாக பிரித்து வழங்கி விட்டு, சரயு நதியில் ராமர் தன் வாழ்வை முடிப்பது வரையான தகவல்களை உத்தரகாண்டம் தெரிவிக்கிறது.

    வால்மீகி ராமாயணமே பிரதானம்

    வேடனாக இருந்து (சிலர் கள்வர் என்பார்கள்) நாரதரின் அறிவுரையால், ராமபிரானை நினைத்து தவம் செய்து மகரிஷியாக மாறியவர், வால்மீகி. இவர்தான் ராமாயணத்தை வடமொழியில் எழுதியவர். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான ராமாயணங்கள் இருப்பினும், அனைத்திற்கும் மூலமாக இருப்பது வால்மீகி எழுதிய ராமாயணம் தான். இதிகாசங்களின் கீழ் வருகிறது, ராமாயணம்.

    `இதிகாசம்' என்பதற்கு `இது நடந்தது' என்பது பொருளாகும். எனவே உண்மையில் நடந்த ஒரு நிகழ்வையே வால்மீகி ராமாயணமாக வடித்தார். வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பர் இயற்றிய கம்பராமாயணம் முதல் போஜ ராமாயணம் வரை ஒவ்வொன்றிலும் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. என்றாலும் வால்மீகி எழுதிய ராமாயணத்தையே பிரதானமாக கொள்ள வேண்டும்.

    வால்மீகி எழுதாத உத்தர காண்டம்

    7 காண்டங்கள், 500 ஸர்க்கங்கள், 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்டதாக, ராமாயணத்தை வால்மீகி பாடியிருக்கிறார். காண்டங்கள் என்பது பிரிவுகளையும், ஸர்க்கங்கள் என்பது அந்தப் பிரிவுகளின் உட்பகுதிகளையும் குறிப்பிடுகிறது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்பது 7 காண்டங்களாகும்.

    இதில் உத்தர காண்டம் என்ற பகுதியை வால்மீகி மகரிஷி எழுதவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கம்பரும் கூட தான் எழுதிய ராமாயண காவியத்தில் பால கண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை பற்றிதான் பாடியிருக்கிறார். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் என்னும் பகுதியை, கம்பரின் சம காலத்தவரான ஒட்டக்கூத்தர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    நவாஹ பாராயணம்

    நவாஹ பாராயணம் செய்ய நினைப்பவர்கள் பால் காண்டம் தொடங்கி இறுதியில் ராம பட்டாபிஷேகம் சொல்லி முடிப்பார்கள். `நவாஹம்' என்பது ராமாயணத்தை ஒன்பது நாள் படிப்பது ஆகும். எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    முதல் நாள் : பாலகாண்டம் ஸர்க்கம் 1 முதல் 70-வது ஸர்க்கம் வரை

    இரண்டாம் நாள் : பால காண்டம் ஸர்க்கம் 71 முதல் அயோத்யா காண்டம் 64-வது ஸர்க்கம் வரை

    மூன்றாம் நாள் : அயோத்யா காண்டம் 65 ஸர்க்கம் முதல் 119-வது ஸர்கம் வரை

    நான்காம் நாள் : ஆரண்ய காண்டம் 1-ம் ஸர்க்கம் முதல் 68-வது ஸர்க்கம் வரை

    ஐந்தாம் நாள் : ஆரண்ய காண்டம் 69-ம் ஸர்க்கம் முதல் கிஷ்கிந்தா காண்டம் 49-வது ஸர்க்கம் வரை

    ஆறாம் நாள் : கிஷ்கிந்தா காண்டம் 50-ம் ஸர்க்கம் முதல் சுந்தர காண்டம் 57-வது ஸர்க்கம் வரை

    ஏழாம் நாள் : சுந்தர காண்டம் 58-ம் ஸர்க்கம் முதல் யுத்த காண்டம் 50-வது ஸர்க்கம் வரை

    எட்டாம் நாள் : யுத்தகாண்டம் 51-ம் ஸர்க்கம் முதல் 111-வது ஸர்க்கம் வரை

    ஒன்பதாம் நாள் : யுத்த காண்டம் 112-ம் ஸர்க்கம் முதல் 131-வது ஸர்க்கம் வரை

    • நந்திகேஸ்வரர் ஆலயத்தில் நந்திக்கு கொம்போ, காதுகளோ இல்லை.
    • குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜரை தரிசனம் செய்யலாம்.

    * உற்சவர் இல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

    * கும்பகோணம் அருகே `தாராசுரம்' என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

    * தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

    * கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜரை தரிசனம் செய்யலாம்.

    * கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

    * நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள். பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள். கருடன் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

    * ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

    * திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

    * கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் `பஞ்சவர்ணேஸ்வரர்' என்று பெயர்.

    * விருதுநகர், சொக்கநாதன் புத்தூரில் உள்ள தவ நந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளோ இல்லை.

    * ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-சில நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

    * வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோவில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கி உள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

    * சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையில் இருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன் வடிவம் கொண்டுள்ளார்.

    * தருமபுரி– பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

    • இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை.
    • ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

    திருக்குறுங்குடி அற்புதமான தலம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப் பாடி பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்). ஸ்ரீபாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு.

    அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடம் இருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சி லைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு `மகேந்திரகிரி நாதர்' என்றும் `பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர். இத்தனை சிறப்பு பெற்ற திருக்குறுங்குடியில் பங்குனி பிரம்மோற்சவம் மிகப்பெரிய உற்சவம். அதில் இன்றைய தினம் திருத்தேர்.

    • சித்தர் பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர்.
    • ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை

    தமிழ் சித்த (சைவ) பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர். பதஞ்சலி புகழ்பெற்ற யோக குருவான நந்தி தேவாவிடம் (சிவபெருமானின் தெய்வீக காளை) யோகா மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். சிவபெருமானால் தொடங்கப்பட்ட 18 யோக சித்தர்களில் நந்தியும் ஒருவர். நந்திதேவரின் சீடர்களில் பதஞ்சலி, தட்சிணாமூர்த்தி, திருமூலர், ரோமரிஷி, சட்டைமுனி ஆகியோர் அடங்குவர். ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை நடக்கிறது.

    பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்:

    தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும் படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும். பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பதினாறு போற்றிகள்

    1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

    2 ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!

    3. ஒளிமயமானவரே போற்றி!

    4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

    5. கருணாமூர்தியே போற்றி

    6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

    7. பூலோகச் சூரியனே போற்றி

    8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

    9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

    10. இன்மொழி பேசுபவரே போற்றி!

    11 இகபரசுகம் தருபவரே போற்றி!

    12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

    13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!

    14 அங்ஞானம் அகற்றுபவரே போற்றி

    15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

    16.யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

    இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

    நிவேதனம்

    இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும். பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:

    1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்.

    2 குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

    3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்.

    4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்.

    5. நன் மக்கட்பேறு உண்டாகும்.

    6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

    7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்.

    8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

    9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

    இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும். பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.

    • இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.
    • இங்கு லிங்க வடிவம் கிடையாது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. பொதுவாக அனைத்து ஆலயங்களும் காலையிலேயே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும். ஆனால் இத்தலத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.

    ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர்.

    அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது. மூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

    சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும்.

    அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.

    அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.

    இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

    கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும்.

     சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர்.

    ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும். இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள்.

    • இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
    • அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    தில்லை நடராஜர் ஆலயத்தை சுற்றி பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நடராஜர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டவைதான். இவற்றில் பல ஆலயங்கள் அற்புதங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது. அப்படி ஒரு ஆலயம்தான், தில்லைவிடங்கன் என்ற கிராமத்தில் உள்ள விடங்கேஸ்வரர் கோவில்.

     தில்லைக்கு வலது கண், தில்லைவிடங்கன் கிராமம். மன்னர் காலத்தில் மாரிமுத்தாப்பிள்ளை என்ற தமிழ்ப் புலவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் பாடுவதோடு, தான் இயற்றிய தமிழ் பாடல்களையும் இறைவன் முன்பாக பாடுவார். அவர் தில்லை நடராஜர் ஆலயத்திற்கு செல்லும்போது, தனது தோட்டத்தில் இருந்து வாழைப்பழம் எடுத்துச் செல்வார். இது ஒரு நாளும் தவறியது இல்லை.

    ஒரு நாள் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. அதனால் தில்லை நடராஜர் கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற கவலையில் ஆழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லத் தொடங்கினார். வழியில் கந்தமங்கலம் என்ற கிராமத்திற்கு வந்தபோது, மழையின் கடுமை அதிகமானது. இதற்கு மேல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், அந்த கிராமத்திலேயே ஒரு ஓரமாக தங்கினார். சில மணி நேரங்களுக்குப்பிறகு மழை குறைந்ததும் மீண்டும் கோவிலை நோக்கி பயணித்தார்.

    `நாம் செல்வதற்குள் உச்சிகால பூஜை முடிந்துவிடுமோ? ஈசனுக்கு வாழைக் கனியை கொடுக்க முடியாதோ?' என்ற கவலையோடு, `நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலை அடைந்தார். அவரைப் பார்த்ததும் கோவில் அர்ச்சகர்கள், "வாருங்கள் புலவரே.. இறைவனுக்கு கனியை கொடுத்து விட்டு எங்கே சென்றீர்கள்? உச்சிகால பூஜை தொடங்கப்போகிறது. வந்து சாமியை தரிசனம் செய்யுங்கள்" என்றனர்.

    அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புலவர், `சுவாமி என்ன சொல்கிறீர்கள்? நான் மழையால் பல மணி நேரம் ஓரிடத்தில் ஒதுங்கி நின்று விட்டு இப்போதுதான் ஆலயத்திற்கு வருகிறேன். வழக்கமாக நான் அளிக்கும் வாழைப்பழம் கூட என் கையில்தான் உள்ளது. ஆனால் ஏற்கனவே நான் வந்து பழம் தந்ததாக நீங்கள் சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.

    அர்ச்சகர்களும் ஆச்சரியப்பட்டுப் போயினர். வந்தது ஈசன்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். உடனே இறைவனின் மகிமையை எண்ணி, கண்ணீர் வடித்த புலவர், இறைவனை நினைத்து மனமுருகப் பாடினார். பின்னர் அவர் இதுபற்றி தன் ஊர் மக்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.

    அன்று இரவு புலவர் உறங்கியதும், அவரது கனவில் தோன்றிய ஈசன், "என்னைக் காண நீ தினம் தினம் பல சிரமங்களை சந்தித்து தில்லை வருகிறாய். இனி நீ அப்படி தில்லை வரவேண்டிய அவசியம் இல்லை. தில்லைவிடங்கனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் நான் இருக்கிறேன். என்னைக் கொண்டு வந்து இங்கே வைத்து வழிபாடு செய். உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்" என்றார்.

    மறுநாள் காலை இதுபற்றி ஊர் மக்களிடம் புலவர் தெரிவித்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. வழக்கம்போல அவரை எள்ளி நகையாடினர். இருப்பினும் மனம் தளராத அந்த புலவர், ஈசன் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். ஆனால் அந்த சிவலிங்கம் பெரியதாக இருந்ததால், எப்படி இங்கிருந்து தூக்கிச் செல்வது என்று தவித்தார்.

    அப்போது அருகில் மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு, அங்கு சென்றார். அங்கே சிலர் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சிவலிங்கத்தை, தன் ஊருக்கு கொண்டு செல்ல உதவும்படி கேட்டார். ஆனால் அவர்களோ, `அப்படிச் செய்தால் எங்களுக்கு ஒரு நாள் கூலி போய்விடும். அந்த கூலியை நீங்கள் தருவதாக சொன்னால், நாங்கள் சிவலிங்கத்தை எடுத்து வந்து உங்கள் ஊரில் கொடுக்கிறோம்" என்றனர்.

    அவரும் சரி என்று கூற, அவர்கள் சிவலிங்கத்தை தில்லைவிடங்கன் கிராமத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போதுதான் ஊர் மக்கள், புலவரை நம்பினர். ஊர் மக்கள் அனைவரும் புலவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க அவர்களைத் தேடியபோது, அவர்கள் அங்கே இல்லை. அந்த சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.

    முதல் வேலையாக அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அந்த ஊரிலேயே இருந்த ஒரு சிற்பி, அம்பாள் சிலை வடிக்கத் தொடங்கினார். அதையும் அதன் அருகிலேயே பிரதிஷ்டை செய்தனர். நாளடைவில் பல்வேறு சன்னிதிகளுடன் இந்த ஆலயம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது என்று இந்த ஆலயம் உருவான வரலாறு சொல்லப்படுகிறது.

     ஆலய அமைப்பு

    கிழக்கு பார்த்தபடி அமைந்த இந்த ஆலயம், மகா மண்டபத்தின் வெளியே நந்தி, பலிபீடம், இடதுபக்கம் நவக்கிரக சன்னிதியைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் மேலே சிவன்-பார்வதியும், அவர்களின் இருபுறமும் நந்தியும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி ஆலயத்திற்குள் நுழைந்தால், இடப்பக்கம் நால்வர் சன்னிதி, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர் - சிவகாம சுந்தரி சன்னிதிகளும், வலது பக்கம் ஒரே சன்னிதியில் சூரியன் - சந்திரன், பைரவர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் தெற்கு நோக்கி பர்வதாம்பாள் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். கருவறைக்குள் வட்டவடிவிலான பீடத்தில் விடங்கேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 9 மணிக்குள், அம்பாளின் திருப்பாதத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலர்கள் சமர்ப்பித்து மஞ்சள் கட்டிய திருமாங்கல்யக் கயிற்றை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிப்பார்கள். இதனால் திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள்.

    பொதுவாக கருவறைக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் திருமணத் தடை என்ற கூட்டுப் பிரார்த்தனைக்காக மட்டும், அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் திங்கட்கிழமை தோறும் காலையில் இவ்வாலயம் வந்து, அப்போது இறைவனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு, அபிஷேக தீர்த்தத்தை வாங்கி பருகினால், பேச்சுக் குறைபாடு நீங்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதியராக இங்கே வந்து மகா மண்டபத்தில் அமர்ந்து `ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை பூஜை, பிரதோஷம் ஆகிய தினங்களும் சிறப்பாக வழிபடப்படும்.

    அமைவிடம்

    சிதம்பரத்தில் இருந்து கிள்ளை செல்லும் பேருந்தில் சென்றால் தில்லைவிடங்கன் கிராமத்தை அடையலாம்.

    • சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி சோழராஜா கோவில்.

    ஆன்மிக பூமியான இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய தலமாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடைபெறும் 'சிவாலய ஓட்டம்' மிகவும் பிரசித்தி பெற்றது. முக்கடல் சங்கமிக்கும் இங்கு சிவபெருமானுக்கு என பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன.

    அற்புதங்கள் நிறைந்த கோவில்

    அந்த வகையில் பல்வேறு அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி உடனுறை சோழராஜா கோவில். இந்த கோவில் 'சோழராஜா கோவில்' என்று அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர் அமைத்த சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

    தற்போது உள்ள நாகர்கோவில் முன்பு கோட்டார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப்பகுதிகள் மாறிவிட்டன. ஆகவே நாகர்கோவிலின் நுழைவு வாசலாக ஒழுகினசேரி திகழ்கிறது. 'உலக முழுதுடையான் சேரி்' என்ற பெயரே காலப்போக்கில் மருவி 'ஒழுகினசேரி' என்று மாறியதாக கூறப்படுகிறது.

    இங்கு 'அரவ நீள்சடையான்' என்ற பெயரில் மகா தேவரான சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பூம்குழலி என்ற பெயரில் கோலவார் குழலாள் ஈஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

     தஞ்சை பெரியகோவிலின் கட்டமைப்பு

    கி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது, இந்த சோழ ராஜா கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை மாதிரியாகக் கொண்டு இந்த ஆலயத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே இதை குமரி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் என்றும் கூறுகிறார்கள். இங்கு மூலவர் லிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    ராஜேந்திர சோழீஸ்வரன், சேர நாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் வந்து நாகர்கோவிலில் தங்கி உள்ளார்.

    அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரனால் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு மூலவரான அரவ நீள்சடையான் சன்னிதி, உயரமான மேடை போல் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் படி ஏறி தான் சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜா கோவில்' என்ற பெயரில் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சோழ ராஜா கோவிலுக்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி, உரிய காலத்தில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டால், குழந்தை தோஷங்கள் நீங்கி, புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் சோதனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இக்கோவில் கல்வெட்டுகளில் அரவநீள்சடையான் என்று உள்ளதாகவும், மேலும் சோழீஸ்வரமுடையர், ராஜேந்திர சோழீஸ்வர முடைய நயினார், பெரிய நயினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜா கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன.

    தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான விமானமும், நான்கு பக்க கற்சுவர்களின் மேற்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன. சோழர்கள் காலத்திற்கு பிறகு பாண்டிய மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் இந்த கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    18 அடி உயரமுள்ள சிவலிங்கம் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் லிங்க வடிவான சிவபெருமானின் மொத்த உயரம் 18 அடி ஆகும். விட்டம் 16 அடி. இதில் 3½  அடி உயரத்திலும், நிலத்தின் அடியில் மீதிமுள்ள 14½ அடி மண்ணில் புதைந்த நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப் பார்த்து அருள்பாலித்து வருகிறார். தூய மனதுடன் பக்தி பரவசத்துடன் கருவறையில் இருக்கும் அரவ நீள்சடையானை 'ஓம் நமசிவாய' என்று இருகரம் கூப்பி வணங்குபவர்கள் சிவபெருமானையே நேரில் பார்ப்பது போல் உணர்வதாக கூறுகின்றனர்.

    பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இங்கு வந்து முறையிட்டால் உடனே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வு அதிர்வலைகளை உணரமுடியும் என்றும் கூறுகிறார்கள். கோவிலின் சுற்றுப் பகுதியின் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் ஆறுமுக நயினாரும், கிழக்கு பார்த்து தனித்தனி சன்னிதிகளில் அமர்ந்து அருள்புரிந்து வருகின்றனர். இரு சன்னிதிகளுக்கு இடையே நாகராஜரும் அருள்தருகிறார்.

    மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் ஐயப்பன் சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. இந்த கோவிலில் 2 பிரகாரம் உள்ளது. 2 பிரகாரம் கோவிலின் நந்தவனம் ஆகும்.

    சிவனை ஓரக்கண்ணால் பார்க்கும் அம்பாள் இத்திருத்தலத்தில் அம்பாள், கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயரில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களில் அம்பாள் எப்போதும் பக்தர்களை நேரில் பார்த்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அம்மன், தனது முகத்தை சற்று இடதுபுறமாக சாய்த்து, சிவனை ஓரக்கண்ணால் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருப்பது ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

    அம்பாள் சன்னிதிக்கு மேல்பக்கம் ஒரு கிணறு உள்ளது. முன்பெல்லாம் கோவில்களின் விக்கிரங்களை தூய்மைப் படுத்துவதற்கும், அபிஷேகத்திற்கும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுப்பார்கள். காலப்போக்கில் அவை மாறிவிட்டன.

    தல விருட்சம் வில்வம்

    இக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். இந்த விருட்சம் அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறது. கொன்றை மரம் பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்பு கொண்டது. ஆனால் இங்குள்ள கொன்றை மரம் வருடத்தில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவு வாசலுக்கு வடக்கு பக்கம் நவக்கிரக சன்னிதியும், பைரவர் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் சோழர்களின் பண்பாட்டை பற்றி தெரிந்துகொள்ள இந்த கோவில் உதவுகிறது. அதிலும் குறிப்பாக 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 சோழர் கால கல்வெட்டுகள், அவர்கள் நிர்வாகத்தினையும் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கி.பி.17-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

    குமரி மாவட்டம் வரும் ஆன்மிக பக்தர்கள் நிச்சயம் சோழராஜா கோவிலுக்கு வந்து வணங்கினால் ஈசன், அம்பாளின் முழு அருளை பெற முடியும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

    வருஷாபிஷேகம்

    இந்த கோவிலில் கொடிமரம் மற்றும் பலிபீடம் இல்லை. கோவில் நுழை வாசலில் அழகிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பின்னர் வருடம் தோறும் வரு ஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான வருஷாபிஷேகம் விரைவில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருஷாபிஷேகம் அன்று சாமிக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    பூஜைகள்

    இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மாதம் ஒரு முறை சங்கடஹர சதுர்த்தி பூஜை விநாயகருக்கு நடை பெறும் முக்கிய பூஜைகள் ஆகும். ஐயப்ப சாமிக்கு பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மண்டல பூஜை நடைபெறும். தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அர்ச்சனை வழிபாடும், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரம் மற்றும் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் நாகர் தேவதை பூஜையும் நடக்கிறது.

    மேலும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி மற்றும் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிறு தோறும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடை பெறுகிறது. அம்பாளுக்கு மாதந்தோறும் பவுர் ணமி மற்றும் நவராத்திரி பூஜை, ஆடி செவ்வாய் வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் அர்ச்சனை செய்யப்படுகிறது.

    மூலவருக்கு மாதம் வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், புஷ் பாஞ்சலி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    குறிப்பாக மகா சிவராத்திரி வழிபாடு கோவிலில் சிறப்பாக நடத்தப்படும். அன்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். கோவில் நடை காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு 10.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு மொத்தம் 7 பிரகாரங்கள் இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகை உள்ளிட்ட பல்வேறு படையெடுப்பு காரணமாக 2 பிரகாரங்கள் மட்டுமே தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

    • சிவாயநம என்று சொல்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை.
    • எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள்தான் சித்தர்கள்.

    சிவாயநம என்று சொல்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பது ஆன்மிக சித்தாந்தம். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள்தான் சித்தர்கள். அவர்களின் வழி வந்தவர்தான் கடுவெளி சித்தர். அவர் தங்கியிருந்த இரும்பை என்ற ஊரில் உள்ளது மாகாளீஸ்வரர் திருக்கோவில்.

     தல வரலாறு

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். சோழ மன்னர்கள் காலத்தில் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தல இறைவனான சிவபெருமான், சிவலிங்க வடிவத்தில் மாகாளீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மகாகாளர் என்கிற முனிவர் இக்கோவிலின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். எனவே அவரின் பெயராலேயே 'மகாகாளேஸ்வரர்' என்றும், '`மாகாளீஸ்வரர்' என்றும் பெயர் பெற்று விளங்குகிறார். இவரது உற்சவர் திருநாமம், சந்திரசேகரன் என்பதாகும்.

    இவ்வாலய நாயகி, குயில் மொழி நாயகி என்று அழைக்கப்படுகிறார். சுந்தர நாயகி என்ற பெயரும் உண்டு. மதுரை புராண காலத்தில் இந்த ஊர், 'திரு இரும்பை மாகாளம்' என அழைக்கப்பட்டது. இரும்பன், இரும்பாறை ஆகிய இரண்டு அசுரர்களை காளி அவதாரம் எடுத்து, பார்வதி தேவி வதம் செய்தாள். இதனால் அன்னைக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் விலக அன்னை இத்திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். இதையடுத்து அன்னையின் தோஷம் நீங்கியதாக சொல்லப்படுகிறது.

    முற்காலத்தில் இவ்வூரில் கடுவெளி சித்தர் தங்கியிருந்தார். அந்த காலத்தில் அவ்வூரில் மழையே பெய்ய வில்லை. முனிவரின் கடுமையான தவத்தின் காரணமாகத்தான் மழை பெய்யவில்லை என்று எண்ணிய அப்பகுதி மக்கள், ஒரு நடன மங்கையை அழைத்து வந்து, முனிவரின் தவத்தைக் கலைத்தனர். சலங்கை ஒலியும், இசை சப்தமும் முனிவரின் தவத்தைக் கலைத்தது. தன் தவம் கலைந்ததால் கடுவெளி சித்தர் பெரும் கோபத்துடன் மக்களைப் பார்த்தார்.

    இதனால் பயந்துபோன மக்கள், உங்களின் தவத்தால் தான் ஊரில் மழைப்பொழிவு இல்லை என்று எண்ணியதாலும், ஊரில் மழை பெய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும்தான் இவ்வாறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இதனால் மனம் இரங்கிய கடுவெளி சித்தர், அந்த ஊரில் சிவ தொண்டு செய்தார். அதன் பயனாக அந்த ஊரில் நல்ல மழை பெய்து, பஞ்சம் நீங்கியது.

    ஒரு முறை உரில் சிவன் பெருவிழா நடந்தது. இறைவனை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அந்த ஊர்வலத்தின் முன்பாக நாட்டியப் பெண் ஒருவர், நடன மாடியபடி சென்றார். அப்போது அவளது ஒரு கால் சிலம்பு ஒன்று கழன்று விழுந்தது. கடுவெளி சித்தர் அந்த சிலம்பை எடுத்து அந்தப் பெண்ணின் காலில் மாட்டிவிட்டார். இதைக்கண்ட மக்கள், முனிவரை தவறாக பேசினர்.

    இதனால் கடும் கோபமும், வேதனையும் அடைந்த கடுவெளி சித்தர், சிவபெருமானின் மீது ஒரு பதிகம் பாடினார். அப்போது இந்த ஆலயத்தின் சிவலிங்கம் மூன்றாக வெடித்து சிதறியது. இதைக்கண்டு மக்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். பின்னர் மன்னரும், மக்களும் கடுவெளி சித்தரை வேண்டிக்கொள்ள, அவர் சினம் நீங்கி மீண்டும் ஒரு பதிகம் பாடினார். இதையடுத்து மீண்டும் சிவலிங்கம் ஒன்றிணைந்தது.

    கோவிலின் சிறப்புகள்

    இங்கு அரசமரத்திற்கு இடையில் அமர்ந்து கடுவெளி சித்தர் செய்த தவத்தை, அந்த மரத்தின் கிளையில் குயில் வடிவில் இருந்து அம்பாள் கவனித்து வந்ததாகவும், அந்த தவம் பற்றி அவர் சிவபெருமானிடம் கூறியதால் அன்னைக்கு குயில்மொழி நாயகி' என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சன்னிதியில் மகாலட்சுமி கோலத்தில் காட்சி தருகிறார்.

    கோவிலின் மேற்கு பிரகாரத்தில் மேற்கு திசை பார்த்தபடி சந்திரன் காட்சி தருகிறார். இவருக்கு பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள், கல்வி கலைகளில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து 'உஷா, பிரதியுஷா' ஆகிய இரு மனைவியரும் தனது மடி மீது அமர்த்தி இருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோவில் காணப்படுகிறது.

    பேச்சு குறைபாடு உள்ளவர்கள், இசைக் கலையை பயில்பவர்கள், இசைக் கலைஞர்கள், அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் மற்றும் இசைத்திறன் மேம்படுவதாக பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

    ஆயுள் விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும் விருப் பங்களும் நிறைவேறும்.

    அமைவிடம்

    தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரும்பை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயம். இவ்வூருக்கு விழுப்புரத்தில் இருந்தும் புதுவை மாநிலத்தில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளன.

    • தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
    • சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிதம்பரம்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

    விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

    ×