search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏகாதசி விரதம்
    X
    ஏகாதசி விரதம்

    பாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது ஏகாதசி விரதம்.
    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

    அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர். நாளை வரும் சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ‘பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

    இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்து கொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார்.

    ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால்,  மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, “தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி” என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், “நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ” என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய  மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், “இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே” என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, “உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக...” என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், “சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்” என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம். ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு ‘பாரணை’ என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.
    Next Story
    ×