search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    இறைவன் ஏற்றுக்கொள்ளும் பிரார்த்தனை...

    இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதற்காக அல்ல! தமது நீதியை அவரிடம் நிலைநாட்ட விரும்புகிறான் என்பதற்கே!
    “நபி (ஸல்) அவர்கள், முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை ஏமன் தேச ஆளுநராக நியமித்து, வழியனுப்பும் போது, ‘முஆதே! அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில், அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    உலக ஆளுநர்களுக்கு உத்தம நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய உபதேசத்தை, ஓர் அழகிய அறிவுரையை, ஓர் அழகிய செய்தியை ஆளுநர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் வழியாக வழங்கியுள்ளார்கள்.

    ஆளுநர் என்பவர் நாட்டின் நீதி, நிர்வாகத்தை கவனிப்பவர். மேலும், அவர் மக்கள் பணியில் ஈடுபடுபவர். குடிமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். அவரால் குடிமக்களுக்கு எந்தப் பிரச்சினையும், எந்தவித அநீதியும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதினால் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓர் அறிக்கையை நபி (ஸல்) சமர்ப்பித்துள்ளார்கள்.

    மக்களுடன் கலந்து வாழ்வோர், மக்களின் மீது படைபலம், பணபலம், உடல்பலம் மூலம் ஆதிக்கம் செலுத்துவோர், மக்கள் பணியில் ஈடுபடக்கூடிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், நீதியரசர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாவரும் மக்களின் மனம் கவர்ந்த நீதிவான்களாக செயலாற்ற வேண்டும். மக்கள் புண்படும் அளவுக்கு அநீதியாக நடக்கலாகாது. ஒருவேளை அநீதியாக நடந்தால், அநீதி இழைக்கப்பட்டோரின் சாபம் அவர்களை சும்மாவிடாது, துரத்திக் கொண்டே இருக்கும்.

    ‘மூவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 1) பெற்றோரின் துஆ, 2) பயணியின் துஆ, 3) அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    மற்றொரு நபிமொழியில், “மூவரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாது. 1) நீதியான ஆட்சியாளர், 2) நோன்பாளி அவர் நோன்பு திறக்கும் நேரம், 3) அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையாகும். இந்த பிரார்த்தனை மேகங்களுக்கு அப்பால் உயர்த்தப்படுகிறது; இதற்காக வானங்களின் கதவுகள் திறக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த இறைவன் கூறுவான்: ‘உனக்கு நான் நிச்சயம் உதவி செய்வேன்; அது எவ்வளவு காலம் இருந்தாலும் சரியே!’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

    அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை கண்டு கொண்டு, அதை மேகங்களுக்கு அப்பால் சுமந்து கொண்டு, வானத்தை நோக்கி ஏற்றிக்கொண்டு செல்வதற்கென சில வானவர்களை இறைவன் நியமித்துள்ளான். அந்த பிரார்த்தனையை அனைத்து வானவர்களும் கண்டு கொள்கின்றனர். இதனால் அவர்களின் சிபாரிசும், இறைவனின் கிருபையும், உதவியும் அநீதி இழைக்கப்பட்டவனுக்கு கிடைத்து விடுவதுடன் அவனது பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.

    “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! அது நெருப்பின் ஜூவாலையைப் போன்று வானத்தை நோக்கி மேலே செல்கிறது என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஹாகிம்)

    “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள்! அவன் பாவியாக இருந்தாலும் சரியே! மேலும், அவர் இறைமறுப்பாளராக இருந்தாலும் சரியே! ஏனெனில் அதற்கு திரையேதுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

    அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்குக் காரணம் அவனுக்கு இறைவனின் உதவி கிடைக்கும் என இறைவனின் வாக்குறுதியும், அவர் விஷயத்தில் இறைவன் தமது பொறுப்பை ஏற்கிறான் எனும் பெருந்தன்மைதான். மேலும், தமக்கு பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கு பதிலடி கொடுக்க இயலாத காரணமாக அவனுக்கு பதிலடியாக இவர் இறைவனிடம் இறைஞ்சும்போது உடனே இறைவன் இவருக்கு துணையாக இருந்து, இவரின் பிரார்த்தனையை உடனடியாக ஏற்கிறான்.

    இறைவன் இறைநம்பிக்கையாளரை நேசிக்கின்றான். ஆனால், நீதி என்று வரும்போது அவனின் நீதி நல்லவரையும், தீயவரையும், இறைவிசுவாசியையும், இறைமறுப்பாளரையும் அரவணைத்துக் கொள்கிறது. இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதற்காக அல்ல! தமது நீதியை அவரிடம் நிலைநாட்ட விரும்புகிறான் என்பதற்கே!

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×