
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும் பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். நேற்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை இருந்தது.
குறிப்பாக கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பழனி கிரிவீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அவர்கள் பாதவிநாயகர் கோவில் முன்பு தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி சென்றனர்.
தொடர்ந்து 3 நாள் விதிக்கப்பட்ட தரிசன தடை நேற்றுடன் முடிந்ததால், இன்று (திங்கட்கிழமை) பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அடிவார பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதற்கிடையே நேற்று முழுஊரடங்கு என்பதால் பழனி பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பரபரப்பாக காணப்படும் பழனி பஸ் நிலையம், அடிவாரம் ரோடு, திண்டுக்கல் ரோடு, ஆர்.எப்.ரோடு, தாராபுரம் ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.