
அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார்.
ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார். தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார். அப்போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் அறிவொளிப்பூங்கா அருகே வரும் போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார்.
இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.